10 – ஞானஸ்நானம்

இவை சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள்.
மனிதர்களின் வார்த்தைகளில் நமக்கு அக்கறை இல்லை.
கடவுளை நேசிக்கும் எவருக்கும்... இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: ஞானஸ்நானம்.

முதல் 3 மிக முக்கியமான வசனங்கள்

இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன். சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும்.

பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள்.

யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள். ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.

நியமன வரிசையில் ஒவ்வொரு வசனமும் - 61 பத்திகள்

பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

ஆகையால் நீங்கள் இனி நீங்கள் பிடிவாதம் செய்யாமல், உங்கள் இருதயத்தை சுத்தம் செய்யுங்கள்.

என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என்னுடைய பாவம்போக என்னைச் சுத்திகரியும்.

நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் செயல்களின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்வதைவிட்டு ஓயுங்கள்;

எருசலேமே, நீ காப்பாற்றப்படுவதற்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பு நீங்கக் கழுவு; எதுவரை அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்தில் தங்கும்.

அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான தண்ணீர் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். உங்களுக்கு புதிய இருதயத்தைக் கொடுத்து, உங்களுடைய உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் உடலிலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்களுடைய உள்ளத்திலே என்னுடைய ஆவியை வைத்து, உங்களை என்னுடைய கட்டளைகளில் நடக்கவும் என்னுடைய நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்செய்வேன்.

அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.

இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும். மனந்திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின்பு வருகிறவரோ என்னைவிட வல்லவராக இருக்கிறார், அவருடைய காலணிகளைச் சுமக்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இதற்கு சம்மதி, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு சம்மதித்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறின உடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவியானவர் புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன் என்று உரைத்தது.

இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? யாரால் உண்டானது? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; மனிதர்களால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், மக்களுக்குப் பயப்படுகிறோம், எல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து, இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்வதில்லை என்றார்.

ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான். அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை. நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.

அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார். அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.

இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள், அப்பொழுது நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டானதா அல்லது மனிதர்களால் உண்டானாதா என்று எனக்கு பதில் சொல்லுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டானது என்று சொன்னால், பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார். எல்லோரும் யோவானை உண்மையான தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள். எனவே மக்களுக்குப் பயப்பட்டதினால், மனிதர்களால் உண்டானது என்று சொல்லமுடியாமல், தங்களுக்குள் ஆலோசனைபண்ணி; இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.

பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள். விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசிக்காதவனோ தண்டனைக்குள்ளாவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என்னவென்றால்: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளைப் பேசுவார்கள்;

அப்பொழுது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும்,

அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான்.

வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள்.

யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.

மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது; பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.

யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள். ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.

பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி, இவர்மேல் இருக்கிறதைப் பார்த்தேன். நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் இருப்பதை நீ பார்ப்பாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அதன்படியே நான் பார்த்து, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்து வருகிறேன் என்றான்.

இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன். சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்;

இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார். சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.

அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது. அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.

யோவானைவிட இயேசு அநேகம்பேரைச் சீடர்களாக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டதை இயேசு அறிந்தபோது, யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவிற்குப் போனார். இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, அவருடைய சீடர்கள் கொடுத்தார்கள்.

நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.

அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்திருந்தார்கள். அப்பொழுது பலத்தக் காற்று அடிக்கிறதுபோல, வானத்திலிருந்து திடீரென ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் நெருப்புமயமான நாக்குகள்போல பிரிந்திருக்கும் நாக்குகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள்.

பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள்.

அவனுடைய வார்த்தைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலர்களுடைய போதனைகளிலும், ஐக்கியத்திலும், அப்பம் புசித்தலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாகத் தரித்திருந்தார்கள். எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது.

தேவனுடைய இராஜ்யத்திற்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்திற்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு போதித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, ஆண்களும் பெண்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைச் சேர்ந்துகொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் பார்த்து பிரமித்தான்.

சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமட்டும் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்செய்து, அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள்.

இவ்விதமாக அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போது, தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன” என்றான். அதற்குப் பிலிப்பு: “நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லை” என்றான். அப்பொழுது அவன்: “இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன்” என்று சொல்லி; இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்புவும் மந்திரியும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். அவர்கள் தண்ணீரைவிட்டுக் கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அதற்குப்பின்பு அவனைக் காணாமல், சந்தோஷத்தோடு தன் வழியே போனான். பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அந்த இடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவிற்கு வருகிறவரையில் அனைத்து பட்டணங்களிலும் நற்செய்தியைப் போதித்துக்கொண்டுவந்தான்.

உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.

அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற இவர்களும் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாதபடி இவர்களைத் தடைசெய்யலாமா? என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாட்கள் அங்கே தங்கும்படி அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.

யோவான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைத்துப்பார்த்தேன். எனவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை கொடுத்ததுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே கொடுத்திருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் யார்? என்றான். இவைகளை அவர்கள் கேட்டபொழுது உட்கார்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் யூதரல்லாதவர்களுக்கும் கொடுத்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

அவனுடைய வம்சத்திலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார். இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனம்திரும்புவதற்கான ஞானஸ்நானத்தைப்பற்றி யோவான் இஸ்ரவேலர் எல்லோருக்கும் போதித்தான்.

அப்பொழுது தியத்தீரா ஊரைச்சேர்ந்த விலையுயர்ந்த சிவப்பு கம்பளம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொன்னவைகளைக் கவனிப்பதற்காக கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தார். அவளும் அவள் குடும்பத்தில் உள்ளவர்களும் ஞானஸ்நானம் பெற்றப்பின்பு, அவள் எங்களைப் பார்த்து: நான் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று நீங்கள் நினைத்தால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாள்.

அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். மேலும் அந்த இராத்திரி நேரத்திலே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனோடுகூட இருந்தவர்களும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் குடும்பமாக கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.

நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவியானவர் உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாக இருக்கவேண்டும் என்று மக்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபொழுது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கரங்களை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் பிறமொழிகளைப் பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

இப்பொழுது நீ தாமதிக்கிறது என்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் பணிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.

கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம். ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.

அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.

மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.

உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாக இருந்தீர்கள்; ஆனாலும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவ ஆவியானவராலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

நாம் யூதர்களானாலும், கிரேக்கர்களானாலும், அடிமைகளானாலும், சுயாதீனர்களானாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டு, எல்லோரும் ஒரே ஆவியானவருக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம்.

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால் புதுப்படைப்பாக இருக்கிறான்; பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது, எல்லாம் புதிதானது.

நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும் விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்களே. ஏனென்றால், உங்களில் கிறிஸ்துவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்களே.

அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

அக்கிரமங்களில் மரித்தவர்களாக இருந்த நம்மைக் கிறிஸ்துவோடு உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்; கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,

உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறையேதும்இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்திற்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள். ஞானஸ்நானத்திலே அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடுகூட உயிரோடு எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

ஆகவே, கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசவசனங்களை நாம்விட்டுவிட்டு, செத்த செய்கைகளைவிட்டு மனம்திரும்புதல், தேவன்மேல் வைக்கும் விசுவாசம், ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம்.

ஆகவே, சகோதரர்களே, நாம் பரிசுத்த இடத்தில் நுழைவதற்கு இயேசுவானவர் தமது சரீரமாகிய திரையின்வழியாகப் புதியதும் ஜீவனுமான வழியை நமக்கு உண்டுபண்ணினதினால், அந்தவழியாக நுழைவதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறதினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான பிரதான ஆசாரியர்கள் ஒருவர் நமக்கு இருக்கிறதினாலும், தீயமனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் உள்ளவர்களாகவும், சுத்த தண்ணீரினால் கழுவப்பட்ட சரீரம் உள்ளவர்களாகவும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்; அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே.

அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, சரீர அழுக்கை நீக்குவதாக இல்லாமல், தேவனைப் பற்றிக்கொள்ளும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;

ஜீவமரத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

Tamil - தமிழ் - TA

TAMIRV'19 - Tamil Indian Revised Version - 2019

This Bible text is from Tamil Indian Revised Version IRV 2019
https://open.bible/bibles/tamil-bridge-text-bible/
provided by: Bridge Connectivity Solutions Pvt Ltd, available by Creative Commons CC-BY-SA-4.0,
and this new compilation is shared as www.creativecommons.org/licenses/by-sa/4.0.
Languages are made available to you by www.ipedge.net