07 – நியாயத்தீர்ப்பு நாள்

இவை சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள்.
மனிதர்களின் வார்த்தைகளில் நமக்கு அக்கறை இல்லை.
கடவுளை நேசிக்கும் எவருக்கும்... இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: நியாயத்தீர்ப்பு நாள்.

முதல் 3 மிக முக்கியமான வசனங்கள்

பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்; அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்பதைப் பார்த்தேன்; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுத்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் செய்கைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

நியமன வரிசையில் ஒவ்வொரு வசனமும் - 177 பத்திகள்

ஆபிராம் 99 வயதானபோது, யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாக இரு.

துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதல்ல; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாக நடத்துவது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாமல் இருப்பாரோ” என்றான்.

உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ உத்தமனாயிருப்பாயாக.

அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து, பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.

அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாகக் காட்டுமரங்களும் முழக்கமிடும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.

என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார்.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது. காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது, நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே. பட்டயத்திற்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று, கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும்” என்றான்.

துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்; அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான்.

சரியான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.

துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.

யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார். அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார்.

துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.

உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து, என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.

துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, அவன்மேல் பல்லைக் கடிக்கிறான். ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.

ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா)

அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும். என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?

ஜீவபுத்தகத்திலிருந்து அவர்கள் பெயர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பெயரோடே அவர்கள் பெயர் எழுதப்படாதிருப்பதாக.

உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய்.

அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியோடும், மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; உலகத்தை நீதியோடும் மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது; என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புத்தகத்தில் எழுதியிருந்தது.

யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார்.

கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.

எல்லா எண்ணங்களையும் எல்லா செயல்களையும் நியாயந்தீர்க்கும்காலம் இனி இருக்கிறபடியால் நீதிமானையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.

விலையுயர்ந்த நறுமண தைலத்தைவிட நற்புகழும், ஒருவனுடைய பிறந்தநாளைவிட இறந்த நாளும் நல்லது.

காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், மறைவான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

அவர்கள் அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளாடி அலைவார்கள்.

பாவத்தின் காரணமாக உலகத்தையும், அக்கிரமத்தின் காரணமாக துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியச்செய்து, கொடியரின் கொடுமையைத் தாழ்த்துவேன்.

அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது மக்களின் அவப்பெயரை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; யெகோவாவே இதைச் சொன்னார்.

இறந்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களுடன் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பயிர்களின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; இறந்தவர்களைப் பூமி புறப்படச்செய்யும்.

உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் அவமானம் காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன். எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய யெகோவா என்பது.

யெகோவாவுடைய அநுக்கிரக வருடத்தையும், நம்முடைய தேவன் நீதியைநிலைப்படுத்தும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல்செய்யவும்,

இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் பெயரும் நிற்குமென்று யெகோவா சொல்கிறார். அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான அனைவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று யெகோவா சொல்கிறார். அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாகப் பாதகம்செய்த மனிதர்களுடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய நெருப்பு அணையாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான அனைவருக்கும் அருவருப்பாயிருப்பார்கள்.

இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்.

நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சிங்காசனங்கள் வைக்கப்பட்டன; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய உடை உறைந்த மழையைப்போலவும், அவருடைய தலைமுடி வெண்மையாகவும், பஞ்சைப்போல தூய்மையாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் நெருப்புத் தழலும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடானகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புத்தகங்கள் திறக்கப்பட்டது.

ஆனாலும் உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்கள் அரசாட்சியைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் ராஜ்ஜியத்தைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் என்றான்.

நீண்ட ஆயுசுள்ளவராகிய தேவன் வரும்வரைக்கும், நியாயவிசாரிப்பு, உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்ஜியத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும் காலம் வரும்வரைக்கும், இந்தக் கொம்பு பரிசுத்தவான்களுடன் போரிட்டு, அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.

உன்னதமான தேவனுக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும். காலங்களும், அரைக்காலமும் செல்லும்வரை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுவரை அவனை முற்றிலும் அழிக்கும்படியாக அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள். வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்ஜியங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்களாகிய மக்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்ஜியம் நித்திய ராஜ்ஜியம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.

உன் மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். எந்தவொரு தேசத்தார்களும் தோன்றினதுமுதல் அக்காலம்வரை உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புத்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் மக்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பூமியின் தூளிலே இறந்தவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலம்வரை இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக மறைத்துவைத்து, இந்தப் புத்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போகும் என்றான்.

நீயோவென்றால் முடிவுவரும்வரை போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உனக்குரிய பங்கைப்பெற எழுந்திருப்பாய் என்றான்.

எல்லா தேசங்களுக்கும் விரோதமான நாளாகிய யெகோவாவுடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.

பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?

இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.

தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.

உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும்.

ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும். நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட, சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.

நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.

அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது. அது நிறைந்தபோது, மீனவர்கள் அதைக் கரைக்கு இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துவிடுவார்கள். இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.

எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும்.

மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்? மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள்.

விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து: நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.

சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்?

இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை; அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார்.

ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார்.

யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.

எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், திருட்டும், பொருளாசைகளும், துஷ்டகுணங்களும், கபடும், காமமும், வன்கண்ணும், அவதூறும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.

என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும். உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.

விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசிக்காதவனோ தண்டனைக்குள்ளாவான்.

தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.

வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. ஆதலால், நீங்கள் இருளில் பேசியது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் வீட்டின் உள் அறைகளில் காதில் சொன்னது எதுவோ, அது வீட்டின் கூரையின்மேலிருந்து சத்தம்போட்டதுபோல இருக்கும். என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்குப் பயப்படாமலிருங்கள். நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள்.

அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.

நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார்.

அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான். மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான். ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது. தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கிறதுபோல, குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனிதகுமாரனாக இருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால், கல்லறைகளில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்; அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் தண்டனையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார்.

என்னை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

இயேசு மறுபடியும் அவர்களைப் பார்த்து: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள்; நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்றார்.

அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

இப்பொழுதே இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எரியப்பட்ட கொடியைப்போல அவன் எரியப்பட்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.

அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியென்று மக்களுக்குப் போதிக்கவும், சாட்சியாக அறிவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.

மக்களின் அறியாமையின் நாட்களை தேவன் பார்க்காதவர்போல இருந்தார்; இப்பொழுது மனம் மாறவேண்டும் என்று எல்லா மனிதர்களுக்கும் கட்டளையிடுகிறார். ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அந்த நாளிலே அவர் தாம் நியமித்த மனிதனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாக நியாயந்தீர்ப்பார்; அந்த மனிதனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லோருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைக்குறித்து பவுல் சொல்வதை அவர்கள் கேட்டபோது, சிலர் கேலிசெய்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை வேறொரு நாளில் கேட்போம் என்றார்கள்.

நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். இதனால் நான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.

தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்கள் எல்லாவிதமான அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாக, கோள் சொல்லுகிறவர்களுமாக, அவதூறு பண்ணுகிறவர்களுமாக, தேவனைப் பகைக்கிறவர்களுமாக, மூர்க்கர்களுமாக, அகந்தை உள்ளவர்களுமாக, வீம்புக்காரர்களுமாக, பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக, உணர்வு இல்லாதவர்களுமாக, உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாக, சுபாவ அன்பு இல்லாதவர்களுமாக, இணங்காதவர்களுமாக, இரக்கம் இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள்.

ஆகவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயும் செய்கிறதினால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைநீயே குற்றவாளியாக்குகிறாய். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ? அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார். சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும். முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும். முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும். தேவனிடம் பட்சபாதம் இல்லை.

எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமான்களாவதில்லை, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். அன்றியும் நியாயப்பிரமாணம் இல்லாத யூதரல்லாதோர் சுபாவமாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணம் இல்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாக இருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும், சாட்சியிடுகிறதினாலும், குற்றம் உண்டு குற்றம் இல்லை என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு தகுந்த செயல்கள் தங்களுடைய இருதயங்களில் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்கள். என்னுடைய நற்செய்தியின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனிதர்களுடைய இரகசியங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

மேலும், வாய்கள் எல்லாம் அடைக்கப்படுவதற்கும், உலகத்தார் எல்லோரும் தேவனுடைய தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளானவர்களாவதற்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறது என்று தெரிந்திருக்கிறோம்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம். ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை. ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.

பிரியமானவர்களே, “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால், நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள்.

இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளி என்று தீர்க்கிறது என்ன? நீ உன் சகோதரனை அற்பமாக நினைக்கிறது என்ன? நாமெல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. அப்படியே: “முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும், நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன்” என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. எனவே, நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இறுதிவரைக்கும் அவர் உங்களை உறுதிப்படுத்துவார்.

போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறு அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் முடியாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக்கொண்டு கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளிப்படும்; நியாயத்தீர்ப்பு நாளானது அதை வெளிப்படுத்தும். ஏனென்றால், அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளது என்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினதுபோல இருக்கும்.

ஆதலால், கர்த்தர் வரும்வரைக்கும் நீங்கள் காலத்திற்குமுன்னே எதைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளிப்படையாக்கி, இருதயங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

அநியாயக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாற்றப்படாமலிருங்கள்; வேசிமார்க்கத்தார்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், விபசாரக்காரர்களும், சுயபுணர்ச்சிக்காரர்களும், ஆண்புணர்ச்சிக்காரர்களும், திருடர்களும், பொருளாசைக்காரர்களும், வெறியர்களும், உதாசினக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாக இருந்தீர்கள்; ஆனாலும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவ ஆவியானவராலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம்.

கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார். மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது. ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் எல்லாத் துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அழித்து, தேவனும் பிதாவுமாக இருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும். அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம். எல்லாவற்றையும் அவருடைய காலுக்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆனாலும் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, அனைத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது வெளியரங்கமாக இருக்கிறது. அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்; மதிப்பில்லாததாக விதைக்கப்படும், மகிமையுள்ளதாக எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாக விதைக்கப்படும், பலமுள்ளதாக எழுந்திருக்கும். சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு. அந்தப்படியே முந்தின மனிதனாகிய ஆதாம் ஜீவ ஆத்துமாவானான் என்று எழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானவர். ஆனாலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, சாதாரண சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனிதன் பூமியிலிருந்து உண்டான மண்ணானவன்; இரண்டாம் மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்திற்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்திற்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்.

சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லோரும் மரணமடைவதில்லை; ஆனாலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிடத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லோரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தகுந்த பலனைப் பெற்றுக்கொள்வதற்காக, நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும். எனவே, கர்த்தருக்குப் பயப்படவேண்டும் என்று அறிந்து, மனிதர்களுக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்குமுன்பாக வெளிப்படையாக இருக்கிறோம்; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாக இருக்கிறோம் என்று நம்புகிறேன்.

ஆனாலும் நான் வந்து, உங்களை என் மனவிருப்பத்தின்படி இருக்கிறவர்களாகப் பார்க்காமலும், நானும் உங்களுடைய மனவிருப்பத்தின்படி இருக்கிறவனாகப் பார்க்கப்படாமல் இருப்பேனோ என்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்றும்; மீண்டும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடம் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன்பு பாவம் செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் செய்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும்விட்டு மனம்திரும்பாமல் இருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாக இருக்குமோ என்றும் பயந்திருக்கிறேன்.

சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என்று முன்னமே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான்.

தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது. அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது. விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்;

இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்றும் நினைக்கிறேன்.

நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்வதற்கு தம்முடைய வல்லமையான செயலின்படி, நம்முடைய அற்பமான சரீரத்தை அவருடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம். குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.

ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள். இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும். நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,

அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.

இவ்விதமாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடும்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி உங்களுடைய இருதயங்களைப் பலப்படுத்துவாராக.

சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடுகள் அநுபவிக்கிறவர்களாக இருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்கள் என்று எண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமானத் தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே ஆதாரமாக இருக்கிறது. உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாக இருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள தண்டனையைக் கொடுக்கும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதர்களோடும், எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்த நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராகவும், நீங்கள் எங்களுடைய சாட்சியை நம்பினபடியினாலே உங்களிடத்திலும், நம்புகிறவர்களெல்லோரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும், அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி கடைபிடித்தால், நியாயப்பிரமாணம் நல்லது என்று அறிந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரர்களுக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தமானவர்களுக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தகப்பனையும் தாயையும் கொலை செய்கிறவர்களுக்கும், கொலைபாதகர்களுக்கும், வேசிக்கள்ளர்களுக்கும், ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கும், கொத்தடிமைகளாக விற்க மனிதர்களைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யர்களுக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிராக போதிக்கிறவர்களுக்கும், ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய மகிமையான நற்செய்தியின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.

உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.

எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவிற்கு முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவென்றால், நாம் அவரோடுகூட மரித்தோமானால், அவரோடுகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடு இருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு முன்பாகவும், அவருடைய வருகையையும், அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:

ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாகத் தந்துவிட்டேன்; நான் சரீரத்தைவிட்டுப் பிரியும் நேரம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இப்பொழுது நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்த நாளிலே அதை எனக்குக் கொடுப்பார்; எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை விரும்பும் அனைவருக்கும் அதைக் கொடுப்பார்.

எனவே, நாம் கேட்டவைகளைவிட்டு விலகாமல் இருக்க, அவைகளை அதிக கவனமாகக் கவனிக்கவேண்டும். ஏனென்றால், தேவதூதர்கள் மூலமாகச் சொல்லப்பட்ட வசனத்திற்கு எதிரான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலாவது கர்த்தர் மூலமாக அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடம் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,

அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.

மேலும், அன்புக்கும் நல்ல செய்கைகளுக்கும் நாம் ஏவப்படுவதற்காக ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருகிறதைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லவேண்டும்; நாட்கள் நெருங்கி வருகிறதை எவ்வளவாகப் பார்க்கிறீர்களோ அவ்வளவாகப் புத்திசொல்லவேண்டும். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல், நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும்.

பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாக இருக்குமே.

நீங்களோ சீயோன் மலையினிடமும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடமும், ஆயிரமாயிரம் தேவதூதர்களிடமும், பரலோகத்தில் பெயர் எழுதியிருக்கிற தலைப்பிள்ளைகளின் சர்வசங்கமாகிய சபையினிடமும், எல்லோருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடமும், பூரணர்களாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடமும்,

திருமணம் எல்லோருக்குள்ளும் கனமுள்ளதாகவும், பரிசுத்தமாகவும் இருப்பதாக; வேசிக்கள்ளர்களையும் விபசாரக்காரர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம்.

உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள். இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள்.

நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?

பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார். விசேஷமாக அசுத்தமான ஆசைகளோடு சரீரத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தரின் அதிகாரத்தை அவமதிக்கிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரமானவர்கள், அகங்காரம் நிறைந்தவர்கள், மகத்துவங்களை அவமானப்படுத்த பயப்படாதவர்கள். அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாகக் கர்த்தருக்கு முன்பாக அவர்களை அவமானமாகக் குற்றப்படுத்தமாட்டார்களே. இவர்களோ பிடிபட்டு அழிக்கப்படுவதற்கு உண்டான புத்தி இல்லாத மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமானப்படுத்தி, தங்களுடைய தீயச்செயலினால் கெட்டு, அழிந்து, அநீதீயின் பலனை அடைவார்கள். இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பம் என்று நினைத்து, தங்களுடைய வஞ்சனைகளில் உல்லாசமாக வாழ்ந்து, உங்களோடு விருந்து சாப்பிடும்போது கறைகளாகவும் களங்கமாகவும் இருக்கிறார்கள்; விபசார மயக்கத்தினால் நிறைந்தவர்களும், பாவத்தைவிட்டு ஓயாதவைகளுமாக இருக்கிற கண்களை உடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாகப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் குழந்தைகள். செம்மையான பாதையைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்; அவன் அநீதியின் கூலியை விரும்பி, தன்னுடைய அக்கிரமத்திற்காகக் கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாதக் கழுதை மனிதர்களின் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது. பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒருநாளைப்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருக்கவேண்டாம். தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார்.

கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும். இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாக இருக்கிறதினால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக இருக்கவேண்டும்! தேவன் வருகின்ற நாள் சீக்கிரமாக வருவதற்கு அதிக ஆவலோடு காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பஞ்சபூதங்கள் எரிந்து உருகிப்போகும். அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம்.

ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள்.

நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது என்று உணர்ந்து பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.

நாம் சகோதரர்களிடம் அன்பு செலுத்துகிறபடியால், மரணத்தைவிட்டு விலகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைபெற்றிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள்.

நியாயத்தீர்ப்புநாளிலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம்.

தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.

அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து, பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள். உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,

நான் அவரைப் பார்த்தபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கையை என்மேல் வைத்து, என்னைப் பார்த்து: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாக இருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன்.

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது.

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது.

ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு வெண்மையான ஆடை அணிவிக்கப்படும்; ஜீவபுத்தகத்திலிருந்து அவனுடைய பெயரை நான் நீக்கிப்போடாமல், என் பிதாவிற்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் அவன் பெயரை அறிக்கைச் செய்வேன்.

நான் ஜெயம்பெற்று என் பிதாவுடைய சிங்காசனத்திலே அவரோடு உட்கார்ந்ததுபோல, ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடு உட்காருவதற்கு அருள்செய்வேன்.

அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள்.

ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது.

தேசத்தின் மக்கள் கோபித்துக்கொண்டார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் வந்தது; மரித்தவர்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாக இருந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பலன் கொடுப்பதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் நேரம்வந்தது” என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள். அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமி அதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டானது.

இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக குற்றமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

அதிக சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது; வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரைத் தொழுதுகொள்ளுங்கள் என்று சொன்னான்.

அவன் தேவனுடைய கோபத்தின் தண்டனையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் ஊற்றப்பட்ட அவருடைய கோபமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது.

அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர். அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினதினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்வதைக்கேட்டேன். பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்” என்று சொல்வதைக்கேட்டேன்.

இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான மக்கள்கூட்டம் ஆரவாரத்தோடு சத்தமிடுகிறதைக் கேட்டேன். அவர்கள்: “அல்லேலூயா, இரட்சிப்பும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே” என்றார்கள். மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.

பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

பின்பு, பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர் என்று அழைக்கப்பட்டவர்; அவர் நீதியாக நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

அன்றியும், நான் சிங்காசனங்களைப் பார்த்தேன்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள். இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் உருவத்தையாவது வணங்காமலும் தங்களுடைய நெற்றியிலும் தங்களுடைய கையிலும் அதின் முத்திரையைத் அணிந்துகொள்ளாமலும் இருந்தவர்களையும் பார்த்தேன். அவர்கள் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாண்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்வரை உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்; அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்பதைப் பார்த்தேன்; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுத்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் செய்கைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது.

சிங்காசனத்தின்மேல் உட்காருந்திருந்தவர்: இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன். ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாக இருப்பேன், அவன் என் குமாரனாக இருப்பான். பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் செல்வதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மட்டும் அதில் செல்வார்கள்.

“அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாக வருகிறேன்; அவனவனுடைய செய்கைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது.

Tamil - தமிழ் - TA

TAMIRV'19 - Tamil Indian Revised Version - 2019

This Bible text is from Tamil Indian Revised Version IRV 2019
https://open.bible/bibles/tamil-bridge-text-bible/
provided by: Bridge Connectivity Solutions Pvt Ltd, available by Creative Commons CC-BY-SA-4.0,
and this new compilation is shared as www.creativecommons.org/licenses/by-sa/4.0.
Languages are made available to you by www.ipedge.net