02 – கடவுள்

இவை சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள்.
மனிதர்களின் வார்த்தைகளில் நமக்கு அக்கறை இல்லை.
கடவுளை நேசிக்கும் எவருக்கும்... இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: கடவுள்.

முதல் 3 மிக முக்கியமான வசனங்கள்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார்.

உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை.

அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

நியமன வரிசையில் ஒவ்வொரு வசனமும் - 187 பத்திகள்

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.

ஆபிராம் 99 வயதானபோது, யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாக இரு.

அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான். அதற்கு தேவன்: “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேலர்களுடன் சொல்” என்றார். மேலும், தேவன் மோசேயை நோக்கி: “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம்.

யெகோவா என்னுடைய பெலனும் என்னுடைய கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என்னுடைய தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்செய்வேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்; யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்; என்பது யெகோவா அவருடைய நாமம்.

யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது.

யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர்” என்று கூறினார்.

யெகோவாவுடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவன்; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.

பூமியெல்லாம் யெகோவாவுடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா? அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா?

உன் தேவனாகிய யெகோவா சுட்டெரிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.

யெகோவாவே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறிந்துகொள்ள, இது உனக்குக் காட்டப்பட்டது. உனக்கு உபதேசிக்கும்படி, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கச்செய்து, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்.

“இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா.

ஆகையால் உன் தேவனாகிய யெகோவாவே தேவன் என்றும், தம்மில் அன்புவைத்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைவரை உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், தம்மைப் பகைக்கிறவர்களுக்கு வெளிப்படையாகப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் வெளிப்படையாகப் பதிலளிப்பார் என்றும் நீ அறிவாயாக.

உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல.

“அவர் கன்மலை; அவருடைய செயல் உத்தமமானது; அவருடைய வழிகளெல்லாம் நியாயம், அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

யெகோவாவைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்களுடைய தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.

தேவன் மெய்யாக பூமியிலே தங்குவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உமக்குப் போதாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

ஆனாலும் யெகோவா அவர்களுக்கு மனமிரங்கி, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்க விருப்பமில்லாமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார்.

யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது.

என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார்.

யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர். ஐசுவரியமும் புகழும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சக்தியும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் மக்களுடைய தேசங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கமுடியாது.

இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதின் காரணமாக நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று விண்ணப்பம் செய்தேன்.

நீர் ஒருவரே யெகோவா; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகிறது.

தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ?

“தேவரீர் எல்லாவற்றையும் செய்ய சர்வவல்லமையுள்ள தேவன்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன்.

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார். எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.

உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும்.

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.

தாவீதின் பாடல். யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.

யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.

யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார். தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.

துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, அவன்மேல் பல்லைக் கடிக்கிறான். ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.

தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள். தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.

உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கண்ணோக்கியருளும்.

அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.

ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.

ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை; உம்முடைய செயல்களுக்கு ஒப்புமில்லை. ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள். தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.

ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.

மலைகள் தோன்றுமுன்பும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர்.

யெகோவாவே, பூமி அனைத்திற்கும் நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.

யெகோவா ராஜரிகம்செய்கிறார், மக்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், பூமி அசைவதாக.

நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.

யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது. அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும். நீரோ மாறாதவராக இருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.

யெகோவா உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது. மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.

யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது. அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது. யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்; அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது.

என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர். ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.

யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.

நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.

வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார்.

யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.

உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன்.

யெகோவா இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.

யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், யெகோவா அருகில் இருக்கிறார்.

அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.

அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.

என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.

யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.

வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்? அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனுடைய பெயர் என்ன? அதை அறிவாயோ?

யெகோவாவின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.

ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.

சேனைகளின் யெகோவாவையே பரிசுத்தர் என்று எண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.

நமக்காக ஒரு குழந்தை பிறந்தது; நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் பெயர் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய யெகோவாவுடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.

ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி யெகோவா காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; யெகோவா நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

யெகோவா நம்முடைய நியாயாதிபதி, யெகோவா நம்முடைய நியாயப்பிரமாணிகர், யெகோவா நம்முடைய ராஜா, அவர் நம்மை காப்பாற்றுவார்.

சகல தேசங்களும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் கருதப்படுகிறார்கள். இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?

அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிமக்கள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.

நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை சிலைகளுக்கும் கொடுக்கமாட்டேன்.

நானே அவரென்று நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் ஊழியக்காரனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யெகோவா சொல்கிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.

நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்கிறார்.

உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான யெகோவா சொல்கிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற யெகோவா; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது மறைகிறகிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே யெகோவா, வேறொருவர் இல்லை. ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; யெகோவாவாகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

வானங்களைப் படைத்து பூமியையும் வெறுமையாக இருக்கும்படிப் படைக்காமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை நிலைநிறுத்தின தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: நானே யெகோவா, வேறொருவர் இல்லை.

நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாக யோசனைசெய்யுங்கள்; இதை ஆரம்பகாலமுதற்கொண்டு விளங்கச்செய்து, அந்நாள் துவங்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது காப்பாற்றப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.

முன்பு ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. முடிவிலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் ஆரம்பகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார். பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன்.

யெகோவா சொல்கிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் இடம் எப்படிப்பட்டது?

யெகோவாவோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய கடுங்கோபத்தை மக்கள் சகிக்கமாட்டார்கள்.

அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூமியின் நிலப்பரப்பை தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.

ஆதலால் இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியவைப்பேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரிவிப்பேன்; என் பெயர் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

யாராவது தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள முடியுமோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்.

பூர்வகாலமுதல் யெகோவா எனக்குக் காட்சியளித்தார் என்பாய்; ஆம் ஆதி அன்பினால் உன்னை நேசித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்கிறேன்.

இனி ஒருவன் தன் அருகில் உள்ளவனையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: யெகோவாவை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்வரை, எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய கரத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மால் செய்யமுடியாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்சந்ததியாரின் பிள்ளைகளின் மடியில் சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே,

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய யெகோவா; என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?

பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்திற்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. அவர் காலங்களையும் நேரங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.

நித்திய திருமணத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்கமும் இரக்கமுமாக உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.

கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நிலையான நாமம்.

அவர் மலைகளை உருவாக்கினவரும், காற்றை உருவாக்கினவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையை இருளாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த இடங்களின்மேல் உலாவுகிறவருமாக இருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய யெகோவா என்பது அவருடைய நாமம்.

யெகோவா எரிச்சலுள்ளவரும் நீதியை நிலைநாட்டுகிறவருமான தேவன்; யெகோவா நீதிசெய்கிறவர், கடுங்கோபமுள்ளவர்; யெகோவா தம்முடைய எதிரிகளுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர். அவர் தம்முடைய பகைவர்கள்மேல் என்றும் கோபம் வைக்கிறவர். யெகோவா நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களைத் தண்டனையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; யெகோவாவுடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்திலுள்ள தூசியாயிருக்கிறது.

சமுத்திரம் தண்ணீரினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி யெகோவாவுடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்னைக்குறித்து சந்தோஷமாக மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் உன்னை புதியவனாக்குவார்; அவர் உன்னைக்குறித்து கெம்பீரமாகக் களிகூருவார்.

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.

ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.

நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது: “பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.

அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.

தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.

அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,

அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.

இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார்.

இயேசு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவராக யோர்தானைவிட்டுத் திரும்பி, பரிசுத்த ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,

எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.

அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.

அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்களுடைய பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;

ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது. அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார். எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார்.

பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார்.

இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான்.

ஜீவ அப்பம் நானே.

நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார்.

மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.

நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாக இருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுக்கிறார் என்றார்.

அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கீழேயிருந்து உண்டானவர்கள், நான் மேலேயிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் இல்லை.

அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைப் பார்த்தும் இருக்கிறீர்கள் என்றார்.

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார்.

ஒருவன் தன் நண்பனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.

நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.

எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக,

ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை. வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது;

உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை.

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது.

நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார்.

மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.

ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்! “கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்? தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவராலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்தது.

தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே இல்லை, பெலத்திலே உண்டாயிருக்கிறது.

பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு, அவராலே அனைத்தும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்கு உண்டு; அவர் மூலமாக அனைத்தும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாக நாமும் உண்டாயிருக்கிறோம்.

எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபக்கத்தில் உட்காரும்படிச் செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

தேவனோ இரக்கத்தில் செல்வந்தமுள்ளவராக நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

அப்படியே நாம் இருகூட்டத்தாரும் ஒரே ஆவியானவராலே பிதாவினிடத்தில் சேரும் பாக்கியத்தை அவர் மூலமாகப் பெற்றிருக்கிறோம்.

எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர்.

அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாமல் இருங்கள்.

ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர். ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர். எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது. மேலும் எல்லாத் துரைத்தனங்களுக்கும் அதிகாரத்திற்கும் தலைவராக இருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.

நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

முற்காலத்தில் வெவ்வேறு காலங்களில், அநேக விதங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக முற்பிதாக்களோடு பேசின தேவன், இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.

குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது.

அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே.

இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார்.

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.

அவர் பரலோகத்திற்குப்போய், தேவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாக இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,

தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.

அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.

தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவர் என்பவர்களே, இந்த மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, தண்ணீர், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.

அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார்.

தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார்.

சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவன் என்று பெயர்பெற்றிருந்தும் செத்தவனாக இருக்கிறாய்.

உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது. அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் இருபத்துநான்கு சிங்காசனங்கள் இருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்மையான ஆடை அணிந்து, தங்களுடைய தலைகளில் பொற்கிரீடம் சூடி, அந்த சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அந்தச் சிங்காசனத்தில் இருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன. அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக் கல்லைப்போல கண்ணாடிக் கடல் இருந்தது; அந்தச் சிங்காசனத்தின் நடுவிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன, அவைகள் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் கண்களால் நிறைந்திருந்தன. முதலாம் ஜீவன் சிங்கத்தைப்போலவும், இரண்டாம் ஜீவன் காளையைப்போலவும், மூன்றாம் ஜீவன் மனிதமுகம் போன்ற முகம் உள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுபோலவும் இருந்தன. அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் ஆறுஆறு சிறகுகள் உள்ளவைகளும், சுற்றிலும், உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாக இருந்தன. அவைகள்: “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்; நீரே எல்லாவற்றையும் படைத்தீர், உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.

அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட நிலையில் இருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் நடுவிலே நிற்பதைக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாக இருந்தது; அந்தக் கண்கள் பூமியெல்லாம் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளே.

அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன்.

அதிக சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது; வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரைத் தொழுதுகொள்ளுங்கள் என்று சொன்னான்.

அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும், பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.

ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

அதிலே தேவாலயத்தை நான் பார்க்கவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டியதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

நான் அல்பாவும் ஓமெகாவும், தொடக்கமும் முடிவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன்.

Tamil - தமிழ் - TA

TAMIRV'19 - Tamil Indian Revised Version - 2019

This Bible text is from Tamil Indian Revised Version IRV 2019
https://open.bible/bibles/tamil-bridge-text-bible/
provided by: Bridge Connectivity Solutions Pvt Ltd, available by Creative Commons CC-BY-SA-4.0,
and this new compilation is shared as www.creativecommons.org/licenses/by-sa/4.0.
Languages are made available to you by www.ipedge.net