06 – நரகம்
இவை சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள்.
மனிதர்களின் வார்த்தைகளில் நமக்கு அக்கறை இல்லை.
கடவுளை நேசிக்கும் எவருக்கும்... இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: நரகம்.
இவை சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள்.
மனிதர்களின் வார்த்தைகளில் நமக்கு அக்கறை இல்லை.
கடவுளை நேசிக்கும் எவருக்கும்... இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: நரகம்.
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
”சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல், நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும்.
”இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
”அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “எனக்கு விரோதமாகப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரை என்னுடைய புத்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்திற்கு மக்களை அழைத்துக்கொண்டுபோ; என்னுடைய தூதனானவர் உனக்குமுன்பு செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன்” என்றார்.
”அப்பொழுது யெகோவாவின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் வரும்; யெகோவா அவன் பெயரை வானத்தின்கீழ் இல்லாமல் அழித்துப்போடுவார்.
”என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும்.
”மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான்.
”துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்; அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான்.
”துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
”என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை.
”பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.
”உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். உமது கோபத்தின் காலத்திலே அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; நெருப்பு அவர்களை அழிக்கும்.
”மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது.
”ஜீவபுத்தகத்திலிருந்து அவர்கள் பெயர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பெயரோடே அவர்கள் பெயர் எழுதப்படாதிருப்பதாக.
”அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
”நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.
”மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; மூடன் அதை உணரமாட்டான். துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
”தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள், காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள்.
”யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார்.
”இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.
”பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ?
”கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும்.
”பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
”பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை.
”காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், மறைவான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
”இஸ்ரவேலின் ஒளியான தேவனானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜூவாலையுமாகி, ஒரே நாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் எரித்து அழித்து, அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாக அழியச்செய்வார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
”யெகோவாவுக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வார்த்தையாகிய கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரை அழிப்பார்.
”அலறுங்கள், யெகோவாவின் நியாயத்தீர்ப்பின்நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா அழிவாக வரும். ஆதலால் எல்லாக் கைகளும் தளர்ந்து, எல்லா மனிதரின் இருதயமும் கரைந்துபோகும். அவர்கள் பயமடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப்பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் திகைத்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும். இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் யெகோவாவுடைய நாள் கடுமையும், மூர்க்கமும், மிகுந்த கோபமுமாக வருகிறது. வானத்தின் நட்சத்திரங்களும் விண்மீன்களும் ஒளி கொடாமலிருக்கும்; சூரியன் உதிக்கும்போது இருண்டுபோகும்; சந்திரன் ஒளி கொடாமலிருக்கும். பாவத்தின் காரணமாக உலகத்தையும், அக்கிரமத்தின் காரணமாக துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியச்செய்து, கொடியரின் கொடுமையைத் தாழ்த்துவேன்.
”இதனால் சேனைகளின் யெகோவாவுடைய கோபத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்குமளவுக்கு வானத்தை அதிரச்செய்வேன்.
”கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. அவர்களெல்லோரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலவீனாமானாயோ? எங்களுக்குச் சமமானாயோ? என்று சொல்வார்கள். உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
”அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! தேசங்களை கீழ்ப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்திற்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் மலையிலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக வானங்களில் ஏறுவேன்; உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
”அவர்கள் இறந்தவர்கள், உயிரடையமாட்டார்கள்; இறந்த இராட்சதர் திரும்ப எழுந்திருக்கமாட்டார்கள்; நீர் அவர்களை விசாரித்து அழித்து, அவர்கள் பெயரையும் அழியச்செய்தீர்.
”இதோ, பூமியிலுள்ள மக்களின் அக்கிரமத்தின்காரணமாக அவர்களை விசாரிக்க யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
”இரவும் பகலும் அது அணையாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
”பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.
”இதோ, தம்முடைய கோபத்தை கடுங்கோபமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை நெருப்புத்தழலாகவும் செலுத்தக் யெகோவா அக்கினியுடனும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களுடனும் வருவார். யெகோவா அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லோருடனும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலைசெய்யப்பட்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.
”அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாகப் பாதகம்செய்த மனிதர்களுடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய நெருப்பு அணையாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான அனைவருக்கும் அருவருப்பாயிருப்பார்கள்.
”இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்.
”அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினால் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற நெருப்பிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
”உன்னதமான தேவனுக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும். காலங்களும், அரைக்காலமும் செல்லும்வரை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுவரை அவனை முற்றிலும் அழிக்கும்படியாக அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.
”பூமியின் தூளிலே இறந்தவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
”இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமம் செய்கிற அனைவரும் காய்ந்த இலைகளைப்போல இருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கிளையையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
”பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
”இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.
”தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
”கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான்.
”உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும்.
”குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
”நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
”பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
”ராஜ்யத்தின் பிள்ளைகளோ, வெளியில் உள்ள இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
”ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
”நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
”நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
”இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
”மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
”மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்? மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
”நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
”என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.
”உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும்.
”விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து: நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
”சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்?
”அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
”அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
”பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
”அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
”அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை; அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார்.
”ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார்.
”மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்?
”என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும். உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.
”விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசிக்காதவனோ தண்டனைக்குள்ளாவான்.
”தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
”இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
”மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன?
”வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார்.
”நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
”அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள்.
”அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
”செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பெயர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் சரீர முழுவதும் கொப்பளங்கள் நிறைந்தவனாக, அந்த செல்வந்தனுடைய வாசலின் அருகே தங்கி, அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாக இருந்தான்; நாய்கள் வந்து அவன் கொப்பளங்களை நக்கிற்று. பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; செல்வந்தனும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாக்கைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினியில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடு இருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். அதுவுமல்லாமல், இந்த இடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அந்த இடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரர்கள் உண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்திற்கு வராதபடி, அவன்போய் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படியாக, நீர் அவனை என் தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.
”தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான். ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது. தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
”குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
”இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால், கல்லறைகளில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்; அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் தண்டனையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
”ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எரியப்பட்ட கொடியைப்போல அவன் எரியப்பட்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.
”என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்;
”அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
”சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி,
”உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார். சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும்.
”பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
”ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை. ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.
”பிரியமானவர்களே, “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால், நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள்.
”அப்படியே: “முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும், நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன்” என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. எனவே, நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான்.
”ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தகுந்த பலனைப் பெற்றுக்கொள்வதற்காக, நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும். எனவே, கர்த்தருக்குப் பயப்படவேண்டும் என்று அறிந்து, மனிதர்களுக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்குமுன்பாக வெளிப்படையாக இருக்கிறோம்; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாக இருக்கிறோம் என்று நம்புகிறேன்.
”அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
”கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதர்களோடும், எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்த நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராகவும், நீங்கள் எங்களுடைய சாட்சியை நம்பினபடியினாலே உங்களிடத்திலும், நம்புகிறவர்களெல்லோரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும்,
”அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
”சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல், நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும்.
”தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று நினைத்து, கிருபையின் ஆவியை அவமதிக்கிறவன் எவ்வளவு கொடிய தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாக இருக்குமே.
”ஏனென்றால், கிறிஸ்துவும் நம்மை தேவனிடம் சேர்ப்பதற்காக அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதி உள்ளவராகப் பாவங்களுக்காக ஒருமுறை பாடுகள் பட்டார்; அவர் சரீரத்திலே கொலை செய்யப்பட்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய், சிறைக்காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம்பண்ணினார்.
”கள்ளத்தீர்க்கதரிசிகளும் மக்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் அழிவிற்குரிய வேதப்புரட்டுகளைத் தந்திரமாக நுழையப்பண்ணி, தங்களை விலைக்கொடுத்து வாங்கின ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு வேகமான அழிவை வரவழைத்துக்கொள்வார்கள். அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும். பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது.
”பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; முழு உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் மற்ற ஏழு நபர்களையும் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் பெரும்வெள்ளத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, தண்டனைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாக நடப்பவர்களுக்கு அவைகளை உதாரணமாக வைத்து; அக்கிரமக்காரர்களோடு வாழ்கின்றபோது அவர்களுடைய காமவிகார செயல்களினால் வருத்தப்பட்டு, நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமச் செய்கைகளைப் பார்த்து, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார். விசேஷமாக அசுத்தமான ஆசைகளோடு சரீரத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தரின் அதிகாரத்தை அவமதிக்கிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரமானவர்கள், அகங்காரம் நிறைந்தவர்கள், மகத்துவங்களை அவமானப்படுத்த பயப்படாதவர்கள். அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாகக் கர்த்தருக்கு முன்பாக அவர்களை அவமானமாகக் குற்றப்படுத்தமாட்டார்களே.
”இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
”இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது.
”தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார்.
”தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள்.
”தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
”ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.
”தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
”இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும், தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.
”பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.
”மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன்.
”ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது.
”ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது.
”அவர்களுக்குப் பின்னால் மூன்றாம் தூதன் வந்து, அதிக சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்கித் தன் நெற்றியிலோ தன் கையிலோ அதின் முத்திரையை அணிந்து கொள்ளுகிறவன் எவனோ, அவன் தேவனுடைய கோபத்தின் தண்டனையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் ஊற்றப்பட்ட அவருடைய கோபமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது.
”இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
”அவன் அதிக சத்தமிட்டு: “மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், எல்லாவித அசுத்தஆவிகளுக்கும் காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள எல்லாவித பறவைகளுடைய கூடுமானது. அவளுடைய வேசித்தனத்தின் கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்; பூமியிலிருந்த வியாபாரிகள் அவளுடைய செல்வச்செழிப்பினால் செல்வந்தர்களானார்கள்” என்று சொன்னான்.
”விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணமகன் மற்றும் மணமகளுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன்னுடைய வியாபாரிகள் உலகத்தின் முக்கிய நபர்களாக இருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா நாட்டு மக்களும் மோசம்போனார்களே. தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது” என்று சொன்னான்.
”தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே” என்றார்கள். மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
”இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்; அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள படைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய ஆடை அணிந்தவர்களாக, வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார்.
”பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து: நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், படைத் தளபதிகளின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுதந்திரமானவர்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர், இவர்களுடைய மாம்சத்தையும் அழிக்கும்படிக்கு, தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தமாகக் கூப்பிட்டான்.
”அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
”ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய இராட்சசப் பாம்பை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருடங்கள் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.
”அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள தேசத்து மக்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றவும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருக்கும். அவர்கள் பூமியெங்கும் நிரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களை அழித்துப்போட்டது. மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
”பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்; அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்பதைப் பார்த்தேன்; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுத்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் செய்கைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
”பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
”“அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
”இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற அனைவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாவது எடுத்துப்போட்டால், ஜீவபுத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
”