18 – பொய் போதகர்கள்

இவை சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள்.
மனிதர்களின் வார்த்தைகளில் நமக்கு அக்கறை இல்லை.
கடவுளை நேசிக்கும் எவருக்கும்... இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: பொய் போதகர்கள்.

முதல் 3 மிக முக்கியமான வசனங்கள்

கள்ளத்தீர்க்கதரிசிகளும் மக்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் அழிவிற்குரிய வேதப்புரட்டுகளைத் தந்திரமாக நுழையப்பண்ணி, தங்களை விலைக்கொடுத்து வாங்கின ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு வேகமான அழிவை வரவழைத்துக்கொள்வார்கள். அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும். பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது.

எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும் புரட்டுகிறார்கள்.

சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தெய்வங்களின் பெயராலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.

நியமன வரிசையில் ஒவ்வொரு வசனமும் - 328 பத்திகள்

தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது. பெண், பாம்பை நோக்கி: “நாங்கள் தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களைச் சாப்பிடலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாமலிருக்க அதை சாப்பிடவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்” என்றாள். அப்பொழுது பாம்பு, பெண்ணை நோக்கி: “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றது.

அப்பொழுது தேவனாகிய யெகோவா பெண்ணை நோக்கி: “நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: “பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன்” என்றாள். அப்பொழுது தேவனாகிய யெகோவா பாம்பை நோக்கி: “நீ இதைச் செய்ததால் அனைத்து நாட்டுமிருகங்களிலும் அனைத்து காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்றார்.

நீ அவைகளை வணங்கி வழிபடவேண்டாம்; உன்னுடைய தேவனாகிய யெகோவாவாக இருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாக இருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து தகப்பன்மார்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவராக இருக்கிறேன். என்னிடம் அன்புகூர்ந்து, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரை இரக்கம் செய்கிறவராக இருக்கிறேன்.

“அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாதே; கொடுமையுள்ள சாட்சிக்காரனாக இருக்க ஆகாதவனோடு சேராதே. தீமைசெய்ய அநேகம்பேர்களின் வழியைப் பின்பற்றாதே; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட கூட்டத்தின் பக்கம் சாய்ந்து, தீர்ப்பு சொல்லாதே.

“நீங்கள் திருடாமலும், வஞ்சனைசெய்யாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.

உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா. “உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா? அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா?

பாகால்பேயோரின் நிமித்தம் யெகோவா செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதர்களையெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இராதபடி அழித்துப்போட்டார்.

உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய கவனமாக இருங்கள்; வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்பீர்களாக.

உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார்.

ஒருவன் தன் மகனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக. ஆகையால், உன் தேவனாகிய யெகோவாவுடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.

உங்களுடைய இருதயம் ஏமாற்றப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளை வணங்காமலும் இருக்க எச்சரிக்கையாயிருங்கள்.

“நான் உனக்குக் கொடுக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனுடன் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

“உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாகச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேட்காதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்துகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படி உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சோதிக்கிறார்.

சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தெய்வங்களின் பெயராலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.

யெகோவா சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், ஒரு தீர்க்கதரிசி யெகோவாவின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடக்காமலும் செயல்படாமலும் போனால், அது யெகோவா சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

கலகம்செய்தல் பில்லிசூனிய பாவத்திற்கும், பிடிவாதம்செய்தல் அவபக்திக்கும் விக்கிரக ஆராதனைக்கும் சமமாக இருக்கிறது; நீர் யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்ததாலே, அவர் உம்மை ராஜாவாக இல்லாதபடி புறக்கணித்துத் தள்ளினார்” என்றான்.

அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. எதினால் என்று யெகோவா அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச்செய்வாய்; போய் அப்படிச் செய் என்றார். ஆதலால் யெகோவா பொய்யின் ஆவியை உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லோருடைய வாயிலும் கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.

அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று: நான் அவனுக்கு போதனைசெய்வேன் என்றது; எதனால் என்று யெகோவா அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச் செய்வாய்; போய் அப்படியே செய் என்றார். ஆகவே யெகோவா பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.

அவர்களுடைய முன்னோர்களின் தேவனாகிய யெகோவா தமது மக்களையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கு இரக்கமுள்ளவராக இருந்ததால், அவர்களிடத்திற்குத் தம்முடைய பிரதிநிதிகளை ஏற்கனவே அனுப்பினார். ஆனாலும் அவர்கள் தேவனுடைய பிரதிநிதிகளைக் கேலிசெய்து, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை அவமதித்ததால், யெகோவாவுடைய கடுங்கோபம் அவருடைய மக்களின்மேல் வந்தது; உதவி இல்லாமல் போனது.

நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள்.

தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்? யெகோவாவுக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து: அவர்களுடைய கட்டுகளை அறுத்து, அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள். பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; கொலை வெறியர்களையும் வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார்.

அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்; தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார். எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.

நீதிமானுக்கு விரோதமாகப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

உன் நாவை தீங்கிற்கும், உன்னுடைய உதடுகளை பொய் வார்த்தைகளுக்கும் விலக்கிக் காத்துக்கொள்.

தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.

நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய், கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது. நன்மையைவிட தீமையையும், யாதார்த்தம் பேசுகிறதைவிட பொய்யையும் விரும்புகிறாய். (சேலா) கபடமுள்ள நாவே, அழிக்கும் எல்லா வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்; தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி, நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா)

அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவனுடைய இருதயமோ யுத்தம்; அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால் தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக.

கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை.

உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது.

பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.

யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.

பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன், என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.

உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து, உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யெகோவாவுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.

உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும். உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும். வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.

ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை, மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால், பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டாக்குதல் ஆகிய இவைகளே.

பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் செய், அவன் அறிவில் விருத்தியடைவான்.

யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.

சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்;

பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும். மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய்.

மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.

தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.

பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.

பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.

பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.

நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள்.

தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர். அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.

விலையுயர்ந்த நறுமண தைலத்தைவிட நற்புகழும், ஒருவனுடைய பிறந்தநாளைவிட இறந்த நாளும் நல்லது.

வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; யெகோவா பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாகக் கலகம்செய்தார்கள். மாடு தன் எஜமானையும், கழுதை, தான் உணவு உண்ணும் இடத்தையும் அறியும்; இஸ்ரவேலர்களோ அறிவில்லாமலும், என் மக்கள் உணர்வில்லாமலும் இருக்கிறார்கள் என்கிறார். ஐயோ, பாவமுள்ள தேசமும், அக்கிரமத்தால் பாரம்சுமந்த மக்களும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற மக்களுமாக இருக்கிறார்கள்; யெகோவாவைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள். இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமதிகமாக விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பெலவீனமாக இருக்கிறது.

துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாக நொறுங்குண்டுபோவார்கள்; யெகோவாவை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள்.

தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ, தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்திற்குப் புத்திமான்களுமாக இருக்கிறவர்களுக்கு ஐயோ,

சேனைகளின் யெகோவாவையே பரிசுத்தர் என்று எண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் யூதா, இஸ்ரவேல், இரண்டு கோத்திரத்திற்கும் தடுக்கி விழச்செய்யும் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிமக்களுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.

வேதத்தையும் சாட்சி புத்தகத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமிருக்காது.

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! தேசங்களை கீழ்ப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்திற்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் மலையிலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக வானங்களில் ஏறுவேன்; உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து; இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், தேசங்களை அதிரவும் செய்து,

அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை அழிந்துபோகச்செய்வேன்; அப்பொழுது சிலைகளையும், மந்திரவாதிகளையும், இறந்தவர்களிடம் பேசுகிறவர்களையும், குறிசொல்கிறவர்களையும் தேடுவார்கள்.

ஆனாலும் இவர்களும் திராட்சைரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிவிலகிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சைரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிவிலகி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்.

இந்த மக்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனப்படுத்துகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனிதர்களாலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக கருதப்படலாமோ? உண்டாக்கப்பட்ட பொருள் தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?

வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.

இவர்கள் கலகமுள்ள மக்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், யெகோவாவுடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத மக்களாயிருக்கிறார்கள்.

இவர்கள் தரிசனக்காரர்களை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரர்களை நோக்கி: யதார்த்தமாக எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு மென்மையான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் வெளிப்படுத்துங்கள் என்றும், நீங்கள் வழியை விட்டு, பாதையிலிருந்து விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓய்ந்திருங்கள் என்றும் சொல்கிறார்கள். நீங்கள் இந்த வார்த்தையை வெறுத்து, இடுக்கமும் தாறுமாறும் செய்கிறதை நம்பி, அதைச் சார்ந்து கொள்கிறதினால், இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்ந்த சுவர் விழப் பிதுங்கி நிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்கிறார்.

நான் கட்டுக்கதைக்காரரின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, குறிசொல்கிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகச் செய்கிறவர்.

அவனுடைய காவற்காரர் எல்லோரும் ஒன்றும் அறியாத குருடர்கள்; அவர்களெல்லோரும் குரைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாகப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்கிறவர்கள், தூக்கப் பிரியர்; திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன்தன் மூலையிலிருந்து தன்தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.

நீங்கள் யாரைப் பரியாசம்செய்கிறீர்கள்? யாருக்கு விரோதமாக வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்செய்கிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ?

இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம் செய்தார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும், தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் யெகோவாவை மறுதலித்தார்கள்.

திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்தில் நடந்துவருகிறது. தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் மக்களுக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவில் என்ன செய்வீர்கள்?

அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்வரை, ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யர். சமாதானமில்லாமலிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் மக்களின் காயங்களை மேலோட்டமாகக் குணமாக்குகிறார்கள்.

அவர்கள் உண்மையைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை திட்டுகிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமம் செய்ய உழைக்கிறார்கள். வழக்கமாக பொய் பேசுகிறவர்கள் நடுவில் குடியிருக்கிறாய்; பொய்யின்காரணமாக அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது பொய் பேசுகிறது; அவனவன் தன்தன் அருகிலுள்ளவனிடம் தன்தன் வாயினால் சமாதானமாகப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்தில் அவனைக் கொல்ல சதி செய்கிறான்.

அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் பெயரைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களுடன் பேசினதுமில்லை; அவர்கள் பொய்யான தரிசனத்தையும், பொய்யான சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் பொய்யையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள். ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் பெயரைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்தில் பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறப்பார்கள்.

மனிதன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, யெகோவாவைவிட்டு விலகுகிற இருதயமுள்ள மனிதன் சபிக்கப்பட்டவன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளின் பலன்களுக்கும் தகுந்ததைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

தீர்க்கதரிசிகளுக்காக என் இருதயம் என் உள்ளத்தில் நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தருக்காகவும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளுக்காகவும் நான் வெறித்திருக்கிற மனிதனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன்.

தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள்; என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டில் சறுக்கலான வழியாயிருக்கும், துரத்தப்பட்டு அதில் விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருடத்தில் அவர்கள்மேல் பொல்லாப்பை வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்செய்து, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாமல் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லோரும் எனக்குச் சோதோமைப்போலவும், அதின் குடிமக்கள் கொமோராவைப்போலவும் இருக்கிறார்கள். ஆதலால் சேனைகளின் யெகோவா தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரவிற்றோ என்று சொல்லுகிறார்.

உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமையடையச் செய்கிறார்கள்; யெகோவாவுடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். அவர்கள் என்னை அசட்டை செய்கிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று யெகோவா சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்தில் நடக்கிற அனைவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.

யெகோவா தம்முடைய இருதயத்தின் நினைவுகளை செய்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள். அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களுடன் நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் பெயரைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன். எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள். என் மக்களின் முற்பிதாக்கள் பாகாலுக்காக என் பெயரை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினால் என் பெயரை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள். சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று யெகோவா சொல்லுகிறார். என் வார்த்தை நெருப்பைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று யெகோவா சொல்லுகிறார்.

இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை சொன்னார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார். இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் மக்களைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த மக்களுக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.

கர்த்தரால் வரும் பதில் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் மக்களாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனிதனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். யெகோவா என்ன பதில் கொடுத்தார்? யெகோவா என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அருகில் உள்ளவனையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேளுங்கள். ஆனால் கர்த்தரால் வரும் பதில் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவனவன் வார்த்தையே அவனவனுக்குப் பதிலாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் யெகோவா என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்.

நீங்களோவென்றால், கர்த்தரால் வரும் பதில் என்று சொல்லுகிறதினால்: யெகோவாவின் பதில் என்று சொல்லாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியும், நீங்கள் இந்த வார்த்தையைக் யெகோவாவின் பதில் என்று சொல்லுகிறீர்களே. ஆதலால், இதோ, நான் உங்களை முற்றிலும் மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும், எனக்கு முன்பாக இல்லாதபடி கைவிட்டு, மறக்கமுடியாத, நிலையான நிந்தையையும், நிலையான வெட்கத்தையும் உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிற உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், உங்கள் குறிகாரருக்கும், உங்கள் சொப்பனக்காரருக்கும், உங்கள் நாள் பார்க்கிறவர்களுக்கும், உங்கள் சூனியக்காரருக்கும் நீங்கள் காதுகொடுத்துக் கேட்காதிருங்கள். நான் உங்களை உங்கள் தேசத்திலிருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிவதற்காக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் பெயரைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார் என்றேன். மேலும் நான் ஆசாரியர்களையும் இந்த எல்லா மக்களையும் நோக்கி: இதோ, யெகோவாவுடைய ஆலயத்தின் பணிப்பொருட்கள் இப்பொழுது சீக்கிரத்தில் பாபிலோனிலிருந்து திரும்பக் கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; சொப்பனம் காணச்செய்கிற உங்கள் சொப்பனக்காரர் சொல்வதைக் கேட்காமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். அவர்கள் என் பெயரைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பவில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.

என் மக்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறச்செய்து, மலைகளில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து அடுத்த மலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்.

இறக்கவே இறப்பாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கமான வழியில் இல்லாதபடி எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடு காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்திலே இறப்பான்; அவனுடைய இரத்தப்பழியையோ உன்னிடம் கேட்பேன். நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன்னுடைய துன்மார்க்கத்தையும் தன்னுடைய ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமல்போனால், அவன் தன்னுடைய துன்மார்க்கத்திலே மரிப்பான்; நீயோவென்றால் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பாற்றுவாய். அப்படியே, நீதிமான் தன்னுடைய நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் மரிப்பான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன்னுடைய பாவத்திலே மரிப்பான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன்னுடைய கையிலே கேட்பேன். நீதிமான் பாவம் செய்யாதபடி நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவம்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பாற்றினாய் என்றார்.

இஸ்ரவேல் மக்களின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இல்லாமற்போகும்.

யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் சொல்லி, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களுடன் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: தாங்கள் ஒன்றும் பார்க்காமல் இருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ,

இஸ்ரவேலே, உன்னுடைய தீர்க்கதரிசிகள் வனாந்திரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். நீங்கள் யெகோவாவுடைய நாளிலே போரிலே நிலைநிற்கும்படி, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வீட்டாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை. யெகோவா தங்களை அனுப்பாமல் இருந்தும், யெகோவா சொன்னாரென்று சொல்லி, அவர்கள் பொய்யானதையும், பொய்க்குறியையும் பார்த்து, காரியத்தை நிர்வாகம் செய்யலாமென்று நம்பிக்கையாக இருக்கிறார்கள். நான் சொல்லாமல் இருந்தும், நீங்கள் யெகோவா சொன்னார் என்று சொல்லும்போது, பொய் தரிசனத்தைப் பார்த்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு எதிரானவர் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

பொய்யானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என்னுடைய கை எதிராக இருக்கும்; அவர்கள் என்னுடைய மக்களின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் மக்களின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்திற்குள் நுழைவதுமில்லை; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள். சமாதானம் இல்லாமல் இருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என்னுடைய மக்களை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள். சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்து விழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ பெய்வாய்; கொடிய புயல்காற்றும் அதைப் பிளக்கும். இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா? ஆகையால் என்னுடைய கடுங்கோபத்திலே கொடிய புயல்காற்றை எழும்பி அடிக்கச்செய்வேன்; என்னுடைய கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என்னுடைய கடுங்கோபத்திலே அழிக்கத்தக்க பெருங்கல்மழையும், பெய்யும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்து கிடக்கும்படி அதைத் தரையிலே விழச்செய்வேன்; உள்ளே இருக்கிற நீங்கள் அழியும்படி அது விழும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என்னுடைய கடுங்கோபத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை. எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனம்சொல்லி, சமாதானம் இல்லாமல் இருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

மனிதகுமாரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனம்சொல்லுகிற உன்னுடைய மக்களின் மகள்களுக்கு எதிராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்:

நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாக முறியச்செய்தபடியினாலும், துன்மார்க்கன் தன்னுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடு காக்கவும் கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும், நீங்கள் இனி பொய்யானதைப் பார்ப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என்னுடைய மக்களை உங்களுடைய கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

அதின் தீர்க்கதரிசிகள் பொய்யானதை பார்த்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, யெகோவா சொல்லாமலிருந்தும், யெகோவாகிய ஆண்டவர் சொன்னாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள்.

ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால், இதோ, தேசங்களில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை உனக்கு விரோதமாக வரச்செய்வேன்; அவர்கள் உன்னுடைய ஞானத்தின் அழகுக்கு விரோதமாகத் தங்களுடைய வாள்களை உருவி, உன்னுடைய சிறப்புகளைக் குலைத்துப்போடுவார்கள்.

இவன் தேசத்தின்மேல் வாள் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, மக்களை எச்சரிக்கும்போது, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாக இல்லாமல், வாள் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவனுடைய தலையின்மேல் சுமரும். அவனுடைய எக்காளத்தின் சத்தத்தைக் கேட்டும், எச்சரிக்கையாக இருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன் மேலே சுமரும்; எச்சரிக்கையாக இருக்கிறவனோ தன்னுடைய உயிரைத் தப்புவித்துக்கொள்ளுவான். காவற்காரன் வாள் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் மக்கள் எச்சரிக்கப்படாமலும், வாள் வந்து அவர்களில் யாராவது ஒருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன்னுடைய அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.

மனிதகுமாரனே, நான் உன்னை இஸ்ரவேல் மக்களுக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என்னுடைய வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என்னுடைய பெயரினாலே அவர்களை எச்சரிப்பாயாக. நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கத்தில் இல்லாமலிருக்கும்படி எச்சரிக்காமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்திலே மரணமடைவான்: ஆனாலும் அவனுடைய இரத்தப்பழியை உன்னுடைய கையிலே கேட்பேன். துன்மார்க்கன் தன்னுடைய வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன்னுடைய வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான்; நீயோ உன்னுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன்னுடைய பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும்செய்து, துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக் கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

உன்னுடைய மக்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல. நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டுத்திரும்பி, அநியாயம்செய்தால், அவன் அதினால் மரிப்பான். துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான். நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படி நியாயம் தீர்ப்பேன் என்று சொல் என்றார்.

மனிதகுமாரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்; நீ தீர்க்கதரிசனம் சொல்லி, அவர்களுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ, மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும். நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டு ரோமத்தை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்: கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமல்போகிறீர்கள். நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நோயற்றவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்தப்பட்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமல்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடுமையாக அவைகளை ஆண்டீர்கள். மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறப்பட்டு போனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையானது. என்னுடைய ஆடுகள் எல்லா மலைகளிலும் உயரமான எல்லா மேடுகளிலும் அலைந்து, பூமியின்மீதெங்கும் என்னுடைய ஆடுகள் சிதறித் திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.

யெகோவாகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என்னுடைய ஆடுகள் சூறையாகி, என்னுடைய ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாகப் போனது; என்னுடைய மேய்ப்பர்கள் என்னுடைய ஆடுகளை விசாரியாமல்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள். ஆகையால் மேய்ப்பரே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாக வந்து, என்னுடைய ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர்கள் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என்னுடைய ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாக இல்லாதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் காப்பாற்றுவேன் என்று சொல்லு.

என்னுடைய மந்தையே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.

ஆகையால், யெகோவாகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன். நீங்கள் பலவீனமாக இருக்கிறவைகளையெல்லாம் வெளியேற்றி சிதறச்செய்யும்படி, அவைகளைப் பக்கத்தினாலும் முன்னந்தொடைகளினாலும் தள்ளி உங்களுடைய கொம்புகளைக்கொண்டு முட்டுகிறதினாலே, நான் என்னுடைய ஆடுகளை இனிச் சூறையாகாதபடி இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.

நீங்கள் உங்களுடைய வாயினால் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாக உங்களுடைய வார்த்தைகளைப் பெருகச்செய்தீர்கள்; அதை நான் கேட்டேன்.

என் மக்கள் அறிவில்லாததினால் அழிகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாக இல்லாமலிருக்க நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.

என் மக்கள் மரக்கட்டையிடம் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கைத்தடி அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்று இருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பி அலையச்செய்தது; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்திராமல் விபச்சாரவழியில் போனார்கள்.

தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக் கொடுக்காதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தமாகி, என் மக்களை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாகக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தரிசனம் காணமுடியாத இரவும், குறிசொல்லமுடியாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் மறைந்து, அவர்கள்மேல் பகல் மிகவும் இருளாகப்போகும். தரிசனம்பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டு, குறிசொல்லுகிறவர்கள் நாணமடைந்து, உத்திரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் அனைவரும் தங்கள் வாயை மூடிக்கொள்வார்கள்.

அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் யெகோவாவைச் சார்ந்துகொண்டு: யெகோவா எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனுடன் உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்திற்கும் சமாதானத்திற்கும் ஏற்றபடி நியாயந்தீருங்கள். ஒருவனும் பிறனுக்கு விரோதமாகத் தன் இருதயத்தில் தீங்கு நினைக்காமலும், பொய் சத்தியத்தின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

சுரூபங்கள் பொய்யானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யை கண்டார்கள்; சொப்பனக்காரர்கள் வீணானதைச் சொல்லி, பயனில்லாததைச் சொல்லி தேற்றினார்கள்; ஆகையால் மக்கள் ஆடுகளைப்போல சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.

மந்தையைக் கைவிடுகிற பொய்யான மேய்ப்பனுக்கு ஐயோ, பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயம் முழுவதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.

அந்நாளிலே நான் விக்கிரகங்களின் பெயரும் தேசத்தில் இல்லாதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவனை நோக்கி: நீ யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறதினால் நீ உயிரோடிருக்கக்கூடாது என்று சொல்லி, அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள். அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய் சொல்லும்படிக்கு இனி கம்பளியைப் போர்த்துக்கொள்ளாமல், நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான்.

ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய யெகோவாவின் தூதன். நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறச்செய்தீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம்செய்ததினால் நானும் உங்களை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அற்பமானவர்களும் இழிவானவர்களுமாக்கினேன்.

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகவே, இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாவது மீறி, அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லோரையும்விட சிறியவன் எனப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான்.

நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போடுவதற்கு உனக்கு தெளிவாகத் தெரியும். பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள்.

நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார்.

அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?

இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது; மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”

அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.

பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.

அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடுக்காமற்போனால், அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக.

இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?

பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து: வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகவே, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்களுடைய செய்கையின்படி செய்யாமலிருங்கள்; ஏனென்றால், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி,

விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், சந்தைவெளிகளில் வணக்கங்களையும், மனிதர்களால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார். நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார். உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களை பிரவேசிக்கவிடுகிறதுமில்லை. மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள். மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே. குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள். மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாக இருக்கிறீர்கள், அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் எல்லா அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து: எங்களுடைய பிதாக்களின் நாட்களில் இருந்திருந்தோமானால், அவர்களோடு நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். ஆகவே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள். நீங்களும் உங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள். சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? ஆகவே, இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபண்டிதர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்களுடைய ஜெப ஆலயங்களில் சாட்டையினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள்.

அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள். அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.

ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள். அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக்கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதுமடங்கும், ஒன்று அறுபதுமடங்கும், ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்” என்றார்.

அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்த மக்கள் தங்களுடைய உதடுகளினால் என்னை கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது என்றும், மனிதர்களுடைய கட்டளைகளைப் போதனைகளாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறபடி, மாயக்காரர்களாகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.

நீங்கள் தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, மனிதர்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடித்துவருகிறவர்களாக, கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருகிறீர்கள்” என்றார். பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது.

ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தவரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஏமாற்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

இயேசு மறுமொழியாக: மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

எல்லா மனிதர்களும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாகப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்களுடைய முற்பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்தும் அப்படித்தான் பேசினார்கள்.

பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பார்வையற்றவனுக்கு பார்வையற்றவன் வழிகாட்ட முடியுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? சீடன் தன் குருவிற்கு மேலானவன் இல்லை, பயிற்சியில் முழுமையாக தேறினவன் தன் குருவைப்போல இருப்பான்.

“அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான். கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமட்டும் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடுக்காமல் இருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளியேவராத மறைபொருளுமில்லை. ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.

வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு ஒழிந்துபோவதைவிட, வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.

அதற்கு அவர்: நீங்கள் ஏமாற்றப்படாதபடிக்கு கவனமாக இருங்கள்; ஏனென்றால், அநேகர் வந்து என் நாமத்தை வைத்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் நெருங்கிவிட்டது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.

வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

அப்படியிருந்தும், இயேசு எல்லோரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பவில்லை. மனிதர்கள் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனிதர்களைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்க அவசியமாக இருக்கவில்லை.

அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான். ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது. தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.

உண்மையாக ஆராதிக்கிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் ஆராதிக்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார்.

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என் உபதேசம் என்னுடையதாக இல்லாமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது. அவருடைய விருப்பத்தின்படிசெய்ய மனதுள்ளவன் எவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சொந்தமாக பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.

மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார். மக்கள் அவருக்கு மறுமொழியாக: நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.

தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றார்.

மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா? நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான்.

தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாகாததினால் செவிகொடுக்காமல் இருக்கிறீர்கள் என்றார்.

அப்பொழுது இயேசு: பார்க்காதவர்கள் பார்க்கும்படியாகவும், பார்க்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.

உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல்வழியாக நுழையாமல், வேறுவழியாக ஏறுகிறவன் திருடனும், கொள்ளைக்காரனுமாக இருக்கிறான். வாசல்வழியாக நுழைகிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாக இருக்கிறான். வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் அழைத்து, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறதினால் அவனுக்குப் பின்னே செல்லுகிறது. தெரியாதவர்களுடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் தெரியாதவனுக்குப் பின்னே செல்லாமல், அவனைவிட்டு ஓடிப்போகும் என்றார்.

மேய்ப்பனாக இல்லாதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தம் இல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைப் பார்த்து ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். வேலையாள் கூலிக்காக வேலைசெய்கிறவன், ஆகவே, ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படமாட்டான்.

அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. “கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடையக் கரம் யாருக்கு வெளிப்பட்டது” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்: அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான்.

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைப் பார்க்காமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களோடு தங்கி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார்.

பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, எல்லா சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சொந்தமாக பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் எல்லாவற்றையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார்.

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றப்பின்பும் அதின் கிரயப்பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணம் கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் இல்லை, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.

“வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.

ஆகவே, உங்களைக்குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும்குறித்தும், எச்சரிக்கையாக இருங்கள்.

நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்திச் சொன்னதை நினைத்து விழித்திருங்கள்.

அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய உரிமைப்பங்கையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறப்பதற்காக, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது.

அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி,

தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமான்களாவதில்லை, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

அப்படியாக்காது: “நீர் உம்முடைய வசனங்களில் நீதிமானாக விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியானது” என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியவான் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லோரும் வழிதவறி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி, தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;

எனவே, நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது, கட்டளையும் பரிசுத்தமாகவும் நீதியாகவும் நன்மையாகவும் இருக்கிறது.

எனக்கு அதிக துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;

தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியம் உண்டு என்று அவர்களைக்குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆனாலும் அது அறிவிற்குரிய வைராக்கியம் இல்லை. எப்படியென்றால், அவர்கள் தேவனுடைய நீதியை அறியாமல், தங்களுடைய சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறதினால் தேவனுடைய நீதிக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள். விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார்.

எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும், தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும்.

தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது.

விசுவாசத்தில் பலவீனமாக உள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன சந்தேகங்களைக் குற்றமாக தீர்மானிக்காமல் இருங்கள்.

அன்றியும் சகோதரர்களே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு எதிராகப் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருந்து, அவர்களைவிட்டு விலகவேண்டும் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து, நயமான மொழிகளாலும், இனிய பேச்சினாலும், கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள்.

எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது. யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார். ஆனாலும் யூதர்களானாலும் கிரேக்கர்களானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார். இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய பலவீனம் எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது.

சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடம் இருந்தேன். உங்களுடைய விசுவாசம் மனிதர்களுடைய ஞானத்தில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவராலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்தது.

அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.

மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.

ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவருக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான். ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். “கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறு அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் முடியாது.

ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். ஏனெனில், இந்த உலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாக இருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், ஞானிகளுடைய எண்ணங்கள் வீணாக இருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.

ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் நற்செய்தியை பிரசங்கிக்கும்போது அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் நற்செய்தியைச் செலவில்லாமல் பிரசங்கிப்பதே எனக்குப் பலன்.

அவர்களில் சிலர் கர்த்த்தரைச் சோதித்துப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைச் சோதித்துப்பார்க்காமலிருப்போமாக.

ஆனாலும் ஒருவன் வாக்குவாதம்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்டப் பழக்கம் இல்லையென்று அறியவேண்டும்.

முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன். உங்களில் உத்தமர்கள் எவர்களென்று தெரியும்படிக்கு வேறுபாடுகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.

இப்படியிருக்க, எவன் தகுதியின்றி கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாக இருப்பான். எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணவேண்டும். ஏனென்றால், தகுதியில்லாமல் புசித்து, பானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் என்னவென்று நிதானித்து அறியாததினால், தனக்கு நியாயத்தீர்ப்பு வரும்படி புசிக்கவும், பானம்பண்ணவும் செய்கிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாக இருக்கிறார்கள்; அநேகர் மரணமும் அடைந்திருக்கிறார்கள். நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம். நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடு தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.

அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாக இருக்கும். சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள். மறுமொழிக்காரர்களாலும், மறு உதடுகளாலும் இந்த மக்களிடத்தில் பேசுவேன்; ஆனாலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.

தேவன் கலகத்திற்கு தேவனாக இல்லாமல், சமாதானத்திற்கு தேவனாக இருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. சபைகளில் உங்களுடைய பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்; பேசுகிறதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே. தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்திற்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது நினைத்தால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கட்டளைகளென்று அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒருவன் அறியாதவனாக இருந்தால், அவன் அறியாதவனாக இருக்கட்டும்.

அன்றியும், சகோதரர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாக, நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்களுடைய விசுவாசம் பயனில்லாததாக இருக்குமே.

மோசம்போகாதீர்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். நீங்கள் பாவம் செய்யாமல் நீதியுள்ளவர்களாக வாழ்ந்து, தெளிந்தவர்களாக இருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவு இல்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.

சாத்தானாலே நாம் மோசமடையாமல் இருக்க அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் இல்லை.

கிறிஸ்துவிற்குள் எப்பொழுதும் எங்களை வெற்றியடையச்செய்து, எல்லா இடங்களிலும் எங்களைக்கொண்டு அவரைத் தெரிந்துகொள்கிற அறிவின் நறுமணத்தை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம். கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடத்துவதற்கு தகுதியானவன் யார்? அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்படம் செய்து பேசாமல், சுத்தமாகவும், தேவனால் அருளப்பட்டபடியாகவே, கிறிஸ்துவிற்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.

புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாக இல்லாமல், ஆவியானவருக்குரியதாக இருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆனால், ஆவியோ உயிர் கொடுக்கிறது.

அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்தநாள் வரைக்கும் பழைய ஏற்பாடு படிக்கும்போது, அந்த முக்காடு நீங்காமல் இருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. மோசேயின் ஆகமங்கள் படிக்கப்படும்போது, இந்தநாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. அவர்கள் கர்த்தரிடத்தில் மனம்திரும்பும்போது, அந்த முக்காடு எடுக்கப்படும்.

வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாக நடக்காமலும், தேவ வசனத்தைத் திரித்துக் கூறாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்குமுன்பாக எல்லா மனிதர்களுடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமர்கள் என்று விளங்கப்பண்ணுகிறோம். எங்களுடைய நற்செய்தி மறைபொருளாக இருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாக இருக்கும். தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

எங்களுடைய போராயுதங்கள் சரீரத்திற்கு உரியவைகளாக இல்லாமல், அரண்களை அழிக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாக இருக்கிறது. அவைகளால் நாங்கள் வாக்குவாதங்களையும், தேவனை அறிகிற அறிவிற்கு விரோதமாக எழும்புகிற எல்லா மேட்டிமையையும் அழித்து, எல்லா எண்ணங்களையும் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியுமாறு சிறைப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம். உங்களுடைய கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் தகுந்த நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாக இருக்கிறோம்.

ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன். எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே.

அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தை அணிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே. எனவே அவனுடைய ஊழியக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்களுடைய வேஷத்தை அணிந்துகொண்டால் அது ஆச்சரியம் இல்லையே; அவர்கள் முடிவு அவர்கள் செய்கைகளைப் பொருத்திருக்கும்.

நீங்கள் விசுவாசம் உள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்; உங்களை நீங்களே பரீட்சை செய்துபாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்களாக இருந்தால் தெரியாது.

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள்.

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான். முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.

இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே. மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.

கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு உண்டான சுதந்திரத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்குவதற்காக குறுக்குவழியாக நுழைந்த கள்ளச் சகோதரர்களினால் அப்படியானது. நற்செய்தியாகிய சத்தியம் உங்களிடம் மாறாமல் நிலைத்திருப்பதற்காக, நாங்கள் ஒருமணிநேரம் கூட அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.

மேலும், பேதுரு அந்தியோகியாவிற்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமத்தினால், நான் அவனை முகமுகமாக எதிர்த்தேன். எப்படியென்றால், யாக்கோபினிடமிருந்து சிலர் வருகிறதற்கு முன்பே அவன் யூதரல்லாத மக்களோடு சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனம் உள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான். மற்ற யூதர்களும் அவனோடுகூட இணைந்து மாய்மாலம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாய்மாலத்தினாலே பர்னபாவும் ஈர்க்கப்பட்டான். இப்படி அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி சரியாக நடக்காததை நான் பார்த்தபோது, எல்லோருக்கும் முன்பாக நான் பேதுருவைப் பார்த்து சொன்னது என்னவென்றால்: யூதனாக இருக்கிற நீ யூதர்கள் முறைப்படி நடக்காமல், யூதரல்லாதவர்களின் முறைப்படி நடந்து கொண்டிருக்க, யூதரல்லாதோரை யூதர்கள் முறைப்படி நடக்கச்சொல்லி நீ எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?

புத்தியில்லாத கலாத்தியர்களே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமலிருக்க உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராக உங்களுடைய கண்களுக்குமுன் தெளிவாக உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.

சகோதரர்களே, ஒருவன் எந்தவொரு குற்றத்தில் அகப்பட்டாலும், ஆவியானவருக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனைச் சீர்ப்படுத்துங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடி உன்னைக்குறித்து எச்சரிக்கையாக இரு. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள். ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று நினைத்தால், தன்னைத்தானே ஏமாற்றுகிறவன் ஆவான்.

மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கவேண்டும். ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான்.

நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல், மனிதர்களுடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவிதமான காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல், அன்புடன் சத்தியத்தில் நடந்து, தலையாகிய கிறிஸ்துவிற்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாக இருப்பதற்காக அப்படிச் செய்தார்.

எனவே, கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவென்றால், யூதரல்லாதவர்கள் தங்களுடைய வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடக்காமல் இருங்கள். அவர்கள் புத்தியில் இருள் அடைந்து, தங்களுடைய இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவன் தரும் ஜீவனுக்கு அந்நியர்களாக இருந்து;

அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் சரீர பாகங்களாக இருக்கிறபடியால், பொய்யைப் பேசாமல், ஒவ்வொருவனும் மற்றவனோடு உண்மையைப் பேசவேண்டும்.

கெட்டவார்த்தை எதுவும் உங்களுடைய வாய்களால் பேசவேண்டாம்; பக்திவளர்ச்சிக்கு தகுந்த நல்லவார்த்தை இருந்தால், கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாக இருப்பதற்காக அதையே பேசுங்கள்.

இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்;

முற்காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள். வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும். கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.

கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள்.

ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்; சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணிகளைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்; சாத்தான் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள். இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,

ஒருவனும் பொய்யான வாதங்களால் உங்களை ஏமாற்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.

உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.

மூட்டுகளாலும் தசை நரம்புகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாக வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல்,

நீங்கள் கிறிஸ்துவோடுகூட உலகத்தின் வழக்கங்களுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, மனிதர்களுடைய கட்டளைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசி பாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உடன்படுகிறதென்ன? இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே. இப்படிப்பட்டப் போதனைகள் சுயவிருப்பமான ஆராதனையையும், போலியான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானம் என்கிற பெயர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பாதுகாப்பதற்கேயன்றி வேறு எதற்கும் உபயோகப்படாது.

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே.

எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், விசுவாச துரோகம் முன்னதாக நடந்து, பின்பு அழிவின் மகனாகிய பாவமனிதன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் எல்லாவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாகச் சத்தியத்தை நேசிக்க அவர்கள் மறுத்ததினால் அப்படி நடக்கும். ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

ஆகவே, சகோதரர்களே, நீங்கள் உறுதிகொண்டு, வார்த்தையினாலாவது கடிதத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.

மேலும், சகோதரர்களே, எங்களிடம் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடக்காமல், சோம்பேறியாக இருக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டுவிலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.

மாறுபாடான உபதேசங்களைப் போதிக்காதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவளர்ச்சிக்கு ஏதுவாக இல்லாமல், வாக்குவாதங்களுக்கு ஏதுவாக இருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனிக்காதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்படி, நான் மக்கெதோனியாவிற்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்தில் இருக்கக் கேட்டுக்கொண்டபடியே செய். இந்த கட்டளையின் பொருள் என்னவென்றால், சுத்தமான இருதயத்திலும் நல்லமனச்சாட்சியிலும் மாயமில்லாத விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. இவைகளைச் சிலர் பார்க்காமல் வீண்பேச்சுக்கு இடம்கொடுத்து விலகிப்போனார்கள். தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள்.

எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார். தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும். உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும். ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.

ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள். திருமணம் செய்யக்கூடாது என்றும்,

இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய். சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கானவைகளை முயற்சிபண்ணு.

இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு. உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு. நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு. சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம். உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்திரு. உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும். போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் குற்றச்சாட்டை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது. மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவம் செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாகக் கடிந்துகொள். நீ பட்சபாதத்தோடு ஒன்றும் செய்யாமலும், விசாரிப்பதற்குமுன்பு முடிவுபண்ணாமலும், இவைகளைக் காத்துநடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களுக்கும்முன்பாக, உறுதியாகக் கட்டளையிடுகிறேன். யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள்.

ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வார்த்தைகளையும், தேவபக்திக்குரிய உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், மாறுபாடான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் பெருமை உள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கமும், வாக்குவாதமும் பண்ணுகிற நோய்கொண்டவனுமாக இருக்கிறான்; அவைகளினாலே பொறாமையும், சண்டையும், அவதூறுகளும், பொல்லாத சந்தேகங்களும் உண்டாகி, கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக இருக்கிற மனிதர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகி இரு.

ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபையானது உன்னோடு இருப்பதாக. ஆமென்.

இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் தோல்வியடையச் செய்வதற்கு ஏதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாகவும் சத்திய வசனத்தை நிதானமாகப் பகுத்துப் போதிக்கிறவனாகவும் உன்னை தேவனுக்குமுன்பாக உத்தமனாக நிறுத்தும்படி விழிப்பாக இரு. சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தி உள்ளவர்கள் ஆவார்கள்;

அவர்களுடைய வார்த்தை அழுகல் நோயைப்போல பரவும்; இமெனேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்துவிட்டதென்று சொல்லி, சிலருடைய நம்பிக்கையை அழித்துப்போடுகிறார்கள். ஆனாலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன் என்பதும், அதற்கு முத்திரையாக இருக்கிறது.

புத்தியீனமும் அறிவில்லாததுமான வாக்குவாதங்கள் சண்டைகளை உண்டாக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகி இரு. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாக அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

எப்படியென்றால், மனிதர்கள் தற்பிரியர்களாகவும், பணப்பிரியர்களாகவும், வீம்புக்காரர்களாகவும், அகந்தை உள்ளவர்களாகவும், நிந்திக்கிறவர்களாகவும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி இல்லாதவர்களாகவும், பரிசுத்தமில்லாதவர்களாகவும், மெய்யான அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்காதவர்களாகவும், அவதூறு செய்கிறவர்களாகவும், இச்சையடக்கம் இல்லாதவர்களாகவும், கொடுமை செய்கிறவர்களாகவும், நல்லவைகளை வெறுக்கிறவர்களாகவும், துரோகிகளாகவும், துணிகரம் உள்ளவர்களாகவும், இறுமாப்பு உள்ளவர்களாகவும், தேவனுக்குப் பிரியமானவர்களாக இல்லாமல் சுகபோகப்பிரியர்களாகவும், தேவ பக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு.

பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுக்கப்பட்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாக இருக்கிற பெண்களுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.

யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்துநின்றதுபோல இவர்களும் சத்தியத்திற்கு எதிர்த்துநிற்கிறார்கள்; இவர்கள் தீய சிந்தையுள்ள மனிதர்கள், விசுவாச காரியத்தில் பரீட்சைக்கு நிற்காதவர்கள். ஆனாலும், இவர்கள் அதிகமாகப் பலப்படுவதில்லை; அந்த இருவருடைய அறிவீனம் எல்லோருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய அறிவீனமும் வெளிப்படும்.

அன்றியும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேவபக்தியாக நடக்க விருப்பமாக இருக்கிற அனைவரும் துன்பப்படுவார்கள். பொல்லாதவர்களும் ஏமாற்றுகிறவர்களாகவும் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவும் இருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.

நீ கற்று உறுதிசெய்துகொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை யாரிடத்திலிருந்து கற்றுக்கொண்டாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது.

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் கவனமாக திருசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் தவறென்று எடுத்துறைத்து, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவி கொடுக்காதவர்களாகி, தங்களுடைய சுயவிருப்பங்களுக்குத் தகுந்த போதகர்களைத் தங்களுக்கு மிகுதியாக சேர்த்துக்கொண்டு. சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும்.

ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்து பேசுகிறவர்களைக் கடிந்துகொள்ளவும் வல்லவனுமாக இருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளுகிறவனுமாக இருக்கவேண்டும். அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள். அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள். கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான். இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல், விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள். சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாக இருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாக இருக்காது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாக இருக்கும். அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.

நீயோ ஆரோக்கியமான உபதேசத்திற்குரியவைகளைப் போதிக்கவேண்டும். முதிர்வயதுள்ள ஆண்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாக இருக்கும்படி புத்திசொல்லு.

முதிர்வயதுள்ள பெண்களும் அப்படியே பரிசுத்தத்திற்குரியவிதமாக நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்திற்கு அடிமைப்படாதவர்களுமாக இருக்கவும், தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு வாலிபப் பெண்கள் தங்களுடைய கணவர்களிடமும், தங்களுடைய பிள்ளைகளிடமும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாக இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தக்க நல்லகாரியங்களைப் போதிக்கிறவர்களுமாக இருக்கவும் முதிர்வயதுள்ள பெண்களுக்குப் புத்திசொல்லு.

அப்படியே, இளைஞர்களும் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கவும் நீ புத்திசொல்லி, நீயே எல்லாவற்றிலும் உன்னை நல்ல செயல்களுக்கு மாதிரியாகக் காண்பித்து, எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே வேறுபாடில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாக இருப்பாயாக.

வேலைக்காரர்கள் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவிதத்திலும் கவரக்கூடியதாக்கும்படி, தங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, எல்லாவிதத்திலும் உண்மையையும் நேர்மையையும் காண்பிக்கும்படி புத்திசொல்லு.

புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டுவிலகு; அவைகள் பிரயோஜனமில்லாததும் வீணானதாகவும் இருக்கும். வேதப்புரட்டனாக இருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருமுறை புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாகப் பாவம் செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.

எனவே, நாம் கேட்டவைகளைவிட்டு விலகாமல் இருக்க, அவைகளை அதிக கவனமாகக் கவனிக்கவேண்டும். ஏனென்றால், தேவதூதர்கள் மூலமாகச் சொல்லப்பட்ட வசனத்திற்கு எதிரான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலாவது கர்த்தர் மூலமாக அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடம் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,

சகோதரர்களே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் யாருக்கும் இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கமாட்டார்கள் என்று அவர் யாரைப்பற்றி ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைப்பற்றித்தானே? எனவே, அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கமுடியாமல் போனார்கள் என்று பார்க்கிறோம்.

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

ஏனென்றால், ஒருமுறை பிரகாசிக்கப்பட்டும், பரலோக பரிசை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறதினால், மனந்திரும்புவதற்காக அவர்களை மீண்டும் புதுப்பிக்கிறது முடியாதகாரியம்.

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல், நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும். மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று நினைத்து, கிருபையின் ஆவியை அவமதிக்கிறவன் எவ்வளவு கொடிய தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.

ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாமல் இருக்கவும், எந்தவொரு கசப்பான வேர் முளைத்து எழும்பிக் கலகம் உண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாமல் இருக்கவும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருநேர உணவிற்காக தன் புத்திரசுவிகாரத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், பின்பதாக அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும், தகுதியற்றவன் என்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடு தேடியும் மனம் மாறுதலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

பலவிதமான அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல் இருங்கள். உணவுபொருட்களால் இல்லை, கிருபையினாலே இருதயம் உறுதிப்படுத்தப்படுகிறது நல்லது; உணவுபொருட்களால் பயனில்லையே.

உங்களுடைய விசுவாசத்தின் பரீட்சையானது சகிப்புத்தன்மையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும். உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள். ஏனென்றால், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாக இருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அந்த இடத்தைவிட்டுப் போனவுடனே, தன் சாயல் என்னவென்பதை மறந்துவிடுவான்.

என் சகோதரர்களே, அதிக தண்டனையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகர்களாகாதிருங்கள். நாம் எல்லோரும் அநேக காரியங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணமனிதனும், தன் சரீரம் முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாக இருக்கிறான்.

அப்படியே, நாக்கானதும் சிறிய உறுப்பாக இருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது!

ஆகவே, விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையுயர்ந்தது; கீழ்ப்படியாமல் இருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுகிறதற்கான கல்லும், விழுகிறதற்கான கன்மலையும் ஆனது;” அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்து இடறுகிறார்கள்; அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும், கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,

கர்த்தராகிய தேவனை உங்களுடைய இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களுக்குள் இருக்கிற நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதில்சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள். கிறிஸ்துவிற்குரிய உங்களுடைய நல்ல நடக்கையை அவமதிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று உங்களுக்கு எதிராகச் சொல்லுகிற விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி நீங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக இருங்கள்.

தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருங்கள், விழித்திருங்கள்; ஏனென்றால், உங்களுடைய எதிராளியாகிய பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம்போல யாரை விழுங்கலாமோ என்று தேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்தில் உள்ள உங்களுடைய சகோதரர்களும் அப்படிப்பட்டப் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே.

வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும். தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

கள்ளத்தீர்க்கதரிசிகளும் மக்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் அழிவிற்குரிய வேதப்புரட்டுகளைத் தந்திரமாக நுழையப்பண்ணி, தங்களை விலைக்கொடுத்து வாங்கின ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு வேகமான அழிவை வரவழைத்துக்கொள்வார்கள். அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும். பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது.

கர்த்தரும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மீண்டும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையைவிட அதிக தீமையுள்ளதாக இருக்கும். அவர்கள் நீதியின் பாதையை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைவிட்டுவிலகுவதைவிட, அதை அறியாமல் இருந்தார்களானால் அவர்களுக்கு நலமாக இருக்கும்.

எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும் புரட்டுகிறார்கள்.

ஆகவே, பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் தெரிந்திருக்கிறதினால், அக்கிரமக்காரர்களுடைய வஞ்சகத்தினாலே நீங்கள் இழுக்கப்பட்டு உங்களுடைய உறுதியில் இருந்து விலகி விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது. நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம்.

அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடிக்கிறவர்களாக இருப்போமானால், அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யனாக இருக்கிறான், அவனுக்குள் சத்தியம் இல்லை. அவருடைய வசனத்தைக் கடைபிடிக்கிறவனிடத்தில் தேவ அன்பு உண்மையாகவே பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

உங்களை ஏமாற்றுகிறவர்களைக்குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டியதில்லை; அந்த அபிஷேகம் எல்லாவற்றையும்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாக இருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள். தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாம் என்றால்: சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்கிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்யாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

அவர்கள் உலகத்திற்குரியவர்கள், ஆகவே, உலகத்திற்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாகாதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி எதுவென்றும் ஏமாற்றும் ஆவி எதுவென்றும் அறிந்திருக்கிறோம்.

நாம் அவருடைய கட்டளைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கட்டளை இதுவே.

சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக ஏமாற்றுக்காரர்கள் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே ஏமாற்றுக்காரனும், அந்திக்கிறிஸ்துவுமாக இருக்கிறான். உங்களுடைய செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெற்றுக்கொள்வதற்கு எச்சரிக்கையாக இருங்கள்.

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்காமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவன் இல்லை, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான்.

நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாக இருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, நான் வந்தால், அவன் எங்களுக்கு எதிராகப் பொல்லாத வார்த்தைகளைப் பேசி, செய்துவருகிற செயல்களை ஞாபகப்படுத்துவேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தன்னுடைய சகோதரர்களை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்கு வெளியே தள்ளுகிறான்.

பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது. ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.

நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்;

உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.

ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு. அப்படியே நிக்கொலாய் மதத்தினருடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்களும் உன்னிடம் உண்டு; அதை நான் வெறுக்கிறேன். நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன்.

ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.

உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிரும் இல்லை அனலும் இல்லை; நீ குளிராக அல்லது அனலாக இருந்தால் நன்றாக இருக்கும். இப்படி நீ குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கிறதினால் உன்னை என் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன். நீ பாக்கியமில்லாதவனாகவும், பரிதாபப்படத்தக்கவனாகவும், தரித்திரனும், பார்வை இல்லாதவனாகவும், நிர்வாணியாகவும் இருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவான் என்றும், பொருளாதார வசதிபடைத்தவன் என்றும், எனக்கு ஒரு குறையும் இல்லை என்றும் சொல்லுகிறதினால்;

நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; எனவே நீ எச்சரிக்கையாக இருந்து, மனம்திரும்பு.

உலகம் முழுவதையும் ஏமாற்றுகிறவன் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய பெரிய இராட்சசப் பாம்பு தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதோடு அதைச் சேர்ந்த தூதர்களும் தள்ளப்பட்டார்கள். அப்பொழுது வானத்திலே ஒரு பெரியசத்தம் உண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சாட்டும்படி அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தூக்கி எறியப்பட்டான். மரணம் சம்பவிக்கிறதாக இருந்தாலும் அதற்குத் தப்பிப்பதற்காக தங்களுடைய உயிரையும் பார்க்காமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்களுடைய சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: “என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நடக்கும் வாதைகளில் சிக்காமலும் இருக்கும்படி அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணமகன் மற்றும் மணமகளுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன்னுடைய வியாபாரிகள் உலகத்தின் முக்கிய நபர்களாக இருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா நாட்டு மக்களும் மோசம்போனார்களே.

அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள்.

பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய இராட்சசப் பாம்பை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருடங்கள் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.

மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் செல்வதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மட்டும் அதில் செல்வார்கள்.

நாய்களும், சூனியக்காரர்களும், விபசாரக்காரர்களும், கொலைபாதகர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற அனைவரும் வெளியே இருப்பார்கள்.

இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற அனைவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாவது எடுத்துப்போட்டால், ஜீவபுத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

Tamil - தமிழ் - TA

TAMIRV'19 - Tamil Indian Revised Version - 2019

This Bible text is from Tamil Indian Revised Version IRV 2019
https://open.bible/bibles/tamil-bridge-text-bible/
provided by: Bridge Connectivity Solutions Pvt Ltd, available by Creative Commons CC-BY-SA-4.0,
and this new compilation is shared as www.creativecommons.org/licenses/by-sa/4.0.
Languages are made available to you by www.ipedge.net