25 – பணம்

இவை சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள்.
மனிதர்களின் வார்த்தைகளில் நமக்கு அக்கறை இல்லை.
கடவுளை நேசிக்கும் எவருக்கும்... இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: பணம்.

முதல் 3 மிக முக்கியமான வசனங்கள்

பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.

போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும். செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள். பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார். சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார். அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.

நியமன வரிசையில் ஒவ்வொரு வசனமும் - 384 பத்திகள்

சிலநாட்கள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் பழங்களைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார். காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது.

ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான சொத்துக்களையுடைய செல்வந்தனாக இருந்தான்.

அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது.

உன் எதிரிகளை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

யெகோவா என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் செல்வந்தனாக இருக்கிறார்; யெகோவா அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.

பின்பு அந்த வேலைக்காரன் வெள்ளிப் பொருட்களையும், தங்கத்தினால் செய்யப்பட்ட பொருட்களையும், ஆடைகளையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமல்லாமல், அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்தான்.

ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; யெகோவா அவனை ஆசீர்வதித்ததால் அந்த வருடத்தில் 100 மடங்கு பலனை அடைந்தான்; அவன் செல்வந்தனாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக வேலைக்காரரும் இருந்ததால் பெலிஸ்தர் அவன்மேல் பொறாமைகொண்டு,

நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்” என்று சொல்லிப் பொருத்தனை செய்துகொண்டான்.

இப்படி யோசேப்பு அளக்கமுடியாத அளவிற்குக் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.

தேசமெங்கும் பஞ்சம் உண்டானதால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவர அதிகமானது. அனைத்து தேசங்களிலும் பஞ்சம் அதிகமாக இருந்ததால், அனைத்து தேசத்தார்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.

யோசேப்பு தன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாக ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.

பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடைக்காமல்போனது; எகிப்துதேசமும் கானான்தேசமும் பஞ்சத்தினாலே நலிந்துபோனது. யோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் வாங்கியவர்களிடத்திலிருந்து பெற்று, அதைப் பார்வோன் அரண்மனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான். எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர்கள் எல்லோரும் யோசேப்பினிடத்தில் வந்து: “எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமக்கு முன்பாகச் சாகவேண்டுமோ” என்றார்கள். அதற்கு யோசேப்பு: “உங்களிடத்தில் பணம் இல்லாமல்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன்” என்றான். அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருடம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான். அந்த வருடம் முடிந்தபின், அடுத்தவருடத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: “பணமும் செலவழிந்துபோனது; எங்களுடைய ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்களுடைய சரீரமும், நிலமுமே அல்லாமல், எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல. நாங்களும் எங்களுடைய நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்களுடைய நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்களுடைய நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாகப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும்” என்றார்கள். அப்படியே எகிப்தியர்கள் தங்களுக்குப் பஞ்சம் அதிகமானதால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் எல்லாவற்றையும் பார்வோனுக்காக வாங்கினான்; இந்த விதமாக அந்த பூமி பார்வோனுடையதாயிற்று. மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரைக்குமுள்ள மக்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகச்செய்தான்.

ஒவ்வொரு பெண்ணும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியையும், பொன் நகைகளையும், ஆடைகளையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்களுடைய மகன்களுக்கும் உங்களுடைய மகள்களுக்கும் அணிவித்து, எகிப்தியர்களைக் கொள்ளையிடுவீர்கள்” என்றார்.

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வரச்செய்வேன்; மக்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன். ஆறாம் நாளிலோ, அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும்” என்றார்.

மோசே அவர்களை நோக்கி: “ஒருவனும் அதிகாலைவரை அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்; மோசேயின் சொல் கேட்காமல், சிலர் அதில் அதிகாலைவரை சிறிதளவு மீதியாக வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான்.

களவு செய்யாதே.

பிறனுடைய வீட்டின்மேல் ஆசைப்படாமல் இரு; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுடைய எதின்மேலும் ஆசைப்படாமல் இரு” என்றார்.

நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்க வேண்டாம்.

“ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவனிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.

ஒருவன் பிறனிடம் பணத்தையோ, பொருட்களையோ பாதுகாப்பிற்காக வைத்திருக்கும்போது, அது அவனுடைய வீட்டிலிருந்து திருட்டுப்போனால், திருடன் அகப்பட்டால், அவன் அதற்கு இருமடங்காக கொடுக்கவேண்டும். திருடன் அகப்படாவிட்டால், அந்த வீட்டுக்காரன் தான் பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடம் அவனைக் கொண்டுபோகவேண்டும்.

உங்களுக்குள் ஏழையாக இருக்கிற என்னுடைய மக்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடம் வட்டி வாங்கவேண்டாம்.

“இஸ்ரவேலர்கள் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாக உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடம் எனக்குக் காணிக்கையை வாங்கிக்கொள்.

“உங்களுக்கு இருப்பதிலே யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,

மனப்பூர்வமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும், தங்கத்தினாலான ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான எல்லாவித பொன் ஆபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் தங்கத்தைக் காணிக்கையாகச் செலுத்தினான்.

மோசேயை நோக்கி: “யெகோவா செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை மக்கள் கொண்டுவருகிறார்கள்” என்றார்கள். அப்பொழுது மோசே “இனி ஆண்களோ பெண்களோ பரிசுத்த ஸ்தலத்திற்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம்” என்று முகாம் எங்கும் சொல்லும்படிக் கட்டளையிட்டான்; இப்படியாக மக்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது. செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாகவும் இருந்தது.

“ஒருவன் யெகோவாவுக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானை ஏமாற்றி, அல்லது ஒரு பொருளை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடையூறுசெய்து, அல்லது காணாமற்போனதைக் கண்டுபிடித்து அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாக சத்தியம் செய்து, மனிதர்கள் செய்யும் இதைப்போல யாதொரு காரியத்தில் பாவம்செய்தான் என்றால்,

“நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், உன் திராட்சைத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை ஏழைகளுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. “நீங்கள் திருடாமலும், வஞ்சனைசெய்யாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.

“பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்வரை உன்னிடத்தில் இருக்கக்கூடாது.

“நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக. நியாயமான தராசும், நியாயமான நிறைகல்லும், நியாயமான மரக்காலும், நியாயமான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா.

“உங்கள் தேசத்தின் விளைச்சலை நீங்கள் அறுக்கும்போது, வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் அந்நியனுக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.

ஆறுவருடங்கள் உன் வயலை விதைத்து, உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்கி, அதின் பலனைச் சேர்ப்பாயாக. ஏழாம் வருடத்திலோ, தேசத்திற்கு யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வாக இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்காமலும், தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல்விட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்திற்கு அது ஓய்வு வருடமாக இருப்பதாக.

“மேலும், ஏழு ஓய்வு வருடங்களுள்ள ஏழு ஏழு வருடங்களைக் கணக்கிடுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருடங்களும் நாற்பத்தொன்பது வருடங்களாகும். அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கச்செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கச்செய்யவேண்டும். “50 வது வருடத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிமக்களுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருடம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் சொந்த இடத்திற்கும், குடும்பத்திற்கும் திரும்பிப் போகக்கடவன். அந்த ஐம்பதாம் வருடம் உங்களுக்கு யூபிலி வருடமாக இருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல் விடப்பட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக. அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும்; அந்த வருடத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் சாப்பிடவேண்டும்.

“உன் சகோதரன் ஏழ்மையடைந்து, வசதியில்லாமல் போனவனானால் அவனை ஆதரிக்கவேண்டும்; அந்நியனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் அவன் உன்னோடே பிழைப்பானாக.

நீ அவன் கையில் வட்டியையாவது லாபத்தையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னுடன் பிழைக்கச் செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தை லாபத்திற்கும் கொடுக்காதே.

“தேசத்திலே நிலத்தின் வித்திலும், மரங்களின் பழங்களிலும், தசமபாகம் எல்லாம் யெகோவாவுக்கு உரியது; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.

பின்னும் யெகோவா ஆரோனை நோக்கி: “அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் மக்கள் நடுவில் நானே உன்னுடைய பங்கும் உன்னுடைய சுதந்தரமுமாக இருக்கிறேன். “இதோ, லேவியின் சந்ததி ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ லேவியரோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் யெகோவாவுக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும். நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும். இப்படியே நீங்கள் இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்களுடைய பங்குகளிலெல்லாம் நீங்களும் யெகோவாவுக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும். உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள சிறந்த பரிசுத்த பங்கையெல்லாம் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

எங்களுடைய தகப்பனுக்கு மகன் இல்லாததினாலே, அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் சொந்த நிலம் கொடுக்கவேண்டும்” என்றார்கள். மோசே அவர்களுடைய நியாயத்தைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டு போனான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “செலொப்பியாத்தின் மகள்கள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரர்களுக்குள்ளே சொத்து கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சொத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய். மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: ஒருவன் மகன் இல்லாமல் இறந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் மகளுக்குக் கொடுக்கவேண்டும். அவனுக்குக் மகளும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும். அவனுக்குச் சகோதரர்களும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும். அவன் தகப்பனுக்குச் சகோதரர்கள் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் நெருங்கிய உறவின் முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்க வேண்டும்; இது, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்கு நியாயவிதிப்பிரமாணமாக இருப்பதாக என்று சொல்” என்றார்.

ஆகையால், யெகோவாவுடைய சந்நிதியில் எங்களுடைய ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய காலணிகளையும், கை அணிகளையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம்” என்றார்கள்.

சுதந்தரமானது ஒரு கோத்திரத்தை விட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாது; இஸ்ரவேல் மக்களுடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.

திருடாதிருப்பாயாக.

மற்றவனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; அவனுடைய வீட்டையும், நிலத்தையும், வேலைக்காரனையும், வேலைக்காரியையும், எருதையும், கழுதையையும், மேலும் அவனுக்குச் சொந்தமான எதையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

அது குறையில்லாமல் அப்பம் சாப்பிடத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அதின் கற்கள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டியெடுக்கத்தக்க மலைகள் உள்ளதுமான தேசம்.

நீ சாப்பிட்டுத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் மிகுதியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் பெருகும்போதும், உன் இருதயம் பெருமைகொள்ளாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தவரும், உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்வதற்காக, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்திரத்தின்வழியாக உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்தவரும், உன்னுடைய முற்பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்திரத்திலே உன்னைப் பராமரித்துவந்தவருமான உன் தேவனாகிய யெகோவாவை நீ மறக்காமலும், என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய யெகோவாவை நினைப்பாயாக; அவரே உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.

உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுக்கிறவருமாக இருக்கிறார்.

அங்கே உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், பொருத்தனைகளையும், உற்சாகபலிகளையும், ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து,

உங்கள் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப்படைக்கும் படைப்புகளையும், நீங்கள் யெகோவாவுக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,

உன்னுடைய தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் சாப்பிடவேண்டாம்.

“நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படி, வருடந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சைரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் சாப்பிடுவாயாக.

“ஏழாம் வருடத்தின் முடிவிலே விடுதலைசெய்வாயாக. விடுதலையின் விபரமாவது: மற்றவனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், யெகோவா நியமித்த விடுதலை கூறப்பட்டதால், அந்தக் கடனை மற்றவனிடத்திலாவது தன் சகோதரனிடத்திலாவது வாங்காமல் விட்டுவிடுவானாக. அந்நியனிடத்தில் நீ கடனை வசூலிக்கலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடுவதாக.

உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் மக்களுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் மக்களை ஆள்வாய், உன்னையோ அவர்கள் ஆள்வதில்லை.

“உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரர்களில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், அவனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறந்து, அவனுடைய அவசரத்தின் காரணமாக அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.

விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதென்று அறிந்து, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடுக்காமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். அவனுக்குத் தாராளமாகக் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதன்காரணமாக உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய எல்லாக் செயல்களிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று ஆசரித்து, உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததற்குத்தக்கதாக உன்னால் முடிந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,

ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.

அவனுடைய இருதயம் பின்வாங்கிப் போகாமலிருக்க அவன் அநேகம் மனைவிகளைத் திருமணம் செய்யவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாகப் பெருகச்செய்யவும் வேண்டாம்.

அவர்களுடைய சகோதரர்களுக்குள்ளே அவர்களுக்கு உரிமையில்லை; யெகோவா அவர்களுக்குச் சொன்னபடியே, அவரே அவர்களுடைய சொத்து.

“உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் உன்னிடத்திலிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை எடுத்துப்போடாதே.

“கடனாகக் கொடுக்கிற பணத்திற்கும், ஆகாரத்திற்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரனுடைய கையில் வட்டிவாங்காதே. அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா நீ கையிட்டுச்செய்யும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்க உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காதே.

“தன் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயத்துக்காக அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

நீ உன் திராட்சைப்பழங்களை அறுத்த பின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதை அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

எங்களை இவ்விடத்திற்கு அழைத்துவந்து, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார். இப்பொழுதும், இதோ, யெகோவாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய அறுவடைகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் பணிந்து, நீயும், லேவியனும் உன்னிடத்தில் இருக்கிற அந்நியனும் உன் தேவனாகிய யெகோவா உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த சகல நன்மைகளுக்காகவும் சந்தோஷப்படுவீர்களாக.

“தசமபாகம் செலுத்தும் வருடமாகிய மூன்றாம் வருடத்திலே, நீ உன் விளைச்சலில் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் அந்நியனும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் உன் வாசல்களில் சாப்பிட்டுத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்தபின்பு, நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருட்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும், அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை, மறக்கவும் இல்லை.

உனக்குக் கொடுப்பேன் என்று யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில், யெகோவா உன் கர்ப்பப்பிறப்பிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், யெகோவா உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் மக்களுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.

அனைத்து வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், யெகோவாவுக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் யெகோவாவின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.

லேவி கோத்திரத்திற்கு மோசே பங்கு கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தபடி, அவரே அவர்களுடைய பங்கு.

யெகோவா தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையச்செய்கிறவருமாக இருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவுடையவைகள்; அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார்.

யெகோவா நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார்; நாத்தான் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள், ஒருவன் செல்வந்தன், மற்றவன் தரித்திரன். செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிக அதிகமாக இருந்தது. தரித்திரனுக்கோ தான் விலைக்கு வாங்கி வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாமல் இருந்தது; அது அவனோடும் அவனுடைய பிள்ளைகளோடும் இருந்து வளர்ந்து, அவனுடைய அப்பத்தை சாப்பிட்டு, அவனுடைய பாத்திரத்திலே குடித்து, அவனுடைய மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. அந்த செல்வந்தனிடம் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல்செய்ய, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனமில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனிதனுக்குச் சமையல்செய்யச் சொன்னான் என்றான். அப்பொழுது தாவீது: அந்த மனிதன்மேல் மிகவும் கோபமடைந்து, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனிதன் மரணத்திற்கு ஏதுவானவன் என்று யெகோவாவுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். அவன் இரக்கமற்றவனாக இருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.

ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாக வாங்கி, என்னுடைய தேவனான யெகோவாவுக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன்னுடைய கையிலே விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்கு வாங்கிக்கொண்டான். அங்கே தாவீது யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது யெகோவா தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.

ஆலயத்தின் உட்புறத்தை சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் மறைப்புக்கும் பொன்சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன்தகட்டால் மூடினான். இப்படி ஆலயம் முழுவதும் கட்டிமுடியும்வரை, அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.

உள்ளேயும் வெளியேயும் இருக்கிற ஆலயத்து தரையையும் பொன்தகட்டால் மூடினான்.

பின்னும் யெகோவாவுடைய ஆலயத்திற்குத் தேவையான பணிப்பொருட்களையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்து அப்பங்களை வைக்கும் பொன் மேஜையையும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடும் உண்டாக்கினான். பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகாபரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான மொட்டுகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான மொட்டுகளையும் செய்தான்.

சாலொமோனுக்கு வியாபாரிகளும், நறுமணப்பொருட்களின் மொத்த வியாபாரிகளும், அரபிதேசத்து எல்லா ராஜாக்களும், மாகாணங்களின் அதிபதிகளும் கொண்டு வந்த பொன்னைத்தவிர,

ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிப்பொருட்களெல்லாம் பசும்பொன்னுமாக இருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாக நினைக்கப்படவில்லை. ராஜாவிற்குக் கடலிலே ஈராமின் கப்பல்களோடு தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். பூமியின் எல்லா ராஜாக்களையும்விட, ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாக இருந்தான்.

கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன்னுடைய கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயையும் தவிர, என்னிடத்தில் ஒரு அப்பமும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என்னுடைய மகனும் சாப்பிட்டு, சாப்பிட ஒன்றுமில்லாமையால் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்த இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன்னுடைய வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அப்பத்தைச் செய்து என்னிடம் கொண்டுவா; பின்பு உனக்கும் உன்னுடைய மகனுக்கும் செய்யலாம். யெகோவா தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்வரையும் பானையில் இருந்த மாவு தீர்ந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றான். அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவளுடைய வீட்டாரும் அநேகநாட்கள் சாப்பிட்டார்கள். யெகோவா எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மாவு தீர்ந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.

எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெயைத் தவிர உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அண்டைவீட்டுக்காரர்கள் எல்லோரிடத்திலும் அநேகம் காலியான பாத்திரங்களைக் கேட்டுவாங்கி, நீயும் உன் பிள்ளைகளும் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் ஊற்றி, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான். அவள் அவனிடத்திலிருந்துபோய், கதவைப் பூட்டிக்கொண்டு, மகன்கள் அவளிடத்தில் பாத்திரங்களை கொடுக்க, அவள் அவைகளில் ஊற்றினாள். அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின்பு, அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறு பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோனது. அவள் போய் தேவனுடைய மனிதனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீதம் இருக்கிறதைக்கொண்டு நீயும் உன் மகன்களும் வாழக்கையை நடத்துங்கள் என்றான்.

ஆதலால் எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான். அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா யெகோவாவுடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவிற்குக் கொடுத்தான்.

அங்கேயிருந்து யெகோவாவுடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம் யெகோவா சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு, எருசலேமியர்கள் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பத்தாயிரம்பேரையும், சகல தச்சர்களையும் கொல்லர்களையும் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை மக்களைத் தவிர வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.

யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என்னுடைய எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடு இருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடி அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.

இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைவரை அவர்களுக்கு அருகில் இருந்தவர்களும், கழுதைகள்மேலும், ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும், மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், உலர்ந்த திராட்சைப்பழங்கள், திராட்சைரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளைத் தேவையான அளவு ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டானது.

இதோ, நான் என்னுடைய சிறுமையிலே யெகோவாவுடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், எடைபோட முடியாத அதிகமான வெண்கலத்தையும் இரும்பையும் சேமித்தும், மரங்களையும் கற்களையும் சேமித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாக ஆயத்தம் செய்வாய்.

நான் என்னாலே முடிந்தவரை என்னுடைய தேவனுடைய ஆலயத்திற்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க கோமேதகக் கற்களையும், பலவர்ணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், பளிங்கு கற்கள் முதலிய கற்களையும் ஏராளமாகச் சேமித்தேன். இன்னும் என்னுடைய தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சேமித்த அனைத்தையும்தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என்னுடைய தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பத்தாயிரம் தங்கக்காசையும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள். யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள். இப்படி மனப்பூர்வமாகக் கொடுத்ததற்காக மக்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடு உற்சாகமாகக் யெகோவாவுக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.

ஐசுவரியமும் புகழும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சக்தியும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

இப்படி மனப்பூர்வமாகக் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் யார்? என்னுடைய மக்கள் யார்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் சேமித்திருக்கிற இந்தப் பொருட்களெல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.

அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்ததாலும், நீ ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும், உன் எதிரிகளின் உயிரையும், நீடித்த ஆயுளையும் கேட்காமல், நான் உன்னை அரசாளச்செய்த என் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டதாலும், ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.

ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.

ஆசாரியர்களும் லேவியர்களும் யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாகக் கைக்கொள்ள, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க மக்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான். இந்த வார்த்தை பிரபலமானபோது, இஸ்ரவேல் மக்கள் தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரவிலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாகக் கொடுத்தார்கள்.

மக்களுக்குள் அநேகரும் அவர்களுடைய பெண்களும் யூதர்களாகிய தங்களுடைய சகோதரர்கள்மேல் குற்றம் சாட்டுகிற பெரிய கூக்குரல் உண்டானது. அது என்னவென்றால், அவர்களில் சிலர்: நாங்கள் எங்களுடைய மகன்களோடும், மகள்களோடும் அநேகரானதால், சாப்பிட்டுப் பிழைப்பதற்காக நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள். வேறு சிலர்: எங்களுடைய நிலங்களையும், திராட்சைத்தோட்டங்களையும், வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள். இன்னும் சிலர்: ராஜாவிற்கு வரியை செலுத்த, நாங்கள் எங்களுடைய நிலங்கள்மேலும், திராட்சைத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்; எங்களுடைய உடலும், சகோதரர்கள் உடலும் சரி; எங்களுடைய பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்களுடைய மகன்களையும், மகள்களையும் அடிமையாக்கவேண்டியதாக இருக்கிறது; அப்படியே எங்களுடைய மகள்களில் சிலர் அடிமையாகவும் இருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு வழியில்லை; எங்களுடைய நிலங்களும், திராட்சைத்தோட்டங்களும் வேறு மனிதர்கள் கைவசமானது என்றார்கள். அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு, என்னுடைய மனதிலே ஆலோசனைசெய்து, பிறகு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்களுடைய சகோதரர்கள்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: யூதரல்லாதவர்களுக்கு விற்கப்பட்ட யூதர்களாகிய எங்கள் சகோதரர்களை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாக மீட்டிருக்கும்போது, நீங்கள் திரும்ப உங்கள் சகோதரர்களை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்திரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாக இருந்தார்கள். பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய எதிரிகளாகிய யூதரல்லாதவர்கள் அவமதிக்கிறதினாலே நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா? நானும் என்னுடைய சகோதரர்களும் என்னுடைய வேலைக்காரர்களும் இப்படியா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன் கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக. நீங்கள் இன்றைக்கு அவர்களுடைய நிலங்களையும், திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சைரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டனையாக வாங்கிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்றேன். அதற்கு அவர்கள்: நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிட வைத்தேன். நான் என்னுடைய ஆடையை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இப்படியாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாகப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லி, யெகோவாவை துதித்தார்கள்; பின்பு மக்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.

நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக குறிக்கப்பட்ட காலங்களில் வருடாவருடம் எங்கள் முன்னோர்களின் குடும்பங்களின்முறையே, எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், மக்களுக்கும் சீட்டுப்போட்டோம். நாங்கள் வருடந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித மரங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும், நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் மகன்களில் முதற்பிறந்தவர்களையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் முதற்பிறந்தவைகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியர்களிடத்திற்கும் கொண்டுவரவும், நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், எல்லா மரங்களின் முதற்பலனாகிய திராட்சைப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்க ஆசாரியர்களிடத்திற்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியர்களிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியர்களாகிய இவர்கள் எங்கள் வேளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும், லேவியர்கள் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் மகனாகிய ஒரு ஆசாரியன் லேவியர்களோடுகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர்கள் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் முடிவுசெய்துகொண்டோம். பரிசுத்த இடத்தின் பணிபொருட்களும், ஊழியஞ்செய்கிற ஆசாரியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் மக்களும், லேவிகோத்திரத்தார்களும் தானியம் திராட்சைரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இந்த விதமாக நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரிக்காமல் விடுவதில்லையென்று முடிவுசெய்துகொண்டோம்.

முற்காலத்தில் காணிக்கைகளும், சாம்பிராணியும், ஆலயப் பணிபொருட்களும், லேவியர்களுக்கும், பாடகர்களுக்கும், வாசல் காவலாளர்களுக்கும் ஒதுக்கப்பட்ட தானியம் திராட்சைரசம் எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியர்களைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம்செய்திருந்தான்.

அப்பொழுது யூதர்கள் எல்லோரும் தானியம் திராட்சைரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.

அவனுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 500 ஏர்மாடுகளும், 500 கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, மிகுதியான வேலைக்காரர்களும் இருந்தார்கள்; அதினால் அந்த மனிதன் கிழக்குப்பகுதியின் மக்களில் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். அவனுடைய மகன்கள், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களுடன் உணவு சாப்பிட அழைப்பார்கள்.

நிர்வாணியாக என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாக அவ்விடத்திற்குத் திரும்புவேன்; எனக்கு இருந்ததெல்லாம் யெகோவா கொடுத்தார், யெகோவா அவைகளை எடுத்தார்; யெகோவாவுடைய நாமத்திற்கு நன்றி என்றான்.

அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்; தேவன் அதை அவனுடைய வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.

அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டை அபகரித்தபடியினாலும்,

அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.

காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர்.

அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.

சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி, மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள். தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு, எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள். இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; வனாந்திரப் பகுதிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும். துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து, அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள். குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், உடையில்லாமல் இரவுதங்கி, மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள். அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள். அவனை உடையில்லாமல் நடக்கவும், பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும்,

தேவன் தண்டிப்பார் என்றும், அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது. நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும், என் செல்வம் அதிகமென்றும், என் கைக்கு அதிகமாக கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,

இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும், ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே.

யோபு தன் நண்பனுக்காக வேண்டுதல் செய்தபோது, யெகோவா அவனுடைய சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைவிட இரண்டுமடங்காகக் யெகோவா அவனுக்குத் தந்தருளினார்.

தேசத்தில் எங்கும் யோபின் மகள்களைப்போல அழகான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்கு சொத்துக்களைக் கொடுத்தான்.

என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.

துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.

தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்; என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர். நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.

தாவீதின் பாடல். யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.

யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.

ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும், ஏழையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவர் யார் யெகோவாவே, என்று என்னுடைய எலும்புகளெல்லாம் சொல்லும்.

யெகோவாவை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை. அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.

நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.

நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன், யெகோவாவோ என்மேல் நினைவாக இருக்கிறார்; தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்; என் தேவனே, தாமதிக்க வேண்டாம்.

இராகத்தலைவனுக்கு தாவீதின் பாடல். பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார். யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்; அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை.

தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, அவனை மீட்டுக்கொள்ளவும், அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே.

இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல், தன்னுடைய செல்வப்பெருக்கத்தை நம்பி, தன்னுடைய தீமையில் பலத்துக்கொண்ட மனிதன் இவன்தான் என்பார்கள்.

கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள்.

கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார்.

ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.

அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லோரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.

செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.

இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.

அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.

யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.

பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே; இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்.

அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால், அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

உன்னுடைய பொருளாலும், உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து. அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்.

ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள். அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல.

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே. உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.

என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று, அந்நியனுக்கு உறுதியளித்தால், நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய், உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய். உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும், உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள். வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.

திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்; அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்; தன்னுடைய வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.

செல்வமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது. என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.

அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.

செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.

நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.

கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.

அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான். நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள்.

வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் வறுமையடைபவர்களும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள்.

சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்;

ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு. மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான்.

வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.

நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.

தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு. பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு. எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும்.

தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்;

நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.

சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.

பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.

அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது.

பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை

சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம். புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான். வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.

புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.

தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான்.

ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது.

வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.

வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.

ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.

ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும். பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும்.

ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.

சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை. நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள். சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.

சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், அவனுடைய ஆசை அவனைக் கொல்லும். அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான்.

திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது; பொன் வெள்ளியைவிட தயையே நலம். செல்வந்தனும், தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் யெகோவா.

செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும். கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன்னுடைய உணவில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.

தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன், தனக்குக் குறைச்சல் உண்டாகவே செல்வந்தனுக்குக் கொடுப்பான்.

ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே. யெகோவா அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய உயிரைக் கொள்ளையிடுவார்.

உறுதியளித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.

செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, வானில் பறந்துபோகும்.

குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும்.

வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.

இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.

ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம்.

உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், அவனுக்கு சாப்பிட உணவு கொடு; அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; யெகோவா உனக்குப் பலனளிப்பார்.

செல்வம் என்றைக்கும் நிலைக்காது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?

இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன். வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான். அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன், தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.

தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான். உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான். பாரபட்சம் நல்லதல்ல, பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான். பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான். தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன்.

தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்; தன்னுடைய கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.

நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான்.

திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.

மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும்.

உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய். குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது.

சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள்.

நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கினேன். எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் எல்லாவகைக் கனிமரங்களையும் உண்டாக்கினேன். மரங்கள் பயிராகும் தோப்பிற்கு நீர்ப்பாய்ச்சுவதற்குக் குளங்களை உண்டாக்கினேன். வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர்கள் பிறந்தார்கள்; எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஆடுமாடு முதலான திரண்ட சொத்துகள் எனக்கு இருந்தது. வெள்ளியையும் பொன்னையும், ராஜபொக்கிஷங்களையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரர்களையும் சங்கீதக்காரிகளையும், மனுமக்களுக்கு இன்பமான பலவித சம்பாதித்தேன். எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட நான் பெரியவனும் செல்வம் நிறைந்தவனுமானேன்; என்னுடைய ஞானமும் என்னோடுகூட இருந்தது. என்னுடைய கண்கள் விரும்பிய ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடை செய்யவில்லை; என்னுடைய இருதயத்திற்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என்னுடைய மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது; இதுவே என்னுடைய பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன். என்னுடைய கைகள் செய்த எல்லா வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.

பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.

தன்னுடைய தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாக வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாகத் திரும்பப் போவான்; அவன் தன்னுடைய பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன்னுடைய கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.

தேவன் ஐசுவரியத்தையும் செல்வத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே சாப்பிடவும், தன்னுடைய பங்கைப் பெறவும், தன்னுடைய பிரயாசத்திலே மகிழ்ச்சியாக இருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய வெகுமதி.

அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும், பொருட்களையும், மதிப்பையும் கொடுக்கிறார்; அவன் என்ன ஆசைப்பட்டாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அனுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனிதன் அதை அனுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது.

விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.

காலையிலே உன்னுடைய விதையை விதை; மாலையிலே உன்னுடைய கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாகப் பயன்படுமோ என்றும் நீ அறியமாட்டாய்.

அவர்களுடைய தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்களுடைய தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய இரதங்களுக்கும் முடிவில்லை. அவர்களுடைய தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளாலும், தங்கள் விரல்களாலும் உருவாக்கிய சிலைகளைப் பணிந்துகொள்கிறார்கள்.

அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ,

தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள் உண்மையான உணவு அல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் ஏன் செலவழிக்கவேண்டும்? நீங்கள் எனக்குக் கவனமாகச் செவிகொடுத்து, சிறப்பானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பொருட்களினால் மகிழ்ச்சியாகும்.

பசியுள்ளவனுக்கு உன் உணவைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்தப்பட்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், ஆடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு ஆடை கொடுக்கிறதும், உன் உறவினனுக்கு உன்னை மறைக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்குப் பிரியமான உபவாசம்.

பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் இருள் மத்தியானத்தைப் போலாகும்.

அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் பக்கமாகத் திரும்பும், தேசங்களின் பலத்த படை உன்னிடத்திற்கு வரும். ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான், ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் அனைவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, யெகோவாவின் துதிகளைப் பிரபலப்படுத்துவார்கள்.

நான் வெண்கலத்திற்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரச்செய்து, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரர்களை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.

பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் அணிந்தாலும், பொன் ஆபரணங்களால் உன்னை அலங்கரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; ஆசைநாயகர்கள் உன்னை அசட்டைசெய்து, உன் உயிரை வாங்கத் தேடுவார்கள்.

உன்னுடைய எல்லாப் பாவங்களின் காரணமாக, உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் சொத்துக்களையும், உன் பொக்கிஷங்களையும் கூலியில்லாமல் சூறையிடுவிப்பேன்.

திரளான தண்ணீர்களின்மேல் வாசம்செய்கிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.

அவளுடைய மக்களெல்லோரும் ஆகாரத்தைத்தேடித் தவிக்கிறார்கள்; தங்களுடைய உயிரைக் காப்பாற்றத் தங்களுக்குப் பிரியமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; யெகோவாவே, நோக்கிப்பாரும்; நினைக்கப்படாதவளானேன்.

தங்களுடைய வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாக இருக்கும்; யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும் அவர்களுடைய பொன்னும் அவர்களை விடுவிக்கமுடியாது; அவர்கள் அதினால் தங்களுடைய ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்களுடைய வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்களுடைய அக்கிரமமே அவர்களுக்கு இடறலாக இருந்தது.

இதோ, கர்வமும், உணவுப்பெருக்கும், அலட்சியமான அக்கறை செலுத்தாதவைகளாகிய இவைகளே உன்னுடைய சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவளுடைய மகள்களிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை. அவர்கள் தங்களை உயர்த்தி, என்னுடைய முகத்திற்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன்.

ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன்னுடைய அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவித்து, வட்டிக்குக் கொடுக்காமலும், அதிக லாபம் வாங்காமலும், அநியாயத்திற்குத் தன்னுடைய கையை விலக்கி, மனிதர்களுக்குள்ள வழக்கை உண்மையாகத் தீர்த்து, என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாக இருந்தால் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாக இருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடுக்காமல், அசுத்தமான சிலைகளுக்கு நேராக தன்னுடைய கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து, வட்டிக்குக் கொடுத்து, அதிகமாக வட்டி வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் இறக்கவே இறப்பான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.

இரத்தம்சிந்தும்படி லஞ்சம் வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் அதிக வட்டியும் வாங்கி, பொருளாசையினால் உன்னுடைய அயலானுக்கு இடையூறு செய்து, என்னை மறந்துபோனாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

தேசத்தின் மக்கள் இடையூறு செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, அந்நியனை அநியாயமாகத் துன்பப்படுத்துகிறார்கள். நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவும் தகுந்த ஒரு மனிதனைத் தேடினேன், ஒருவனையும் காணவில்லை.

நீ உன்னுடைய ஞானத்தினாலும் உன்னுடைய புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன்னுடைய கருவூலங்களில் சேர்த்துக்கொண்டாய். உன்னுடைய வியாபாரத்தினாலும் உன்னுடைய மகா ஞானத்தினாலும் உன்னுடைய பொருளைப் பெருகச்செய்தாய்; உன்னுடைய இருதயம் உன்னுடைய செல்வத்தினால் மேட்டிமையானது. ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால், இதோ, தேசங்களில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை உனக்கு விரோதமாக வரச்செய்வேன்; அவர்கள் உன்னுடைய ஞானத்தின் அழகுக்கு விரோதமாகத் தங்களுடைய வாள்களை உருவி, உன்னுடைய சிறப்புகளைக் குலைத்துப்போடுவார்கள்.

உன்னுடைய இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து, நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்திற்கு விரோதமாகப்போவேன்; அலட்சியமாக சுகத்துடன் குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லோரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய். சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வியாபாரிகளும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும், மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள்.

பெல்ஷாத்சார் திராட்சைரசத்தை ருசித்துக் கொண்டிருக்கும்போது, அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். அவர்கள் திராட்சைரசம் குடித்து, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இரும்பும், மரமும், கல்லுமாகிய தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.

அவர்கள் எவ்வளவாகப் பெருகினார்களோ, அவ்வளவாக எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை வெட்கமாக மாறச்செய்வேன்.

அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயம்செய்ய விரும்புகிறான். எப்பிராயீம்: நான் செல்வந்தனானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் முயற்சிசெய்து தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான்.

நான் உங்களிடத்திற்கு அனுப்பின என் பெரிய படையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருடங்களின் விளைச்சலை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாக நடத்திவந்த உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் மக்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

நீங்கள் தரித்திரனை மிதித்து, அவனுடைய கையிலே தானியத்தைச் சுமைசுமையாக வாங்குகிறபடியினால், நீங்கள் வேலைப்பாடுள்ள கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சைத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை. உங்களுடைய மீறுதல்கள் மிகுதியென்றும், உங்களுடைய பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, லஞ்சம் வாங்கி, பட்டணத்தின் நுழைவுவாயிலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.

தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியச்செய்ய, எளியவர்களை விழுங்கி: நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரர்களைப் பணத்திற்கும், எளியவர்களை ஒரு ஜோடி காலணிகளுக்கும் வாங்கும்படியும், தானியத்தின் பதரை விற்கும்படியும், நாங்கள் கேட்ட கோதுமையை விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் சேமிப்புக்கிடங்குகளை திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.

வயல்களை விரும்பி அவைகளைப் பறித்துக்கொண்டு, வீடுகளை விரும்பி அவைகளை எடுத்துக்கொண்டு, மனிதனையும் அவனுடைய வீட்டையும், குடும்பங்களையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ,

இவர்களெல்லோரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான பழிச்சொல்லையும் கூறி, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எதுவரைக்கும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள். உன்னைக் கடிப்பவர்கள் உடனடியாக எழும்புவதும், உன்னை அலைக்கழிப்பவர்கள் விழிப்பதுமில்லையோ? நீ அவர்களுக்குச் சூறையாகாயோ?

அவர்களுடைய சொத்து கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.

யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும், பொன்னும் அவர்களைத் தப்புவிக்காது; அவருடைய எரிச்சலின் நெருப்பினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிமக்களையெல்லாம் விரைவாக அழிப்பார்.

வெள்ளியும் பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

உங்கள் பார்வைக்கு நல்லது என்று கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களுடன் சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளை கொடுத்தார்கள். யெகோவா என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று யெகோவாவுடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.

மனிதன் தேவனை ஏமாற்றலாமா? நீங்களோ என்னை ஏமாற்றுகிறீர்கள். எதிலே உம்மை ஏமாற்றினோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்தானே. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; மக்களாகிய நீங்கள் எல்லோரும் என்னை ஏமாற்றினீர்கள். என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகும்வரை உங்கள்மேல் ஆசீர்வாதத்தை பொழியச்செய்யமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப்பாருங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.

“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

“மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகவே, நீ தர்மம் செய்யும்போது, மனிதர்களால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்கள் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்தார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்.

பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.

இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது.

ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்களுடைய வாழ்க்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைவிட வாழ்க்கையும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன்? காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன்கூட தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். விசுவாசக்குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள். இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும். ஆகவே, நாளைக்காகக் கவலைப்படாமல் இருங்கள்; நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.

சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன, சில விதைகள் நூறாகவும், சில விதைகள் அறுபதாகவும், சில விதைகள் முப்பதாகவும் பலன் தந்தன.

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார்.

அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான். மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.

மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?

அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்களுடைய போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனைப் பார்த்து: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்களுடைய பிள்ளைகளிடத்திலோ, அந்நியர்களிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். அதற்குப் பேதுரு: அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனைப் பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே. ஆனாலும், நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிக்காசைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடு என்றார்.

எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால், அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று, கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: எஜமானனே! என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான். அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து, அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதிக்காமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான். நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

அதற்கு இயேசு: நீ தேவனுக்கு பூரண சற்குணனாக இருக்கவிரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குச் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான்.

அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது சுலபமல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள். இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.

அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். அதற்கு இயேசு: மறுபிறப்பின் காலத்திலே மனிதகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான். காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான். ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான். அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள். முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து: பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா? உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம். என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான். இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய அனைவரையும் வெளியே துரத்தி, காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து: என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள் என்றார்.

ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே.

அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான். ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான். அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன். ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி, அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.

அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை; அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள். தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.

நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி, ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது. இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.

சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, உயர்ந்து வளருகிற பயிராகி, ஒன்று முப்பதுமடங்காகவும், ஒன்று அறுபதுமடங்காகவும், ஒன்று நூறுமடங்காகவும் பலன் தந்தது.

வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக்கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதுமடங்கும், ஒன்று அறுபதுமடங்கும், ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்” என்றார்.

அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள். அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள். அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள். மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.

திருட்டும், பொருளாசைகளும், துஷ்டகுணங்களும், கபடும், காமமும், வன்கண்ணும், அவதூறும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாதவைகளாகிய இவைகள் எல்லாம் மனதிலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான். மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்?

இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார். அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான்.

அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார். சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார். அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.

அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான். அதற்கு இயேசு மறுமொழியாக: எனக்காகவும், நற்செய்திப் பணிக்காகவும், வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, குழந்தைகளையாவது, நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து, ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்: என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.

அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவர் என்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராக தேவனுடைய வழிகளைச் சத்தியமாகப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, இல்லையோ? நாம் வரி கொடுக்கலாமா, வேண்டாமா? என்று கேட்டார்கள். அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்ப்பதற்கு ஒரு பணத்தை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தப் படமும் மேலே உள்ள எழுத்தும் யாருடையது என்று கேட்டார்; ரோம அரசாங்கத்திற்கு உரியது என்றார்கள். அதற்கு இயேசு: அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, மக்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; செல்வந்தர்கள் அநேகர் அதிகமாகப் போட்டார்கள். ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்ற எல்லோரையும்விட இந்த ஏழை விதவை அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவர்களெல்லோரும் தங்களுடைய பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.

அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்? இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.

அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான்.

வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான்.

அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து: “தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது. இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி சிரிப்பீர்கள்.

செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள். திருப்தியுள்ளவர்களாக இருக்கிற உங்களுக்கு ஐயோ; நீங்கள் பசியாக இருப்பீர்கள். இப்பொழுது சிரிக்கிற உங்களுக்கு ஐயோ; இனித் துக்கப்பட்டு அழுவீர்கள்.

உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன் மேலாடையை எடுத்துக்கொள்ளுகிறவன் உன் ஆடையையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே.

உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களை நேசிக்கிறார்களே. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.

திரும்பக் கொடுப்பார்கள் என்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும், உன்னதமான தேவனுக்கு நீங்கள் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாக அளந்து, உங்களுடைய மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.

இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.

மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும்;

பொல்லாதவர்களாகிய நீங்களே உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

உங்களிடம் இருப்பதை ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குள் எல்லாம் சுத்தமாக இருக்கும். பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினா, மறிக்கொழுந்து ஆகிய எல்லாவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாமல் இருக்கவேண்டும்.

அப்பொழுது மக்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என் தகப்பனுடைய சொத்தை பாகம் பிரித்து என்னுடைய பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அவர்: மனிதனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் சொத்தை பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார். தேவனிடத்தில் செல்வந்தராக இருக்காமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.

பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். உணவைவிட ஜீவனும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகளாக இருக்கிறது. காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். மிகவும் சிறிய விஷயங்களை உங்களால் செய்யமுடியாதிருக்கும்போது, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் காலத்தில்இருந்து தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித்தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பிதாவானவர் அறிந்திருக்கிறார். தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை.

உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.

அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாவது உன் சகோதரர்களையாவது, உன் உறவினர்களையாவது, செல்வமுள்ள அண்டை வீட்டாரையாவது அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப்பதில் செய்ததாகும். நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார்.

அப்படியே உங்களில் எவனாவது தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.

அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ? கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா? அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான். சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான், அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.

பின்னும் அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: செல்வந்தனாகிய ஒரு மனிதனுக்கு நிர்வாகி ஒருவன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய சொத்துக்களை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் நிர்வாகத்தின் கணக்கைக் கொடு, இனி நீ நிர்வாகியாக இருக்கக்கூடாது என்றான். அப்பொழுது அந்த நிர்வாகி: நான் என்ன செய்வேன், என் எஜமான் நிர்வாக பொறுப்பிலிருந்து என்னை நீக்கிப்போடுகிறானே நிலத்தை பண்படுத்துவதற்கும்; எனக்குப் பெலனில்லை, பிச்சையெடுக்கவும் வெட்கப்படுகிறேன். நிர்வாகப் பொறுப்பைவிட்டு நான் நீக்கப்படும்போது, என்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு; தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது நிர்வாகி அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாக எழுது என்றான். பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு மூட்டை கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான். அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள்.

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாக இருக்கிறான். அநீதியான உலகப்பொருளில் நீங்கள் உண்மையாக இல்லாவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடம் நேர்மையான சொத்தை ஒப்புவிப்பார்கள்? வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால், உங்களுக்கு ஏதாவதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?

எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு பணிவிடை செய்யமுடியாது; ஒருவனைப் பகைத்து மற்றவனை நேசிப்பான், அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களாலே கூடாது என்றார். இவைகளையெல்லாம் பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர்களும் கேட்டு, அவரைப் பரிகாசம்பண்ணினார்கள்.

செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பெயர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் சரீர முழுவதும் கொப்பளங்கள் நிறைந்தவனாக, அந்த செல்வந்தனுடைய வாசலின் அருகே தங்கி, அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாக இருந்தான்; நாய்கள் வந்து அவன் கொப்பளங்களை நக்கிற்று. பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; செல்வந்தனும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாக்கைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினியில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடு இருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். அதுவுமல்லாமல், இந்த இடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அந்த இடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரர்கள் உண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்திற்கு வராதபடி, அவன்போய் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படியாக, நீர் அவனை என் தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.

வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.

அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது. செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார். அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான். அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

சகேயு நின்று, கர்த்த்தரைப் பார்த்து: ஆண்டவரே, என் சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாவது அநியாயமாக வாங்கினதுண்டானால், நாலுமடங்காகத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என்றான்.

பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்திற்குப் போகப் புறப்பட்டான். புறப்படும்போது, அவன் தன் வேலைக்காரர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து பொற்காசுகளைக் கொடுத்து: நான் திரும்பிவரும் வரைக்கும் இதைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்று சொன்னான். அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் இராஜாவாக இருக்கிறது எங்களுக்கு விருப்பமில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே பிரதிநிதிகளை அனுப்பினார்கள். அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் பொற்காசுகளைவாங்கியிருந்த அந்த வேலைக்காரர்களில் அவனவன் வியாபாரம் செய்து சம்பாதித்தது எவ்வளவென்று தெரிந்துகொள்ளும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான். அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் பத்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான். எஜமான் அவனைப் பார்த்து: நல்லது உத்தம வேலைக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாக இருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான். அப்படியே இரண்டாம் வேலைக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் ஐந்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான். அவனையும் அவன் பார்த்து: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான். பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனிதரென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான். அதற்கு அவன்: பொல்லாத வேலைக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனிதரென்று அறிந்தாயே, பின்னை ஏன் நீ என் பொற்காசை வங்கியிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடு பெற்றுக்கொள்ளுவேனே என்று சொல்லி; அருகில் நிற்கிறவர்களைப் பார்த்து: அந்த பொற்காசை அவனுடைய கையிலிருந்து எடுத்து, பத்துபொற்காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான். அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துபொற்காசுகள் இருக்கிறதே என்றார்கள். அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

பின்பு இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்பனை செய்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் வெளியே துரத்தத்தொடங்கி: “என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைத் திருடர்களுடைய குகையாக்கினீர்கள்” என்றார்.

இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமா இல்லையா, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? ஒரு நாணயத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற உருவமும் எழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுக்குரியதை இராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, செல்வந்தர்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்களுடைய காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: இந்த ஏழை விதவை மற்றெல்லோரையும்விட அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லோரும் தங்களுடைய நிறைவிலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.

தேவாலயத்திலே ஆடுகள், மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், பணம் மாற்றுகிறவர்கள் உட்கார்ந்திருக்கிறதையும் பார்த்து, கயிற்றினால் ஒரு சாட்டையை உண்டாக்கி, அவர்கள் அனைவரையும் ஆடுமாடுகளையும், தேவாலயத்திற்கு வெளியே துரத்திவிட்டு, பணம் மாற்றுக்காரர்களுடைய பணங்களைக் கொட்டி, மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு, புறா விற்கிறவர்களைப் பார்த்து: இவைகளை இந்த இடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தியின் வைராக்கியம் தீயைப்போல என்னை எரித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள்.

அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார்.

இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான்.

திருடன், திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரமாட்டான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிப் பணத்திற்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்காமல்போனது என்ன என்றான். அவன் ஏழைகளைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனாக இருந்ததினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனாக இருந்ததினாலும் இப்படிச் சொன்னான். அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் செய்யும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன் என்றார்.

அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டீர்கள். உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள்.

விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாக இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். நிலங்களையும் சொத்துக்களையும்விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவைக்குத்தக்கதாக அவைகளில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு,

அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் இருப்பதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,

திரளான விசுவாசக் கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; அனைத்தும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது. கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த உறுதியாக சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லோர்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது. நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவைக்குத்தக்கதாகப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாக இருந்ததில்லை.

சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலர்களாலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.

அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள். தன் மனைவியின் சம்மதத்தோடு அவன் விற்ற பணத்திலே ஒரு பங்கை மறைத்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான். பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றப்பின்பும் அதின் கிரயப்பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணம் கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் இல்லை, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.

அப்போஸ்தலர்கள் தங்களுடைய கரங்களை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறதை சீமோன் பார்த்தபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: நான் எவன்மேல் என் கரங்களை வைக்கிறேனோ, அவனும் பரிசுத்த ஆவியானவரைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். பேதுரு அவனைப் பார்த்து: தேவனுடைய வரத்தை பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாம் என்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடுகூட அழிந்து போகக்கடவது.

அப்பொழுது சீடர்களில் அவரவர்கள் தங்கள் தங்கள் தகுதிக்கேற்ப யூதேயாவில் குடியிருக்கிற சகோதரர்களுக்கு உதவிசெய்ய பணம் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.

ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைவிட கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.

இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்கு நீயே போதிக்காமல் இருக்கலாமா? திருடக்கூடாது என்று பிரசங்கம் பண்ணுகிற நீ திருடலாமா?

அன்றியும், உன் பகைவன் பசியாக இருந்தால், அவனுக்கு ஆகாரம் கொடு; அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு; நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.”

இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்களே. எனவே எல்லோருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; யாருக்கு வரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு வரியையும், யாருக்கு சொத்துவரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு சொத்துவரியையும் செலுத்துங்கள்; யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்குப் பயப்படுங்கள்; யாருக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அவனுக்கு மதிப்புக் கொடுங்கள். ஒருவரிலொருவர் அன்பு செலுத்துகிற கடனைத்தவிர, வேறு எதிலும் யாருக்கும் கடன்படாமல் இருங்கள்; அயலகத்தாரிடம் அன்புசெலுத்துகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சிக்காமல் இருப்பாயாக என்கிற இந்தக் கட்டளைகளும், வேறு எந்தக் கட்டளையும், உன்னிடத்தில் நீ அன்பாக செலுத்துவதுபோல மற்றவனிடமும் அன்புசெலுத்துவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது.

அநியாயக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாற்றப்படாமலிருங்கள்; வேசிமார்க்கத்தார்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், விபசாரக்காரர்களும், சுயபுணர்ச்சிக்காரர்களும், ஆண்புணர்ச்சிக்காரர்களும், திருடர்களும், பொருளாசைக்காரர்களும், வெறியர்களும், உதாசினக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

எனக்கு உண்டான எல்லாவற்றையும் நான் அன்னதானம் செய்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு இல்லையென்றால் எனக்கு பயன் ஒன்றுமில்லை.

பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் நன்கொடை பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்கு செய்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். நான் வந்திருக்கும்போது பணம் சேர்க்குதல் இல்லாதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவிற்கு ஏற்றபடி எதையாவது தன்னிடத்திலே சேர்த்துவைக்கவேண்டும்.

இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.

ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.

மேலும் அவர்கள் தங்களுடைய தகுதிக்கும், தங்களுடைய தகுதிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே விருப்பம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதற்கு, நான் சாட்சியாக இருக்கிறேன். தங்களுடைய உதவிகளையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை அதிகமாக வேண்டிக்கொண்டார்கள். மேலும் நாங்கள் எதிர்பார்த்தபடி கொடுக்காமல், தேவனுடைய விருப்பத்தினாலே தங்களைத்தாமே, முதலில் கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் செல்வந்தராக இருந்தும், நீங்கள் அவருடைய ஏழ்மையினாலே செல்வந்தர்களாவதற்கு, உங்களுக்காக ஏழையானாரே.

ஒருவனுக்கு மனவிருப்பம் இருந்தால், அவனுக்கு இல்லாதவைகளின்படியல்ல, அவனுக்கு இருக்கிறவைகளின்படியே அங்கீகரிக்கப்படும். மற்றவர்களுக்கு உதவியும், உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்கும்படியாகவே சொல்லுகிறேன். எப்படியென்றால், அதிகமாகச் சேர்த்தவனுக்கு அதிகமானதும் இல்லை, கொஞ்சமாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை என்று எழுதியிருக்கிறபடி, ஏற்றத்தாழ்வற்றப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்களுடைய வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.

ஆகவே, வாக்குறுதிபண்ணப்பட்டிருக்கிற உங்களுடைய தர்ம உதவியானது கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்டதாக இல்லாமல், தாராளமாகக் கொடுக்கப்பட்டதாக இருப்பதற்காக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரர்களை முதலில் உங்களிடம் அனுப்புவது அவசியம் என்று எனக்குத் தோன்றியது.

பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான். அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார். மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகவும், எல்லாவித நல்ல செயல்களிலும் பெருகுகிறவர்களாகவும் இருப்பதற்காக, தேவன் உங்களில் எல்லாவிதமான கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராக இருக்கிறார். வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும்.

விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுகிறதற்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவர் உங்களுக்கு விதையைக் கொடுத்து, அதைப் பெருகப்பண்ணி, உங்களுடைய நீதியின் விளைச்சலைப் பெருகச்செய்வார். நீங்கள் எல்லா வகையிலும் செல்வந்தராகி தாராளகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். இதனால் தேவனுக்கு எங்கள் மூலமாக ஸ்தோத்திரமுண்டாகும். இந்த தர்ம உதவியாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமட்டுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலன் உள்ளதாகவும் இருக்கும். அவர்கள் இந்த தர்ம உதவிகளாகிய நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கீழ்ப்படிதலோடு அறிக்கையிட்டதினால், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் தாராளமாக தர்ம உதவிகள் செய்கிறதினாலும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி;

ஏழைகளை நினைத்துக்கொள்ளச் சொன்னார்கள்; அப்படிச் செய்வதற்காக அதற்கு முன்னமே நானும் ஆவலாக இருந்தேன்.

உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.

ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாமல் இருந்தால் சரியான நேரத்தில் அறுப்போம். ஆகவே, நமக்குக் கிடைக்கும் வாய்ப்பின்படி, எல்லோருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மைசெய்வோம்.

பரிசுத்தவான்கள் எல்லோரையும்விட சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவில்லாத ஐசுவரியத்தை யூதரல்லாதவர்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

திருடுகிறவன் இனித் திருடாமல், குறைவாக உள்ளவனுக்குத் தன்னிடமிருந்து கொடுக்கும்படி, தன் கைகளினால் பயனுள்ள வேலைசெய்து முயற்சி செய்யவேண்டும்.

அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும்.

ஆனாலும், எனக்கு இலாபமாக இருந்தவைகள் எவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைத்தேன். அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எந்த இடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாக இருக்கவும், பட்டினியாக இருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் கற்றுக்கொண்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு. ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு பங்குகொண்டது நலமாக இருக்கிறது. மேலும், பிலிப்பியரே, நற்செய்தி ஊழியத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, உங்களைத்தவிர வேறு எந்த சபையும் எனக்குப் பணம் கொடுத்து உதவிசெய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியும். நான் தெசலோனிக்கேயில் இருந்தபோதும், என் குறைவுகளில் உதவிசெய்ய நீங்கள் பலமுறை பணம் அனுப்பி உதவி செய்தீர்கள். உங்களுடைய உதவிகளை நான் தேடாமல், உங்களுடைய உதவிகளால் உங்களுக்கு வரும் பலன் பெருகுவதையே பார்க்க விரும்புகிறேன். எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்களுடைய குறைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவிற்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள்.

எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள். இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள். எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.

ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,

ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.

போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும். செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள். பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும்,

எப்படியென்றால், மனிதர்கள் தற்பிரியர்களாகவும், பணப்பிரியர்களாகவும், வீம்புக்காரர்களாகவும், அகந்தை உள்ளவர்களாகவும், நிந்திக்கிறவர்களாகவும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி இல்லாதவர்களாகவும், பரிசுத்தமில்லாதவர்களாகவும்,

ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும்,

இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான்; ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதல் பெயராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாகும். இவன் தகப்பனும், தாயும், வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் வாழ்நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவனாக, தேவனுடைய குமாரனைப்போல என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். இவன் எவ்வளவு பெரியவனாக இருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம்கூட கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான். லேவியின் குமாரர்களில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் வம்சத்திலிருந்து வந்த தங்களுடைய சகோதரர்களான மக்களிடம் நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைப் பெற்றிருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய மெல்கிசேதேக்கு ஆபிரகாமிடம் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த அவனை ஆசீர்வதித்தான். சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதில் சந்தேகம் இல்லை. அன்றியும், இங்கே, தசமபாகம் வாங்குகிற மனிதர்கள் ஒருநாளில் மரித்துப்போவார்கள்; அங்கேயோ, ஆபிரகாமிடம் தசமபாகத்தைப் பெற்றுக்கொண்டவன், உயிரோடு இருப்பவன் என்று சாட்சிபெற்றவன். அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் முற்பிதாவாகிய ஆபிரகாமின் சரீரத்தில் இருந்ததினால், தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாகத் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.

விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து, நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான்.

நீங்கள் பணஆசை இல்லாதவர்களாக நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகளே போதும் என்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார்.

ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும். ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான். சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் அழிந்துபோவான்.

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.

ஏனென்றால், பொன்மோதிரமும் அழகான ஆடையும் அணிந்திருக்கிற ஒரு மனிதனும், கந்தையான ஆடை அணிந்திருக்கிற ஒரு ஏழ்மையானவனும் உங்களுடைய ஆலயத்திற்கு வரும்போது, அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பட்சபாதத்துடன், தகாத சிந்தனைகளோடு தீர்ப்பளிக்கிறவர்களாக இருப்பீர்களல்லவா? என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள்? உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ நிந்திக்கிறார்கள்?

உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீகப்பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.

என் சகோதரர்களே, ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், செயல்களில்லாதவனாக இருந்தால் அவனுக்குப் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது, ஆடையில்லாமலும், அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களைப் பார்த்து: நீங்கள் சமாதானத்தோடு போங்கள், குளிர்காய்ந்து பசியாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் பயன் என்ன? அப்படியே விசுவாசமும் செயல்களில்லாதிருந்தால் அது தன்னிலேதானே உயிரில்லாததாக இருக்கும்.

நீங்கள் விண்ணப்பம்செய்தும், உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டும் என்று தவறான நோக்கத்தோடு விண்ணப்பம்செய்கிறதினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.

மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இந்த பட்டணத்திற்குச் சென்று, அங்கே ஒரு வருடம் தங்கி, வியாபாரம் செய்து, பணம் சம்பாதிப்போம் என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே. ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.

செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்களுடைய செல்வம் அழிந்து, உங்களுடைய ஆடைகள் அந்து பூச்சிகளால் வீணாகப்போனது. உங்களுடைய பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாக சாட்சியாக இருந்து, அக்கினியைப்போல உங்களுடைய சரீரத்தை உண்ணும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.

இதோ, உங்களுடைய வயல்களை அறுவடைசெய்த வேலைக்காரர்களுடைய கூலியை நீங்கள் அநியாயமாகப் பிடித்து வைத்ததினால் அது கூக்குரலிடுகிறது; அறுவடைசெய்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளைச் சென்றடைந்தது. பூமியிலே நீங்கள் சொகுசாக வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும்நாளில் நடக்கிறதுபோல உங்களுடைய இருதயங்களைப் போஷித்தீர்கள்.

அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும்.

உங்களுடைய முன்னோர்களால் பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்துவந்த வீணான செயல்களில் இருந்து, அழிவுள்ள பொருட்களாகிய வெள்ளியினாலும் தங்கத்தினாலும் மீட்கப்படாமல்,

முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல், அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது.

உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும் நேசிக்காதீர்கள்; ஒருவன் உலகத்தை நேசித்தால் அவனிடம் பிதாவின் அன்பு இல்லை. ஏனென்றால், சரீரத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், வாழ்க்கையின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும் பேச்சினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்பு செலுத்துவோம்.

இப்படி நீ குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கிறதினால் உன்னை என் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன். நீ பாக்கியமில்லாதவனாகவும், பரிதாபப்படத்தக்கவனாகவும், தரித்திரனும், பார்வை இல்லாதவனாகவும், நிர்வாணியாகவும் இருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவான் என்றும், பொருளாதார வசதிபடைத்தவன் என்றும், எனக்கு ஒரு குறையும் இல்லை என்றும் சொல்லுகிறதினால்; நான்: நீ ஐசுவரியவானாவதற்காக நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தெரியாதபடி நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்மையான ஆடைகளையும் என்னிடம் வாங்கிக்கொள்ளவும், நீ பார்வை பெறுவதற்காக உன் கண்களுக்கு மருந்து போடவேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

அப்பொழுது, ஒரு வெள்ளிக்காசுக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு வெள்ளிக்காசுக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.

பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு, மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;

அது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், சுதந்திரமானவர்கள், அடிமைகள், இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையோ, பெயரையோ, அந்த பெயரின் எண்ணையோ அணிந்துகொள்ளுகிறவனைத்தவிர வேறொருவனும் வாங்கவும் விற்கவும் முடியாதபடிக்கும் செய்தது.

“பூமியின் வியாபாரிகளும் தங்களுடைய பொருட்களான பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், மெல்லிய ஆடைகளையும், இரத்தாம்பரத்தையும், பட்டு ஆடைகளையும், சிவப்பு ஆடைகளையும், எல்லாவிதமான வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்த பொருள்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற பொருள்களையும், இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனிதர்களுடைய ஆத்துமாக்களையும் இனி வாங்குகிறவர்கள் இல்லை என்பதால் அவளுக்காக அழுது புலம்புவார்கள். உன் ஆத்துமா விரும்பிய பழவகைகள் உன்னைவிட்டு நீங்கிப்போனது; ஆடம்பரங்களும், செல்வச்செழிப்பும் உன்னைவிட்டு நீங்கிப்போனது; நீ அவைகளை இனிப் பார்ப்பதில்லை.

இப்படிப்பட்டவைகளினால் வியாபாரம் செய்து அவளால் செல்வந்தர்களாக மாறியவர்கள் அவளுக்கு உண்டான வாதையைப் பார்த்து பயந்து, தூரத்திலே நின்று; ஐயோ! மெல்லிய ஆடையும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் அணிந்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரே மணிநேரத்தில் எல்லாச் செல்வமும் அழிந்துபோனதே! என்று சொல்லி, அழுது துக்கத்தோடு இருப்பார்கள். கப்பல்களில் பயணம்செய்கிறவர்களும், மாலுமிகள் அனைவரும், கப்பலில் வேலை செய்கிறவர்களும், கடலில் தொழில்செய்கிற அனைவரும் தூரத்திலே நின்று,

அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன்.

ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும்.

Tamil - தமிழ் - TA

TAMIRV'19 - Tamil Indian Revised Version - 2019

This Bible text is from Tamil Indian Revised Version IRV 2019
https://open.bible/bibles/tamil-bridge-text-bible/
provided by: Bridge Connectivity Solutions Pvt Ltd, available by Creative Commons CC-BY-SA-4.0,
and this new compilation is shared as www.creativecommons.org/licenses/by-sa/4.0.
Languages are made available to you by www.ipedge.net