22 – அற்புதங்கள்

இவை சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள்.
மனிதர்களின் வார்த்தைகளில் நமக்கு அக்கறை இல்லை.
கடவுளை நேசிக்கும் எவருக்கும்... இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: அற்புதங்கள்.

முதல் 3 மிக முக்கியமான வசனங்கள்

அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.

அப்போஸ்தலர்களுடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் மக்களுக்குள்ளே செய்யப்பட்டது. சபையாரெல்லோரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் கூடியிருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. ஆனாலும் மக்கள் அவர்களைப் புகழ்ந்தார்கள். அநேக ஆண்களும், பெண்களும் விசுவாசமுள்ளவர்களாகி கர்த்தரிடத்தில் அதிகமதிகமாகச் சேர்க்கப்பட்டார்கள். சுகவீனமானவர்களைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகும்போது அவனுடைய நிழலாவது அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் சுகவீனமானவர்களையும் அசுத்தஆவிகளால் துன்புறுத்தப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லோரும் குணமாக்கப்பட்டார்கள்.

நியமன வரிசையில் ஒவ்வொரு வசனமும் - 266 பத்திகள்

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது.

தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.

பார்வோன் யோசேப்பை நோக்கி: “ஒரு கனவு கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு கனவைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன்” என்றான். அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்கு மறுமொழியாக: “நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்திரவு அருளிச்செய்வார்” என்றான்.

அங்கே யெகோவாவுடைய தூதன் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினித்தழலில் நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் பற்றி எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. அப்பொழுது மோசே: “இந்த முட்செடி வெந்துபோகாமல் இருக்கிறது ஏன், நான் அருகில் போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன்” என்றான். அவன் பார்க்கும்படி அருகில் வருகிறதைக் யெகோவா கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அவன்: “இதோ, அடியேன்” என்றான். அப்பொழுது அவர்: “இங்கே அருகில் வராமல் இரு; உன்னுடைய கால்களில் இருக்கிற காலணியைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார்.

யெகோவா அவனை நோக்கி: “உன்னுடைய கையில் இருக்கிறது என்ன” என்றார். “ஒரு கோல்” என்றான். “அதைத் தரையிலே போடு” என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது பாம்பாக மாறியது; மோசே அதற்கு விலகி ஓடினான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “உன்னுடைய கையை நீட்டி, அதின் வாலைப் பிடி” என்றார்; அவன் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவனுடைய கையிலே கோலானது. ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாக இருக்கிற தங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.

மேலும், யெகோவா அவனை நோக்கி: “உன் கையை உன்னுடைய மடியிலே போடு” என்றார்; அவன் தன் கையைத் தன்னுடைய மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவனுடைய கை உறைந்த பனியைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. அவர்: “உன்னுடைய கையைத் திரும்பவும் உன்னுடைய உன் மடியிலே போடு” என்றார். அவன் தன்னுடைய கையைத் திரும்பத் தன்னுடைய மடியிலே போட்டு, மீண்டும் வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலானது. அப்பொழுது அவர்: “முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்காமலும்போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன்னுடைய வார்த்தையைக் கேட்காமலும் இருந்தால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை எடுத்து நிலத்தில் ஊற்று; நதியில் எடுத்த தண்ணீர் காய்ந்த நிலத்தில் இரத்தமாகும்” என்றார்.

யெகோவா மோசேக்குச் சொல்லிய எல்லா வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, மக்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான். மக்கள் விசுவாசித்தார்கள்; யெகோவா இஸ்ரவேலர்களைச் சந்தித்தார் என்றும், அவர்களுடைய உபத்திரவங்களைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்து தொழுதுகொண்டார்கள்.

நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என்னுடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாக நடப்பிப்பேன்.

“உங்களை ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடு சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன்னுடைய கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது பாம்பாகும்” என்றார். மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களுக்கு முன்பாகவும் தன்னுடைய கோலைப் போட்டான், அது பாம்பானது. அப்பொழுது பார்வோன் ஞானிகளையும், சூனியக்காரர்களையும் அழைத்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் பாம்புகளாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கியது.

யெகோவா கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது. நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போனது; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியர்களுக்கு முடியாமற்போனது; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாக இருந்தது. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய வார்த்தைகளை கேட்காமற்போனான். பார்வோன் இதையும் சிந்திக்காமல், தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப்போனான்.

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: “எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு. நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்று சொன்னால், உன்னுடைய எல்லை முழுவதும் தவளைகளால் வாதிப்பேன். நதி தவளைகளைத் திரளாக பிறப்பிக்கும்; அவைகள் உன்னுடைய வீட்டிலும் படுக்கை அறையிலும், படுக்கையின்மேலும், வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், மக்களிடத்திலும், அடுப்புகளிலும், மாவுபிசைகிற உன்னுடைய பாத்திரங்களிலும் வந்து ஏறும். அந்தத் தவளைகள் உன்மேலும், உன்னுடைய மக்கள்மேலும், வேலைக்காரர்கள் எல்லோர்மேலும் வந்து ஏறும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்” என்றார். மேலும் யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி:” நீ உன்னுடைய கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படிச் செய் என்று சொல்” என்றார். அப்படியே ஆரோன் தன்னுடைய கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது. மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரச்செய்தார்கள்.

அப்பொழுது யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி: “உன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் முழுவதும் பேன்களாகப்போகும் என்று சொல்” என்றார். அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன்னுடைய கையில் இருந்த தன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்கள்மேலும், மிருகஜீவன்கள்மேலும், எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களானது. மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் பேன்களை உருவாக்கும்படி முயற்சிசெய்தார்கள்; அப்படிச்செய்தும், அவர்களால் முடியாமற்போனது; பேன்கள் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது. அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: “இது தேவனுடைய விரல்” என்றார்கள். ஆனாலும், யெகோவா சொல்லிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நாளை அதிகாலையில் நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மக்களைப் போகவிடு. என்னுடைய மக்களைப் போகவிடாமல் இருந்தால், நான் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், மக்கள்மேலும், வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர்களுடைய வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும். பூமியின் நடுவில் நானே யெகோவா என்பதை நீ அறியும்படி என்னுடைய மக்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்த நாட்களிலே வண்டுகள் வராதபடி, அந்த நாட்டை தனிப்படுத்தி, என்னுடைய மக்களுக்கும் உன்னுடைய மக்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று யெகோவா சொல்லுகிறார்” என்று சொல் என்றார். அப்படியே யெகோவா செய்தார்; வெகு திரளான வண்டுவகைகள் பார்வோனுடைய வீட்டிலும், அவனுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போனது.

பின்பு, யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு. நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்திருந்தால், யெகோவாவுடைய கரம் வெளியில் இருக்கிற உன்னுடைய மிருகங்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; பெரிய கொடியதான கொள்ளை நோய் உண்டாகும். யெகோவா இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியர்களின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்; இஸ்ரவேலுக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை” என்றார். மேலும், நாளைக்குக் யெகோவா இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, யெகோவா ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றும் அவனிடம் சொல் என்றார். மறுநாளில் யெகோவா அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியர்களுடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போனது; இஸ்ரவேலர்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை. பார்வோன் விசாரித்து, இஸ்ரவேல் மக்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் மக்களைப் போகவிடவில்லை.

அப்பொழுது யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “உங்கள் கைப்பிடி அளவு சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன்பு வானத்திற்கு நேராக தூவட்டும். அது எகிப்து தேசம் முழுவதும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பச்செய்யும்” என்றார். அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்திற்கு நேராக தூவினான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் வந்தது. அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர்கள் எல்லோர்மேலும் உண்டானதால், அந்தக் கொப்புளங்களினால் மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது. ஆனாலும், யெகோவா மோசேயோடு சொல்லியிருந்தபடியே, யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுடைய சொல்லைக் கேட்கவில்லை.

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசம் எங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற எல்லாவிதமான பயிர் வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார். அப்படியே மோசே தன்னுடைய கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது யெகோவா இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாக ஓடியது; எகிப்து தேசத்தின்மேல் யெகோவா கல்மழையைப் பெய்யச்செய்தார்; கல்மழையும் கல்மழையோடு கலந்த அக்கினியும் மிகவும் கொடியதாக இருந்தது; எகிப்து தேசம் தோன்றிய நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை. எகிப்து தேசம் எங்கும் மனிதர்களையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது. இஸ்ரவேலர்கள் இருந்த கோசேன் நாட்டில் மட்டும் கல்மழை பெய்யாமல் இருந்தது. அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நான் இந்தமுறை பாவம் செய்தேன்; யெகோவா நீதியுள்ளவர்; நானும் என்னுடைய மக்களும் துன்மார்க்கர்கள்.

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து கல்மழையால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் சாப்பிடும்படி, எகிப்து தேசத்தின்மேல் உன்னுடைய கையை நீட்டு” என்றார். அப்படியே மோசே தன்னுடைய கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா அன்று பகல் முழுவதும், அன்று இரவுமுழுவதும் கிழக்குக்காற்றை தேசத்தின்மேல் வீசச்செய்தார்; அதிகாலையில் கிழக்குக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது. வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரவி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாக இறங்கியது; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்கு முன்பு இருந்ததும் இல்லை, அதற்குப்பின்பு இருப்பதும் இல்லை. அவைகள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் மூடியது; தேசம் அவைகளால் இருளடைந்தது; கல்மழைக்குத் தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் எல்லாவற்றையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் சாப்பிட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையைக் கூட மீதியாக வைக்கவில்லை. அப்பொழுது பார்வோன் மோசேயையும், ஆரோனையும் விரைவாக அழைத்து: “உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “தடவிக்கொண்டிருக்கும்படியான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படி, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார். மோசே தன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாட்கள்வரை காரிருள் உண்டானது. மூன்றுநாட்கள்வரை ஒருவரையொருவர் பார்க்கவும் இல்லை, ஒருவரும் தம்முடைய இடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் அவர்கள் வாழ்ந்த இடத்திலே வெளிச்சம் இருந்தது.

நடுஇரவிலே சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் யெகோவா அழித்தார். அப்பொழுது பார்வோனும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்களும் எகிப்தியர்கள் அனைவரும் இரவிலே எழுந்தார்கள்; கொடிய கூக்குரல் எகிப்திலே உண்டானது; சாவு இல்லாத ஒரு வீடும் இல்லை. இரவிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நீங்களும் இஸ்ரவேலர்களும் எழுந்து, என்னுடைய மக்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள். நீங்கள் சொன்னபடியே உங்களுடைய ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்றான். எகிப்தியர்கள்: “நாங்கள் எல்லோரும் சாகிறோமே” என்று சொல்லி, விரைவாக அந்த மக்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் அவசரப்படுத்தினார்கள்.

அப்பொழுது இஸ்ரவேலர்களின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன்பு இருந்த மேகத்தூணிலும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியர்களின் சேனையும் இஸ்ரவேலர்களின் சேனையும் இரவுமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியர்களுக்கு அது மேகமும் இருளாகவும் இருந்தது, இஸ்ரவேலர்களுக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா இரவுமுழுவதும் பலத்த கிழக்குக் காற்றினால் கடல் ஒதுங்கும்படிச் செய்து, அதை வறண்டுபோகச்செய்தார்; தண்ணீர் பிளந்து பிரிந்துபோனது. இஸ்ரவேலர்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது. அப்பொழுது எகிப்தியர்கள் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய எல்லாக் குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அவர்கள் பின்னால் கடலின் நடுவே நடந்துபோனார்கள். காலை நேரத்தில் யெகோவா அக்கினியும் மேகமுமான மண்டலத்திலிருந்து எகிப்தியர்களின் சேனையைப் பார்த்து, அவர்களுடைய சேனையைக் கலங்கடித்து, அவர்களுடைய இரதங்களிலிருந்து சக்கரங்கள் கழன்றுபோகவும், அவர்கள் தங்களுடைய இரதங்களை வருத்தத்தோடு நடத்தவும் செய்தார்; அப்பொழுது எகிப்தியர்கள்: “இஸ்ரவேலர்களைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்கிறார்” என்றார்கள். யெகோவா மோசேயை நோக்கி: “தண்ணீர் எகிப்தியர்கள்மேலும் அவர்களுடைய இரதங்களின்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்களின்மேலும் திரும்பும்படி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டு” என்றார். அப்படியே மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அதிகாலையில் கடல் பலமாகத் திரும்பி வந்தது; எகிப்தியர்கள் அதற்கு எதிராக ஓடும்போது, யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திப்போட்டார். தண்ணீர் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரர்களையும், அவர்கள் பின்னாக கடலில் நுழைந்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. இஸ்ரவேலர்களோ கடலின் நடுவாக வறண்ட நிலத்தின் வழியாக நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது.

நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார்.

அப்பொழுது அவர்: “என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாக இருந்தால், யெகோவாவாகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடு பேசுவேன்.

என்னுடைய மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த என்னுடைய அடையாளங்களையும் கண்டிருந்தும், என்னுடைய சத்தத்தை கேட்காமல், இதோடு பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதர்களில் ஒருவரும்,

நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது. அந்த அக்கினியின் நடுவிலிருந்து யெகோவா உங்களுடன் பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு உருவத்தையும் காணவில்லை. நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.

அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டது போல, எந்தவொரு மக்களாவது கேட்டதும், உயிரோடிருந்ததும் உண்டு?, அல்லது உங்கள் தேவனாகிய யெகோவா எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய மக்களின் நடுவிலிருந்து ஒரு மக்கள்கூட்டத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், போரினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வழிசெய்ததுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.

யெகோவா எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன் மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து,

யெகோவா சகல நோய்களையும் உன்னை விட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியர்களின் கொடிய வியாதிகளில் ஒன்றும் உன்மேல் வரச்செய்யாமல், உன்னைப் பகைக்கிற அனைவரின்மேலும் அவைகளை வரச்செய்வார்.

உன்னுடைய கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும், அற்புதங்களையும், உன் தேவனாகிய யெகோவா உன்னைப் புறப்படச்செய்து காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாக நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ யாரைப்பார்த்துப் பயப்படுகிறாயோ அவர்களுக்கும் உன் தேவனாகிய யெகோவா அப்படியே செய்வார்.

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார். இந்த நாற்பது வருடங்களும் உன்மேல் இருந்த ஆடை பழையதாகிப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை.

மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா வேலைக்காரர்களுக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி யெகோவா அவனை அனுப்பி நடப்பித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், அவன் இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் வெளிப்படையாகச் செய்த சகல வல்லமையான செயல்களையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், யெகோவாவை முகமுகமாக அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அவனுக்குப்பின்பு எழும்பினதில்லை என்று விளங்கும்.

மக்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்களுடைய கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை மக்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான்வரைக்கும் வந்தார்கள். யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டோடும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; சவக்கடல் என்னும் சமவெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடினது; அப்பொழுது மக்கள் எரிகோவிற்கு எதிரே கடந்துபோனார்கள். எல்லா மக்களும் யோர்தான் நதியைக் கடந்துபோகும்வரைக்கும், யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தண்ணீரில்லாத உலர்ந்த தரைவழியாகக் கடந்துபோனார்கள்.

ஏழாம் நாளில், அதிகாலையிலே பொழுதுவிடியும்போது எழுந்திருந்து அந்தவிதமாகவே பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள்; அந்த நாளில் மட்டும் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள். ஏழாவதுமுறை ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதும்போது, யோசுவா மக்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் யெகோவா உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். ஆனாலும் இந்தப் பட்டணமும், இதில் உள்ள அனைத்தும் யெகோவாவுக்கு சபிக்கப்பட்டதாக இருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியால், அவளும் அவளுடைய வீட்டில் இருக்கிற அனைவரும் உயிரோடிருக்கட்டும். சபிக்கப்பட்டதிலிருந்து எதையாவது எடுத்துக்கொள்வதினாலே, நீங்கள் சபிக்கப்பட்டவர்களாகாதபடிக்கும், இஸ்ரவேல் முகாமை சபிக்கப்பட்டதாக்கி அதைக் கலங்கச்செய்யாதபடிக்கும், நீங்கள் சபிக்கப்பட்டதற்குமட்டும் எச்சரிக்கையாக இருங்கள். அனைத்து வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், யெகோவாவுக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் யெகோவாவின் பொக்கிஷத்தில் சேரும் என்றான். எக்காளங்களை ஊதும்போது, மக்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை மக்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடு சத்தமிடும்போது, மதில் இடிந்து விழுந்தது; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,

யெகோவா எமோரியர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்த நாளிலே, யோசுவா யெகோவாவை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும் நில்லுங்கள் என்றான். அப்பொழுது மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும்வரைக்கும் சூரியன் நின்றது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் மறைவதற்குத் துரிதப்படாமல், ஏறக்குறைய ஒருபகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது.

அப்படியே சிம்சோனும் அவனுடைய தாயும் தகப்பனும் திம்னாத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சைத் தோட்டங்கள் வரை வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற இளம் சிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது. அப்பொழுது யெகோவாவுடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன்னுடைய கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன்னுடைய தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன்னுடைய வலதுகையினாலும், மற்றொன்றைத் தன்னுடைய இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு, என்னுடைய ஜீவன் பெலிஸ்தர்களோடு மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா மக்கள்மேலும் விழுந்தது; இப்படி அவன் உயிரோடிருக்கும்போது அவனால் கொல்லப்பட்டவர்களைவிட, அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாக இருந்தார்கள்.

பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனின் அருகில் வைத்தார்கள். அஸ்தோத் ஊர்க்காரர்கள் மறுநாள் காலையில் எழுந்து வந்தபோது, இதோ, தாகோன் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் இடத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள். அவர்கள் மறுநாள் அதிகாலையில் எழுந்து வந்தபோது, இதோ, தாகோன் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைந்து கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாக இருந்தது.

அஸ்தோத் ஊர்க்காரர்களை வாதிக்கும்படி யெகோவாவுடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் மக்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார். இப்படி நடந்ததை அஸ்தோத்தின் மக்கள் பார்த்தபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாக இருந்ததால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்ககூடாது என்று சொல்லி; பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் அழைத்து, தங்களின் அருகிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணம்வரை எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனார்கள். அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, யெகோவாவுடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் கடுங்கோபமாக இறங்கினது; அந்தப் பட்டணத்தின் மனிதருக்குள் சிறியவர் துவங்கிப் பெரியவர்வரை மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார். அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊர்க்காரர்கள்: எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்கள் அருகில் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள். அவர்கள் பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோடாதபடி, அவருடைய பெட்டியை அதின் இடத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் மரணம் அதிகமாக இருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது. இறந்துபோகாமல் இருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானம்வரை எழும்பினது.

ஆனாலும் பெத்ஷிமேசின் மனிதர்கள் யெகோவாவுடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், யெகோவா மக்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது யெகோவா மக்களைப் பேரழிவாக அடித்ததினால், மக்கள் துக்கமாக இருந்தார்கள். இந்தப் பரிசுத்தமான தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கக்கூடியவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்திற்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனிதர்கள் சொல்லி,

தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு முறை ஒரு சிங்கமும் ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைப் பின்தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடையைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்தித்தானே என்றான். பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த யெகோவா இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, யெகோவா உன்னுடன் இருப்பாராக என்றான்.

அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் யெகோவா உன்னை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன்னுடைய தலையை உன்னை விட்டு எடுத்து, பெலிஸ்தர்களுடைய முகாமின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளுவார்கள். யெகோவா பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த மக்கள்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் யெகோவாவுடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். அப்பொழுது அந்தப் பெலிஸ்தியன் எழும்பி, தாவீதுக்கு எதிராக நெருங்கி வரும்போது, தாவீது விரைவாக அந்த இராணுவத்திற்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி, தன்னுடைய கையை பையிலே விட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான். இப்படியாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனைத் தோற்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லை. எனவே, தாவீது பெலிஸ்தியனின் அருகே ஓடி அவன்மேல் நின்று, அவனுடைய பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக்கொன்று அதினாலே அவனுடைய தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர்கள் கண்டு, ஓடிப்போனார்கள்.

அவர்கள் நாகோனின் போரடிக்கும் களம் இருக்கிற இடத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியால், ஊசா தேவனுடைய பெட்டிக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தான். அப்பொழுது யெகோவாவுக்கு ஊசாவின்மேல் கோபம் வந்தது; அவனுடைய துணிவினால் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியின் அருகில் இறந்தான்.

கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என்னுடைய வார்த்தை இல்லாமல் இந்த வருடங்களிலே பனியும் மழையும் பெய்யாமல் இருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயையும் தவிர, என்னிடத்தில் ஒரு அப்பமும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என்னுடைய மகனும் சாப்பிட்டு, சாப்பிட ஒன்றுமில்லாமையால் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்த இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன்னுடைய வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அப்பத்தைச் செய்து என்னிடம் கொண்டுவா; பின்பு உனக்கும் உன்னுடைய மகனுக்கும் செய்யலாம். யெகோவா தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்வரையும் பானையில் இருந்த மாவு தீர்ந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றான். அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவளுடைய வீட்டாரும் அநேகநாட்கள் சாப்பிட்டார்கள். யெகோவா எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மாவு தீர்ந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.

இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த பெண்ணின் மகன் வியாதிப்பட்டுப் படுத்தான்; அவனுடைய உயிர்போகும்வரை அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனிதனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்யவும், என்னுடைய மகனைச் சாகச்செய்யவுமா என்னிடம் வந்தீர் என்றாள். அதற்கு அவன்: உன்னுடைய மகனை என்னிடத்தில் கொடு என்று சொல்லி, அவனை அவளுடைய மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன்னுடைய கட்டிலின்மேல் வைத்து: என்னுடைய தேவனாகிய யெகோவாவே, நான் தங்கியிருக்க இடம்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகச்செய்ததால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு; அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுமுறை குப்புறவிழுந்து: என்னுடைய தேவனாகிய யெகோவாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரச்செய்யும் என்று யெகோவா வை நோக்கி விண்ணப்பம் செய்தான். யெகோவா எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான். அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவனுடைய தாயினிடம் கொடுத்து: பார் உன்னுடைய பிள்ளை உயிரோடு இருக்கிறான் என்று சொன்னான். அப்பொழுது அந்தப் பெண் எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனிதன் என்றும், உம்முடைய வாயிலிருந்து வரும் யெகோவாவுடைய வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.

அந்தக் கற்களால் யெகோவாவுடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடம் இருக்கும்படி ஒரு வாய்க்காலை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, ஒரு காளையைத் துண்டு துண்டாக துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான். பிற்பாடு அவன்: நீங்கள் நான்கு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாவது முறையும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாவது முறையும் ஊற்றினார்கள். அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான். மாலைபலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய யெகோவாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படிச்செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கச்செய்யும். யெகோவாவே, நீர் தேவனாகிய யெகோவா என்றும், தேவரீர் தங்களுடைய இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த மக்கள் அறியும்படி, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். அப்பொழுது: யெகோவாவிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் எரித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. மக்களெல்லோரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: யெகோவாவே தெய்வம், யெகோவாவே தெய்வம் என்றார்கள்.

அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இரண்டாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாக மறுகரைக்குப் போனார்கள்.

அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகும்போது, இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாக இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அதற்குப் பிறகு காணாமல், தன் உடையைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான். பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று, எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய யெகோவா எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இரண்டாகப் பிரிந்ததால் எலிசா இக்கரைக்கு வந்தான்.

அவன் அந்த இடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழியிலே நடந்துபோகும்போது வாலிபர்கள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி கேலி செய்தார்கள். அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: யெகோவாவின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு வாலிபர்களைக் கொன்றுபோட்டது.

எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெயைத் தவிர உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அண்டைவீட்டுக்காரர்கள் எல்லோரிடத்திலும் அநேகம் காலியான பாத்திரங்களைக் கேட்டுவாங்கி, நீயும் உன் பிள்ளைகளும் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் ஊற்றி, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான். அவள் அவனிடத்திலிருந்துபோய், கதவைப் பூட்டிக்கொண்டு, மகன்கள் அவளிடத்தில் பாத்திரங்களை கொடுக்க, அவள் அவைகளில் ஊற்றினாள். அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின்பு, அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறு பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோனது. அவள் போய் தேவனுடைய மனிதனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீதம் இருக்கிறதைக்கொண்டு நீயும் உன் மகன்களும் வாழக்கையை நடத்துங்கள் என்றான்.

எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, இந்தச் சிறுவன் அவனுடைய கட்டிலின்மேல் இறந்துகிடந்தான். உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப்பூட்டி, யெகோவாவை நோக்கி வேண்டுதல்செய்து, அருகில்போய், தன் வாய் சிறுவனின் வாயின்மேலும், தன் கண்கள் அவனுடைய கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவனுடைய உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது சிறுவனின் உடலில் சூடு ஏற்பட்டது. அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பவும் அருகில்போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தச் சிறுவன் ஏழுமுறை தும்மி தன் கண்களைத் திறந்தான்.

சாப்பிட அதைக் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள்; அவர்கள் அந்தக் கூழை எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடமுடியாமல்: தேவனுடைய மனிதனே, பானையில் விஷம் இருக்கிறது என்று சத்தமிட்டார்கள். அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, கூட்டத்தார் சாப்பிடும்படி அவர்களுக்கு கொடு என்றான்; அப்புறம் பானையிலே விஷம் இல்லாமல்போனது. பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனிதன் தேவனுடைய மனிதனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் கதிர்த்தட்டுகளையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: கூட்டத்தாருக்குச் சாப்பிடக்கொடு என்றான். அதற்கு அவனுடைய வேலைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதைக் கூட்டத்தாருக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்டப் பிறகு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; யெகோவாவுடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமல்லாமல் மீதியும் இருந்தது.

அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுமுறை மூழ்கி எழு; அப்பொழுது உன் சரீரம் புதிதாகி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான். அதற்கு நாகமான் கடுங்கோபம்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து, தன் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி தொழுநோயை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன். நான் மூழ்கிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, கோபத்தோடே திரும்பிப்போனான். அவனுடைய வேலைக்காரர்கள் அருகில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்யச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? மூழ்கி எழும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள். அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனிதனின் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுமுறை முழுகினபோது, அவனுடைய சரீரம் ஒரு சிறுபிள்ளையின் சரீரத்தைப்போல புதிதாகி, அவன் சுத்தமானான்.

ஒருவன் ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தும்போது கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று சத்தமிட்டான். தேவனுடைய மனிதன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கிளையை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கச் செய்து, அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.

அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாக போர்செய்து, இந்த இந்த இடத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் வேலைக்காரர்களோடு ஆலோசனைசெய்தான். ஆகிலும் தேவனுடைய மனிதன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்திற்குப் போகாதபடி எச்சரிக்கையாயிரும்; சீரியர்கள் அங்கே வருவார்கள் என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனிதன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன இடத்திற்கு மனிதர்களை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேக முறை தன்னைக் காத்துக்கொண்டான். இந்தக் காரியத்தால் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் இராணுவ அதிகாரிகளை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவிற்கு உளவாளியாக இருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான். அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன்: அப்படியில்லை; என் எஜமானாகிய ராஜாவே, நீர் உம்முடைய படுக்கையறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவிற்கு அறிவிப்பான் என்றான்.

தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே புறப்படும்போது, இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம்செய்து: யெகோவாவே, இவன் பார்க்கும்படி இவனுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே யெகோவா அந்த வேலைக்காரனுடைய கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார். அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனிதனிடத்திற்கு நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான். அவர்கள் சமாரியாவிற்கு வந்தபோது, எலிசா: யெகோவாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக் யெகோவா அவர்களுடைய கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.

அப்பொழுது அவர்கள், ஒரு மனிதனை அடக்கம் செய்யப்போகும்போது, அந்தக் கூட்டத்தைக் கண்டு, அந்த மனிதனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனிதனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனிதன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.

அதற்கு ஏசாயா: யெகோவ தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வார் என்பதற்கு, யெகோவாவால் உனக்கு உண்டாகும் அடையாளமாக நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப் போகவேண்டுமோ, பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப்போவது எளிதான காரியம்; அப்படி வேண்டாம்; நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பவேண்டும் என்றான். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் ஆகாசுடைய சூரிய கடிகாரத்தில் கோட்டுக்கு கோடு முன்னோக்கிச் சென்ற நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பும்படி செய்தார்.

ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருடத்திலே தன் கால்களில் வியாதி ஏற்பட்டு, அந்த வியாதி மிகவும் அதிகரித்தது; அவன் தன் வியாதியிலும் யெகோவாவை அல்ல, மருத்துவர்களையே தேடினான்.

அவன் பலப்பட்டபோது, தனக்கு அழிவு ஏற்படும் வரை, அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபம் காட்ட யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடுகூடக் யெகோவாவின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பின்னே உட்பிரவேசித்து, ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, யெகோவாவுக்குத் தூபங்காட்டுகிறது உமக்குரியதல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களுக்கே உரியது; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக இருக்காது என்றார்கள். அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடு கோபமாகப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் யெகோவாவுடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே தொழுநோய் தோன்றியது. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் அனைத்து ஆசாரியர்களும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே தொழுநோய் பிடித்தவனென்று கண்டு, அவனை விரைவாக அங்கேயிருந்து வெளியேறச் செய்தார்கள்; யெகோவா தன்னை அடித்ததால் அவன் தானும் வெளியே போக அவசரப்பட்டான்.

பார்வோனிடமும், அவனுடைய எல்லா ஊழியக்காரர்களிடமும், அவன் தேசத்தின் எல்லா மக்களிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது மக்களை கர்வத்துடன் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்த நாள்வரைக்கும் இருக்கிற உமக்கு புகழை உண்டாக்கினீர்.

ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன். ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள்.

என் தேவனாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவனுடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார். யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாகப் பாவம்செய்தேன், என்னுடைய ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.

அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர்.

அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி, உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.

நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பெயரிட்டதினால், நான் உனக்கு ஆரோக்கியம்வரச்செய்து, உன் காயங்களை ஆற்றுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

இஸ்ரவேலிலும் மற்ற மனிதருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் காணப்படுகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்தில் செய்து, இந்நாளில் நிற்கும் புகழ்ச்சியை உமக்கு உண்டாக்கி, இஸ்ரவேலாகிய உமது மக்களை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும் ஓங்கிய கரத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து,

யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, யெகோவா என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கச்செய்தார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாகக் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாக இருந்தது. அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன். அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லி, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். யெகோவாகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் உயிரை நுழையச்செய்வேன், அப்பொழுது உயிரடைவீர்கள். நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் சதையை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்களென்று சொல்லுகிறார் என்று சொல் என்றார். எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; நான் தீர்க்கதரிசனம் சொல்லும்போது ஒரு இரைச்சல் உண்டானது; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்புடன் சேர்ந்துகொண்டது. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, அவைகள்மேல் நரம்புகளும் சதையும் உண்டானது, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் உயிர் இல்லாமலிருந்தது. அப்பொழுது அவர் என்னைப் பார்த்து: நீ உயிரை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்; மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, உயிரைநோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உயிரே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலை செய்யப்பட்ட இவர்கள் உயிரடையும்படி இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார். எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; அப்பொழுது உயிர் அவர்களுக்குள் நுழைய, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய படையாக நின்றார்கள்.

ராஜா பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட கனவுகளையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கமுடியுமா என்று கேட்டான். தானியேல் ராஜசமுகத்தில் மறுமொழியாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவிற்குத் தெரிவிக்க ஞானிகளாலும், சோதிடராலும், விண் ஆராய்ச்சியாளர்களாலும், குறிசொல்லுகிறவர்களாலும் முடியாது. மறைபொருட்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய கனவும் உமது படுக்கையின்மேல் உம்முடைய எண்ணத்தில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்: ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கும்போது, இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பினது; அப்பொழுது மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார். உயிரோடிருக்கிற எல்லோரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவிற்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.

அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்கு மிகவும் கோபம்கொண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாக அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாகச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளைகொடுத்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற நெருப்புச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய மனிதர்களுக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், கால்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்ற உடைகளோடும் கட்டப்பட்டு, எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். ராஜாவின் கட்டளை கடுமையாக இருந்ததாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்ததாலும், நெருப்பு ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன மனிதர்களைக் கொன்றுபோட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று மனிதர்களும் கட்டப்பட்டவர்களாக எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள். அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, உடனடியாக எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று மனிதர்களை அல்லவோ கட்டுண்டவர்களாக நெருப்பிலே போட்டோம் என்றான்; அவர்கள் ராஜாவிற்கு மறுமொழியாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நான்குபேர் விடுதலையாக அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நான்காம் நபரின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற நெருப்புச்சூளையின் வாசலருகில் வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள். தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவர்களும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்த மனிதர்களுடைய உடல்கள் நெருப்பினால் பாதிக்கப்படாமலும், அவர்களுடைய தலைமுடி கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், நெருப்பின் வாசனை அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் உடல்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார். ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த மக்களும், எந்த தேசத்தானும், எந்த மொழி பேசுகிறவனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாக காப்பாற்றக்கூடிய தேவன் வேறொருவரும் இல்லையென்றான். பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல மக்களுக்கும் தேசத்தார்களுக்கும் பல மொழி பேசுகிறவர்களுக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக. உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாகக் கண்டது. அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்ஜியம் நித்தியராஜ்ஜியம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

அந்த நேரத்தில் மனித கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரண்மனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதியது; எழுதின அந்தக் கையை ராஜா கண்டான். அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கச்செய்தது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் குகையிலே போட்டார்கள்; ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். ஒரு கல் குகையினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான். பின்பு ராஜா தன் அரண்மனைக்குப் போய், இரவுமுழுவதும் சாப்பிடாமலும், இசைக்கருவி முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவிடாமலும் இருந்தான்; அவனுக்கு தூக்கமும் வராமற்போனது. காலையில் சூரியன் உதிக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் குகைக்கு வேகமாகப் போனான். ராஜா குகையின் அருகில் வந்தபோது, துயரசத்தமாகத் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான். அப்பொழுது தானியேல்: ராஜாவே நீர் என்றும் வாழ்க. சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் அநீதி செய்ததில்லை என்றான். அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் குகையிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் குகையிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவனை நம்பியிருந்ததினால், அவனுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை. தானியேலின்மேல் குற்றம்சுமத்தின மனிதர்களையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்களுடைய மகன்களையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் குகையிலே போட்டார்கள்; அவர்கள் குகையின் அடியிலே சேருவதற்குமுன்பே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்களுடைய எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.

பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா மக்களுக்கும் தேசத்தார்களுக்கும் பல மொழி பேசுபவர்களுக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக. என் ராஜ்ஜியத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்செய்யப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்ஜியம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுவரைக்கும் நிற்கும். தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான்.

அதற்குப் பின்பு நான் மாம்சமான அனைவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர்கள் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். வானத்திலும் பூமியிலும் இரத்தம் நெருப்புப் புகைத்தூண்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்குமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார். அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது. அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைக் குணமாக்கினார்.

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்கு விருப்பமானால், என்னை சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்து, அவனுடைய மாமியார் ஜூரமாகப் படுத்திருந்ததைக் கண்டார். அவர் அவளுடைய கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

மாலைநேரமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, வியாதியஸ்தர்கள் எல்லோரையும் சுகமாக்கினார். அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது, அவருடைய சீடர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும், மரித்துப்போகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: விசுவாசக்குறைவுள்ளவர்களே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டானது. அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.

அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டிற்கு வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்த இரண்டுபேர் கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியவர்களாக இருந்தபடியால், அந்தவழியாக ஒருவனும் நடக்கக்கூடாமலிருந்தது. அவர்கள் அவரைப் பார்த்து: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று சத்தமிட்டார்கள். அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி அனுமதிகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிகளுக்குள் சென்றன; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து தண்ணீரில் இறந்துபோயின. அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் செய்திகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்கு நடந்தவைகளையும் அறிவித்தார்கள். அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து, அவரைக்கண்டு, தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார். உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான். மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள். இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.

இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு: விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள். மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.

இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.

அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள். பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.

பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.

அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.

குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.

அங்கே சூம்பின கையையுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? ஆட்டைவிட மனிதனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயம்தான் என்று சொன்னார். பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது.

இயேசு அதை அறிந்து, அந்த இடத்தைவிட்டு விலகிப்போனார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அவர்களெல்லோரையும் அவர் சுகமாக்கி,

அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார். மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.

நான் தேவனுடைய ஆவியானவராலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே.

அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை.

இயேசு வந்து, திரளான மக்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியுள்ளவர்களைச் சுகமாக்கினார்.

மாலைநேரமானபோது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்திரமான இடம், நேரமுமானது; மக்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு உணவு பதார்த்தங்களை வாங்கும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அப்பொழுது, அவர் மக்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுத்தார்கள். பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.

அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.

பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான். காற்று பலமாக இருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கும்போது: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

அந்த இடத்து மனிதர்கள் அவரை யார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, வியாதியுள்ளவர்கள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட எல்லோரும் குணமானார்கள்.

அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார். அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள். அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள். இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.

அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார். ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார். அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள். அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள். அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள். பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள்.

அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது.

அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் வலிப்பு வியாதியினால் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி தண்ணீரிலும் விழுகிறான். அவனை உம்முடைய சீடர்களிடம் கொண்டுவந்தேன்; அவனை குணமாக்க அவர்களால் முடியாமற்போனது என்றான். இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனைவிட்டுப் வெளியேபோனது; அந்த நேரமே அந்த இளைஞன் குணமானான்.

அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: உங்களுடைய விசுவாசக்குறைவினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இந்த இடத்தைவிட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போகும்; உங்களால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமிராது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஆனாலும், நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிக்காசைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடு என்றார்.

உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.

அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள். இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள். இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

அப்பொழுது, குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார்.

அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. சீடர்கள் அதைப் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.

அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்; சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார். உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது.

உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள். அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள். அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள். பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை.

கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான். இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான். அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு; ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள்.

அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்; மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள். இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர்: இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய மனதில் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறது என்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக தன் வீட்டிற்குப்போனான். அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு: நாம் இதுவரை இப்படிப்பட்ட சம்பவத்தைப் பார்த்தது இல்லை என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான். அவர் ஓய்வுநாளில் அவனைச் சுகமாக்கினால் அவர்மேல் குற்றஞ்சாட்டலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி; அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள். அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது.

மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காமல் இருப்பதற்காக, தமக்கு ஒரு படகை ஆயத்தம் பண்ணவேண்டும் என்று, தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார். அசுத்தஆவிகளும் இயேசுவைப் பார்த்தபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.

அப்பொழுது அவர் பன்னிரண்டு நபர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடு இருக்கவும், பிரசங்கம்பண்ணுவதற்காகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்கள் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.

அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது. இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: சீராதே, அமைதியாக இரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது. அவர் அவர்களைப் பார்த்து: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார். அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

அவர் படகில் இருந்து இறங்கினவுடனே, அசுத்தஆவியுள்ள ஒரு மனிதன் கல்லறைகளில் இருந்து அவருக்கு எதிராகவந்தான். அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான்; அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை. அவன் பலமுறை விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டும், சங்கிலிகளைத் தகர்த்து, விலங்குகளை உடைத்துப்போடுவான்; அவனை அடக்க ஒருவனுக்கும் முடியவில்லை. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, சத்தம்போட்டு, கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே பார்த்தபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தவேண்டாம் என்று தேவனுடைய பெயரில் உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். ஏனென்றால், அவர் அவனைப் பார்த்து: அசுத்தஆவியே, இந்த மனிதனைவிட்டு வெளியே போ என்று சொல்லியிருந்தார். அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகர் இருப்பதினால் என் பெயர் லேகியோன் என்று சொல்லி, தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடவேண்டாம் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான். அப்பொழுது, அந்த இடத்தில் மலையின் அருகில் அநேக பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பிசாசுகள் அவரைப் பார்த்து: பன்றிகளுக்குள்ளே போக, அவைகளுக்குள் எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்தஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போனது; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்துபோனது. பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது நடந்தவைகளைப் பார்ப்பதற்காக மக்கள் புறப்பட்டு; இயேசுவிடம் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் புத்தி தெளிந்து, உடை அணிந்து, உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பயந்தார்கள். பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் நடந்தவைகளைப் பார்த்தவர்களும் அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்கள். அப்பொழுது தங்களுடைய எல்லைகளைவிட்டுப் போகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

அப்பொழுது பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே அவதிப்பட்ட ஒரு பெண், அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது, இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகம் பெறுவேன் என்று சொல்லி; மக்கள் கூட்டத்தின் உள்ளே அவருக்குப் பின்பக்கத்தில் வந்து, அவருடைய ஆடையைத் தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது; அந்த வேதனை நீங்கி சுகம் பெற்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து, மக்கள்கூட்டத்தில் திரும்பி: என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார். அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடு போய், உன் வேதனை நீங்கி, சுகமாக இரு என்றார்.

அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய மகள் மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறாய் என்றார்கள். அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத்தலைவனைப் பார்த்து: பயப்படாதே, விசுவாசம் உள்ளவனாக இரு என்று சொல்லி; வேறுயாரையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளாமல், பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோனார்; ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிற்கு வந்து, அங்கே சத்தமிடுகிற மக்களையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, உள்ளே சென்று: நீங்கள் சத்தமிட்டு அழுகிறது ஏன்? பிள்ளை மரிக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து சிரித்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடு வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளை இருந்த அறைக்குள் சென்று, பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு; சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம். உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாக இருந்தாள். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?

அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல்.

இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து,

அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள்.

அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது; சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள். அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள். அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள். மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.

அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார். அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள். அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி. அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.

அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து, அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்; இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.

பின்பு, அவர் எழுந்து அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில்போய், ஒரு வீட்டிற்குள் சென்று, அவர் அங்கே இருப்பது ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பியும், அவர் மறைவாக இருக்கமுடியாமல்போனது. அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய், இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். அந்தப் பெண் சீரோபேனிக்கியா தேசத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண்ணாக இருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள். இயேசு அவளைப் பார்த்து: முதலில் பிள்ளைகள் திருப்தியாகட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லது இல்லை என்றார். அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும், மேஜையின்கீழே இருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளைவிட்டுப் போனது என்றார். அவள் தன் வீட்டிற்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.

அங்கே திக்குவாயுடைய ஒரு காதுகேளாதவனை அவரிடம் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது, அவர் அவனை மக்கள் கூட்டத்தைவிட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாக்கைத் தொட்டு; வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தம். உடனே அவனுடைய காதுகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாக்கின் கட்டும் அவிழ்ந்து, அவன் தெளிவாகப் பேசினான். அதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆனாலும் எவ்வளவு அதிகமாக அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அதைப் பிரசித்தப்படுத்தி, எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார்; காதுகேட்காதவர்களைக் கேட்கவும், ஊமையர்களைப் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.

அந்த நாட்களிலே அநேக மக்கள் கூடிவந்திருக்கும்போது, அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாததினால், இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காகப் பரிதாபப்படுகிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடம் தங்கியிருந்த மூன்றுநாட்களாகச் சாப்பிட ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருப்பதினால், நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால், போகும் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். அதற்கு அவருடைய சீடர்கள்: இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் இருக்கிறது என்றார்கள். அப்பொழுது அவர் மக்களைத் தரையிலே பந்தி உட்காரக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாற சீடர்களிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள். சில சிறிய மீன்களும் அவர்களிடம் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறச் சொன்னார். அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியானார்கள்; மீதியான அப்பங்களை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள். சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நான்காயிரம்பேராக இருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.

பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கரங்களை வைத்து: எதையாவது பார்க்கிறாயா? என்று கேட்டார். அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான். பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான்.

ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார். அவருடைய உடை உறைந்த மழையைப்போல பூமியிலே எந்தவொரு நபராலும் வெளுக்கக்கூடாத வெண்மையாகப் பிரகாசித்தது.

அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களிடம் கேட்டேன்; அவர்களால் முடியவில்லை என்றான். அவர் மறுமொழியாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார். அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைப் பார்த்தவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். இயேசு அவனுடைய தகப்பனைப் பார்த்து: எவ்வளவு காலங்களாக இப்படி இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதிலிருந்தே இப்படி இருக்கிறது; இவனைக் கொல்லுவதற்காக அந்த ஆவி அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் தள்ளியது. நீர் ஏதாவது செய்யமுடியுமானால், எங்கள்மேல் மனமிறங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: நீ விசுவாசித்தால் நடக்கும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்றார். உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான். அப்பொழுது மக்கள் கூட்டமாக ஓடிவருகிறதை இயேசு பார்த்து, அந்த அசுத்தஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ, இனி இவனுக்குள் மீண்டும் போகக்கூடாது என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். அப்பொழுது அந்த ஆவி சத்தமிட்டு, அவனை அதிகமாக அலைக்கழித்து வெளியேபோனது. அவன் மரித்துப்போனான் என்று மக்கள் சொல்லத்தக்கதாக மரித்தவன்போல கிடந்தான். இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.

இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.

பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான். அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான். இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான்.

இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.

அவன் அவர்களைப் பார்த்து: பயப்படாமல் இருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிரோடு எழுந்தார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்.

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என்னவென்றால்: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; மரணத்திற்குரிய எதைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; நோயாளிகளின்மேல் கரங்களை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள் என்றார்.

இவ்விதமாக கர்த்தர் அவர்களோடு பேசினபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.

சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்கள் மூலம் கிரியைசெய்து, அவர்களால் நடந்த அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.

ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை மக்களின் நடுவே கீழேத் தள்ளி, அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாமல், அவனைவிட்டுப் போய்விட்டது. எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்தஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அவரைப்பற்றின புகழ் சுற்றிலுமிருந்த இடங்களிலெல்லாம் பரவியது.

பின்பு அவர் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டிற்குப் போனார். அங்கு சீமோனுடைய மாமியார் கடும் ஜூரத்தோடு படுத்திருந்தாள். அவளை குணமாக்கவேண்டுமென்று அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் அவளிடம் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது, அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

சூரியன் அஸ்தமித்தபோது, மக்களெல்லோரும் பலவிதமான வியாதிகளால் கஷ்டப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கரங்களை வைத்து, அவர்களை சுகமாக்கினார். பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு அநேகரைவிட்டுப் புறப்பட்டுப்போனது. அவர் கிறிஸ்து என்று பிசாசுகளுக்கு தெரிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவிடாமல் அதட்டினார்.

அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்க உங்களுடைய வலைகளைப் போடுங்கள் என்றார். அதற்குச் சீமோன்: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் முயற்சிசெய்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; இருப்பினும் உம்முடைய வார்த்தையின்படி நான் வலைகளைப் போடுகிறேன் என்றான். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அவர்கள் வலைகள் கிழிந்துபோகும் அளவிற்கு அதிகமான மீன்களைப் பிடித்தார்கள். அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள். சீமோன்பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனிதன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான். அவர்கள் அதிகமான மீன்களைப் பிடித்ததினால், அவனுக்கும் அவனோடுகூட இருந்த எல்லோருக்கும் பிரமிப்பாக இருந்ததால் அப்படிச் சொன்னான்.

பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கும்போது, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைச் சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான். அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது. அவர் அவனை நோக்கி: நீ இதை யாருக்கும் உடனே சொல்லாமல், நீ எருசலேமுக்குப்போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார். அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள்.

பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள எல்லா கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் உட்கார்ந்திருந்தார்கள்; நோயாளிகளைக் குணமாக்கத்தக்க கர்த்தருடைய வல்லமை அவரிடம் இருந்தது. அப்பொழுது சில மனிதர்கள் பக்கவாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடு எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவருக்கு முன்பாக வைக்கவும் முயற்சித்தார்கள். மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோக முடியாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள்வழியாக மக்களின் மத்தியில் இயேசுவிற்கு முன்பாக அவனைப் படுக்கையோடு இறக்கினார்கள். அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, பக்கவாதக்காரனை நோக்கி: மனிதனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் யோசனைபண்ணி, தேவநிந்தனை சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? என்றார்கள். இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களுடைய இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறது என்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ அல்லது எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டிற்குப்போனான். அதினாலே எல்லோரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.

வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான். அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி, ஓய்வுநாளில் சுகமாக்குவாரோ என்று அவரை கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ? அல்லது ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ? எது நியாயம் என்று கேட்டு, அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது.

பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள். அசுத்தஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினாலே, மக்கள் எல்லோரும் அவரைத் தொடுவதற்காக முயற்சிசெய்தார்கள்.

அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான். அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான். அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை; உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான். நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான். இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள்.

அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள். இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி, அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார். எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது.

அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.

பொல்லாத ஆவிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் விடுவித்து சுகமாக்கப்பட்ட சில பெண்களும், ஏழு பிசாசுகளின் தொல்லையிலிருந்து விடுதலைபெற்ற மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,

பின்பு ஒருநாள் அவர் தமது சீடர்களோடு படகில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள். படகில் பயணம்செய்துகொண்டு இருக்கும்போது இயேசு தூங்கிவிட்டார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்களுடைய படகு தண்ணீரினால் நிறைந்து ஆபத்து ஏற்பட்டது. அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, சாகப்போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் தண்ணீரின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டானது. அவர் அவர்களை நோக்கி: உங்களுடைய விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாகப் பிசாசுகள் பிடித்தவனும், ஆடையணியாதவனும், வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவனுமாக இருந்த அந்தப் பட்டணத்து மனிதன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தமாகச் சொன்னான். அந்த அசுத்தஆவி அவனைவிட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி பலகாலமாக அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. அந்த இடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படியே பிசாசுகள் அந்த மனிதனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மரித்தன. அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி மக்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனிதன் ஆடை அணிந்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். பிசாசுகள் பிடித்திருந்தவன் சுகமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் எல்லோரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படகில் ஏறி, திரும்பிப்போனார்.

அப்பொழுது பன்னிரண்டு வருடமாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சுகமாக்கப்படாமலிருந்த ஒரு பெண், அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது. அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லோரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். அப்பொழுது அந்த பெண் தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா மக்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.

அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய மகள் மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான். இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல், எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார். அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார். அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் வரவழைத்து, எல்லாப் பிசாசுகளைத் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், நோயாளிகளை குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்.

புறப்பட்டுப்போய், கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து, நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

மக்கள் அதை அறிந்து, அவர் பின்னால் போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்து அவர்களோடு பேசி, சுகமடையவேண்டும் என்றிருந்தவர்களைச் சுகப்படுத்தினார்.

மாலைநேரத்தில், பன்னிரண்டுபேரும், அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்திரமாக இருப்பதினால், மக்கள், சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும்போய்த் தங்குவதற்கும், உணவுப்பொருள்களை வாங்கிக்கொள்வதற்கும் அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள். அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார். அவர்கள் அப்படியே எல்லோரையும் உட்காரும்படிச் செய்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி சீடர்களிடத்தில் கொடுத்தார். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான உணவுப்பொருட்கள் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுக்கப்பட்டது.

அவர் ஜெபம்பண்ணும்போது அவருடைய முகத்தின் ரூபம் மாறியது, அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது.

அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான். சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது. அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான். இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது எல்லோரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும்குறித்து அனைவரும் ஆச்சரியப்படும்போது அவர் தம்முடைய சீடர்களை நோக்கி:

பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு, அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.

இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது. ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.

பின்பு இயேசு ஊமையாக இருந்தவனிடத்திலிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள். இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள். இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான். கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார். அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள்.

அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.

அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாக இருந்தார்கள். இயேசு நியாயப்பண்டிதர்களையும் பரிசேயர்களையும் பார்த்து: ஓய்வுநாளிலே சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு,

அப்பொழுது அப்போஸ்தலர்கள் கர்த்த்தரை நோக்கி: எங்களுடைய விசுவாசத்தை பெருகப்பண்ணவேண்டும் என்றார்கள். அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடு பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, குஷ்டரோகமுள்ள மனிதர்கள் பத்துபேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகும்போது சுகமானார்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தமாக தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புறவிழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான்; அவன் சமாரியனாக இருந்தான். அப்பொழுது இயேசு: சுகமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனைத்தவிர மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார். அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.

அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காது அறுந்து விழும்படி வெட்டினான். அப்பொழுது இயேசு: போதும் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனை சுகப்படுத்தினார்.

அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.

திராட்சைரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரைப் பார்த்து: அவர்களுக்குத் திராட்சைரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: பெண்ணே, எனக்கும் உனக்கும் என்ன, என் நேரம் இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரர்களைப் பார்த்து: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் வழக்கத்தின்படியே, ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் பிடிக்கத்தக்க ஆறு கற்ஜாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிரப்பினார்கள். அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது எடுத்து, பந்தி மேற்பார்வைக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். அந்த திராட்சைரசம் எங்கேயிருந்து வந்தது என்று தண்ணீரை நிரப்பின வேலைக்காரர்களுக்குமட்டும் தெரியும் பந்தி மேற்பார்வைகாரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சைரசமாக மாறின தண்ணீரை ருசி பார்த்தபோது, மணமகனை அழைத்து: எந்த மனிதனும் முன்பு நல்ல திராட்சைரசத்தைக் கொடுத்து, மக்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரில் செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமில் இருக்கும்போது, அவர் செய்த அற்புதங்களை அநேகர் பார்த்து, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.

பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் அதிகாரிகளில் ஒருவனுடைய மகன் வியாதியாக இருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து, கலிலேயாவிற்கு வந்தார் என்று அந்த மனிதன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரணவேதனையில் இருக்கிறதினால், அவனைக் குணமாக்குவதற்கு வரவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீங்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் பார்க்காவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். அதற்கு ராஜாவின் அதிகாரி: ஆண்டவரே, என் பிள்ளை இறப்பதற்குமுன்னே வரவேண்டும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் மகன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனிதன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான். அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். அப்பொழுது: எத்தனை மணிக்கு அவனுக்கு சுகம் உண்டானது என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் அவனை விட்டது என்றார்கள். உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னதும் அதே நேரம் என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் விசுவாசித்தார்கள்.

எபிரெய மொழியிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்கள் உண்டு. அவைகளிலே குருடர்கள், முடவர்கள், வாதநோய் உள்ளவர்கள் முதலான வியாதி உள்ளவர்கள் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். ஏனென்றால், சில நேரங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முதலில் அதில் இறங்குவானோ அவன் எப்படிப்பட்ட வியாதியுள்ளவனாக இருந்தாலும் சுகமாவான். முப்பத்தெட்டு வருடங்கள் வியாதியாயிருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு பார்த்து, அவன் அநேக நாளாக வியாதி உள்ளவன் என்று அறிந்து, அவனைப் பார்த்து: சுகமாகவேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதியுள்ளவன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவரும் இல்லை, நான் போகிறதற்குமுன் வேறொருவன் எனக்கு முன்னே இறங்கிவிடுகிறான் என்றான். இயேசு அவனைப் பார்த்து: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனிதன் சுகமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.

அவர் வியாதியாக இருந்தவர்களுக்கு செய்த அற்புதங்களைத் திரளான மக்கள் பார்த்தபடியால் அவருக்குப் பின் சென்றார்கள்.

இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, அநேக மக்கள் தம்மிடத்தில் வருகிறதைப் பார்த்து, பிலிப்புவினிடம்: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டார். தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான். அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரைப் பார்த்து: இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான், அவனுடைய கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றது, ஆனாலும் அவைகள் இவ்வளவு மக்களுக்கு எப்படிப் போதும் என்றான். இயேசு: மக்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாக இருந்தது. பந்தியிருந்த ஆண்கள் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் இருந்தார்கள். இயேசு அந்த அப்பங்களை எடுத்து, நன்றிசெலுத்தி, சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் பந்தி இருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்குத் தேவையானஅளவு கொடுத்தார். அவர்கள் திருப்தியடைந்தப்பின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒன்றும் வீணாகப் போகாதபடிக்கு மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள். இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.

அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள். அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார். அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.

அப்பொழுது அவர்மேல் எறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தைவிட்டுப்போனார்.

அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார். அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான். பகலாக இருக்கும்வரை நான் என்னை அனுப்பினவருடைய செயல்களைச் செய்யவேண்டும்; ஒருவனும் செயல்கள் செய்யக்கூடாத இரவு நேரம் வருகிறது. நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார். இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான். அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள்.

பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.

இயேசு: கல்லை எடுத்து போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இப்பொழுது நாற்றம் எடுக்குமே, நான்கு நாட்கள் ஆனதே என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் மக்கள் விசுவாசிக்கும்படியாக அவர்களுக்காக இதைச் சொன்னேன் என்றார். இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதத் துணிகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.

அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படி இல்லாவிட்டாலும் என்னுடைய செயல்களினாலாவது என்னை நம்புங்கள். உண்மையாகவே உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற செயல்களைத் தானும் செய்வான், இவைகளைவிடப் பெரிய செயல்களையும் செய்வான்.

நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படி அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் மாலைநேரத்திலே, சீடர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கும்போது, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கரங்களையும் விலாவையும் அவர்களுக்குக் காட்டினார். சீடர்கள் இயேசுவைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.

மற்றச் சீடர்கள்: இயேசுவை பார்த்தோம் என்று அவனிடம் சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான காயத்தை நான் பார்த்து, அந்தக் காயத்திலே என் விரலைவிட்டு, என் கையை அவருடைய விலாவிலே வைத்துப்பார்க்காமல் விசுவாசிக்கமாட்டேன் என்றான். மீண்டும் எட்டு நாட்களுக்குப்பின்பு அவருடைய சீடர்கள் வீட்டிற்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களோடு இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். பின்பு அவர் தோமாவைப் பார்த்து: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கரங்களைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாக இல்லாமல் விசுவாசியாக இரு என்றார். தோமா அவருக்கு மறுமொழியாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.

இந்தப் புத்தகத்தில் எழுதப்படாத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாகச் செய்தார்.

சீமோன்பேதுரு மற்றவர்களைப் பார்த்து: மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்மோடு வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள். அந்த இரவிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றும் இல்லை என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அதிகமான மீன்கள் கிடைத்ததினால், வலையை இழுக்க முடியாமல் இருந்தார்கள். ஆகவே, இயேசுவின்மேல் அன்பாக இருந்த சீடன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் மேற்சட்டை அணியாதவனாக இருந்ததினால், தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு கடலிலே குதித்தான். மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் பார்த்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார். சீமோன்பேதுரு படகில் ஏறி, நூற்று ஐம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவிற்கு அன்பாக இருந்தவனும், இரவு உணவு சாப்பிடும்போது அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்ட சீடன் பின்னால் வருகிறதைப் பார்த்தான். அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். அதற்கு இயேசு: நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். ஆகவே, அந்தச் சீடன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரர்களுக்குள்ளே பரவியது. ஆனாலும், அவன் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால் உனக்கென்ன என்று சொன்னார்.

இயேசு செய்த வேறு அநேக காரியங்களும் உண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்கள் உலகம் கொள்ளாது என்று நினைக்கிறேன். ஆமென்.

அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.

பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார். இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.

அப்பொழுது பலத்தக் காற்று அடிக்கிறதுபோல, வானத்திலிருந்து திடீரென ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் நெருப்புமயமான நாக்குகள்போல பிரிந்திருக்கும் நாக்குகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழே இருக்கிற எல்லா தேசத்திலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே தங்கியிருந்தார்கள். அந்த சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது உங்களுடைய குமாரர்களும் உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்; உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்கள்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்த நாட்களிலே என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், கீழே பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும்முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

“இஸ்ரவேலர்களே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்கு தெரிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த கிரியைகளையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.

எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது.

அப்பொழுது பிறவியிலேயே சப்பாணியாகப் பிறந்த ஒரு மனிதனை சுமந்துகொண்டுவந்தார்கள்; ஆலயத்திற்குள் வருகிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அனுதினமும் அவனை அலங்காரவாசல் என்னப்பட்ட தேவாலய வாசலருகில் வைப்பார்கள். அவன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற பேதுருவையும், யோவானையும் பார்த்து பிச்சை கேட்டான். பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். அவன் அவர்களிடத்தில் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து, அவர்களை நோக்கிப்பார்த்தான். அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் இருப்பதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது. அவன் குதித்து, எழுந்து, நின்று, நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைப் புகழ்ந்துகொண்டு, அவர்களோடு தேவாலயத்திற்குள் போனான். அவன் நடக்கிறதையும், தேவனைப் புகழ்கிறதையும், மக்களெல்லோரும் கண்டு: ஆலயத்தின் அலங்கார வாசலருகில் பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்கு நடந்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள். சுகமாக்கப்பட்ட சப்பாணி பேதுரு மற்றும் யோவானோடு இருக்கும்போது, மக்களெல்லோரும் திகைத்து, சாலொமோன் மண்டபம் என்னும் மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.

பேதுரு மக்களைப் பார்த்து: இஸ்ரவேலர்களே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்களுடைய சுயசக்தியினாலாவது, சுயபக்தியினாலாவது, இவனை நடக்க செய்தோமென்று நீங்கள் எங்களை உற்றுப்பார்க்கிறதென்ன?

அவருடைய நாமத்தில் வைத்திருக்கும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே உங்களுக்கு அறிமுகமான இவனை பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய நம்பிக்கை உங்களெல்லோருக்கும் முன்பாக, இவனுடைய முழுசரீரத்திற்கும் இந்த சுகத்தைக் கொடுத்தது.

பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள். சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது. அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: இந்த மனிதர்களை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.

இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும்படிச் செய்து, நோயாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர்கள் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடு சொல்லும்படி அவர்களுக்கு உதவி செய்தருளும்” என்றார்கள். அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள்.

அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள். தன் மனைவியின் சம்மதத்தோடு அவன் விற்ற பணத்திலே ஒரு பங்கை மறைத்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான். பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றப்பின்பும் அதின் கிரயப்பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணம் கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் இல்லை, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே, கீழே விழுந்து மரித்துப்போனான். இவைகளைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டானது. வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள். ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவிற்குத்தான் விற்றீர்களா என்று எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவிற்குத்தான் என்றாள். பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் கணவனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான். உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து மரித்துப்போனாள். வாலிபர்கள் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய கணவனருகே அடக்கம்பண்ணினார்கள். சபையாரெல்லோருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற எல்லோருக்கும், மிகுந்த பயமுண்டானது.

அப்போஸ்தலர்களுடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் மக்களுக்குள்ளே செய்யப்பட்டது. சபையாரெல்லோரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் கூடியிருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. ஆனாலும் மக்கள் அவர்களைப் புகழ்ந்தார்கள். அநேக ஆண்களும், பெண்களும் விசுவாசமுள்ளவர்களாகி கர்த்தரிடத்தில் அதிகமதிகமாகச் சேர்க்கப்பட்டார்கள். சுகவீனமானவர்களைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகும்போது அவனுடைய நிழலாவது அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் சுகவீனமானவர்களையும் அசுத்தஆவிகளால் துன்புறுத்தப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லோரும் குணமாக்கப்பட்டார்கள்.

கர்த்தருடைய தூதன் இரவிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து: நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவனுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள் என்றான். அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்து போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தினரையும் இஸ்ரவேல் கோத்திரத்தின் மூப்பர்களெல்லோரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களை அழைத்துவரும்படி சிறைச்சாலைக்கு அதிகாரிகளை அனுப்பினார்கள். அதிகாரிகள் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து: சிறைச்சாலை மிகுந்த பத்திரமாகப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர்கள் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள். இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற படைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இது என்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள். அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனிதர்கள் தேவாலயத்திலே நின்று மக்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.

ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாக மக்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை உற்றுப்பார்த்து, அவனுடைய முகம் தேவதூதனுடைய முகத்தைப்போல இருப்பதைக் கண்டார்கள்.

நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.

இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

பிலிப்பு செய்த அதிசயங்களை மக்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டு கவனித்தார்கள். அநேகருக்குள் இருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தமிட்டு அவர்களைவிட்டுப்போனது. அநேக கைகால்கள் செயலிலந்தவர்களும், நடக்க இயலாதவர்களும் சுகமாக்கப்பட்டார்கள். அந்தப் பட்டணத்திலே மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.

அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைச் சேர்ந்துகொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் பார்த்து பிரமித்தான்.

அவர்கள் தண்ணீரைவிட்டுக் கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அதற்குப்பின்பு அவனைக் காணாமல், சந்தோஷத்தோடு தன் வழியே போனான். பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அந்த இடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவிற்கு வருகிறவரையில் அனைத்து பட்டணங்களிலும் நற்செய்தியைப் போதித்துக்கொண்டுவந்தான்.

அவன் பயணமாகப்போய், தமஸ்குவிற்கு அருகில் வந்தபோது, திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது:” சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்றார். அவன் நடுங்கித் திகைத்து: “ஆண்டவரே, நான் என்ன செய்ய பிரியமாக இருக்கிறீர்” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ எழுந்து, பட்டணத்திற்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார். அவனுடனேகூடப் பயணம்பண்ணின மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் செய்வதறியாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவிற்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். அவன் மூன்று நாட்கள் பார்வையில்லாதவனாக ஆகாரம் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.

அப்பொழுது அனனியா போய், வீட்டிற்குள்ளே பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: “சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார்” என்றான். உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.

அங்கே எட்டு வருடங்களாக கட்டிலின்மேல் கை, கால்கள் செயலிழந்து கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனிதனைக் கண்டான். பேதுரு அவனைப் பார்த்து: “ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள்” என்றான். உடனே அவன் எழுந்திருந்தான். லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லோரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.

அந்த நாட்களிலே அவள் வியாதிப்பட்டு மரித்துப்போனாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். யோப்பா பட்டணம் லித்தா ஊருக்கு அருகிலிருந்தபடியினாலே, பேதுரு அந்த இடத்தில் இருக்கிறானென்று சீடர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டும் என்று சொல்லும்படி இரண்டு மனிதர்களை அவனிடத்திற்கு அனுப்பினார்கள். பேதுரு எழுந்து, அவர்களோடு போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். அப்பொழுது விதவைகளெல்லோரும் அழுது, தொற்காள் தங்களோடு இருந்தபோது செய்திருந்த அங்கிகளையும், மற்ற ஆடைகளையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். பேதுரு எல்லோரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, சடலத்தின் பக்கமாக திரும்பி: “தபீத்தாளே, எழுந்திரு” என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும், விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்குமுன் நிறுத்தினான். இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார்.

அவனைப் பிடித்து சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப்பின்பு மக்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாம் என்று நினைத்து, அவனைக் காவல்காக்கும்படி நான்கு போர்வீரர்கள் அடங்கிய நான்கு படைக் குழுவினரிடம் ஒப்படைத்தான். அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காவலில் இருக்கும்போது, சபை மக்கள் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடு ஜெபம்பண்ணினார்கள். ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தினநாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு போர்வீரர்கள் நடுவே தூங்கிக் கொண்டிருந்தான்; காவற்காரர்களும் கதவிற்கு முன்னே இருந்து சிறைச்சாலையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாக எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து கழன்று கீழே விழுந்தது. தூதன் அவனை நோக்கி: உன் ஆடையையும் காலணிகளையும் அணிந்துகொள் என்றான். அவன் அப்படியே செய்தான். தூதன் மறுபடியும் அவனை நோக்கி: உன் மேலாடையைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான். அப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்னேசென்று தூதனால் செய்யப்பட்டது உண்மையென்று தெரியாமல், தான் ஒரு தரிசனம் பார்ப்பதாக நினைத்தான். அவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் காவல்களைக் கடந்து, நகரத்திற்குப்போகிற இரும்புக் கதவின் அருகே வந்தபோது அது தானாக அவர்களுக்குத் திறந்தது; அதன்வழியாக அவர்கள் புறப்பட்டு ஒரு வீதிவழியாக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனைவிட்டுப் போய்விட்டான். பேதுருவிற்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதமக்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படி கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது உண்மையாக புரிந்துகொண்டேன் என்றான்.

மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பெயரையுடைய எலிமா என்பவன், அதிபதியை இயேசுவை விசுவாசிக்காமல் திசைதிரும்பும்படி செய்ய, அவர்களோடு எதிர்த்து நின்றான். அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாக அவனை உற்றுப்பார்த்து: எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதை நிறுத்தமாட்டாயோ? இதோ, இப்பொழுதே கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, கொஞ்சகாலம் நீ சூரியனைப் பார்க்காமல் குருடனாக இருப்பாய் என்றான். உடனே அவன் தன் கண்பார்வையை இழந்தான்; அவன் தடுமாறி, தனக்கு கை கொடுக்கிறவர்களைத் தேடினான். அப்பொழுது அதிபதி நடந்தவைகளைப் பார்த்து, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.

அவர்கள் அங்கே அநேகநாட்கள் வாழ்ந்து கர்த்த்தரை முன்னிட்டுத் தைரியம் உள்ளவர்களாகப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்கு சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி தயவுபண்ணினார்.

லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு, நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.

அப்பொழுது கூடிவந்திருந்த எல்லோரும் அமைதியாக இருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் யூதரல்லாதோர்களுக்குள்ளே செய்த அற்புதங்கள் அடையாளங்கள் யாவையும் விளக்கிச் சொல்லக் கேட்டார்கள்.

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது. சிறைச்சாலைக்காரன் தூக்கம் தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கட்டப்பட்டு இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று நினைத்து, வாளை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப்போனான்.

பவுலின் கைகளினாலே தேவன் அரிய பெரிய அற்புதங்களைச் செய்துகாண்பித்தார். அவனுடைய சரீரத்திலிருந்து துண்டுகளையும், கைக்குட்டைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்கள்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.

அப்பொழுது ஐத்திகு என்னும் பெயருடைய ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பிரசங்கம்பண்ணிக்கொண்டியிருந்ததால், அவன்‌ தூக்க மயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து, தூக்கியெடுத்தபோது மரித்திருந்தான்‌. உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிரோடு இருக்கிறான் என்றான். பின்பு மேலே ஏறிப்போய், அப்பம்பிட்டு புசித்து, விடியற்காலைவரை பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்து மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.

பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும்போது, ஒரு விரியன்பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, தங்களுடைய எண்ணத்தை மாற்றி, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள்.

தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான். புபிலியுவினுடைய தகப்பன் காய்ச்சலாலும் இரத்த பேதியினாலும் வியாதிப்பட்டு கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப்போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கரங்களை வைத்து, அவனைக் குணமாக்கினான். இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள்.

எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும், தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும்.

இப்படி எருசலேமிலிருந்து ஆரம்பித்து, இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியைப் பூரணமாகப் பிரசங்கம் செய்திருக்கிறேன்.

யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார். ஆனாலும் யூதர்களானாலும் கிரேக்கர்களானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார்.

சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடம் இருந்தேன். உங்களுடைய விசுவாசம் மனிதர்களுடைய ஞானத்தில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவராலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்தது.

ஒவ்வொருவனுக்கும் அருளப்பட்ட ஆவியானவரின் வரங்கள் அனைவருடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒருவனுக்கு ஆவியானவராலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல மொழிகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு மொழிகளை வியாக்கியானம் செய்தலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது விருப்பத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், உதவி செய்யும் ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித அந்நிய மொழிகளையும் ஏற்படுத்தினார். எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் தீர்க்கதரிசிகளா? எல்லோரும் போதகர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லோரும் குணமாக்கும் வரங்களை உடையவர்களா? எல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் வியாக்கியானம் செய்கிறார்களா? இப்படியிருக்க, முக்கியமான வரங்களை விரும்புங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

நான் மனிதர்களுடைய மொழிகளையும் தூதர்களுடைய மொழிகளையும் பேசினாலும், எனக்கு அன்பு இல்லையென்றால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாக இருந்து, எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாக விசுவாசமும் உள்ளவனாக இருந்தாலும், அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை.

அன்பை விரும்புங்கள்; ஆவியானவருக்குரிய வரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாகத் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள். ஏனென்றால், அந்நிய மொழியில் பேசுகிறவன், ஆவியானவராலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாமலிருக்கிறபடியினாலே, அவன் மனிதர்களிடம் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ மனிதர்களுக்கு பக்திவளர்ச்சியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான். அந்நிய மொழியில் பேசுகிறவன் தனக்கே பக்திவளர்ச்சி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவளர்ச்சி உண்டாகப்பேசுகிறான். நீங்களெல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆனாலும், அந்நிய மொழிகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் அவனைவிட மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாக விரும்புகிறேன். மேலும், சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை சொல்லுகிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நிய மொழிகளில் பேசினால் என்னாலே உங்களுக்கு பலன் என்ன?

அப்படியிருக்க, அந்நியமொழிகள் விசுவாசிகளுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது; தீர்க்கதரிசனமோ விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது. ஆகவே, சபையார் எல்லோரும் ஏகமாகக் கூடிவந்து, எல்லோரும் அந்நிய மொழிகளிலே பேசிக்கொள்ளும்போது, படிப்பறியாதவர்களாவது, விசுவாசம் இல்லாதவர்களாவது உள்ளே நுழைந்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்களல்லவா? எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, விசுவாசம் இல்லாத ஒருவன் அல்லது படிப்பறியாதவன் ஒருவன் உள்ளே நுழைந்தால், அவனுடைய பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டும், சொல்லப்பட்ட எல்லாவற்றாலும் நியாயந்தீர்க்கப்பட்டும் இருப்பான். அவனுடைய இருதயத்தின் இரகசியங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புறவிழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாக உங்களுக்குள்ளே இருக்கிறார் என்று அறிக்கையிடுவான்.

இப்படியிருக்க, சகோதரர்களே, தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புங்கள், அந்நிய மொழிகளைப் பேசுகிறதற்கும் தடைசெய்யாமலிருங்கள்.

அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடத்தப்பட்டதே.

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாக நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படி, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

அற்புதங்களினாலும், அதிசயங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய விருப்பத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன்தாமே சாட்சி கொடுத்ததுமாக இருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலை இல்லாமல் இருப்போம் என்றால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது.

விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.

ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான்.

உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் செய்யவேண்டும். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் குணமடையும்படிக்கு, உங்களுடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்செய்யுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கிறது.

எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனிதனாகயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாக ஜெபம்செய்தான், அப்பொழுது மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் பூமியின்மேல் மழைபெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்செய்தான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கனியைத் தந்தது.

அப்பொழுது என்னோடு பேசின அந்த சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபொழுது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் நடுவிலே, பாதம்வரை நீளமான அங்கி அணிந்து, மார்பில் பொற்கச்சை கட்டியிருந்த மனிதகுமாரனைப்போல ஒருவரைப் பார்த்தேன். அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது; அவருடைய பாதங்கள் உலையிலே காய்ந்த பிரகாசமான வெண்கலம்போல இருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போல இருந்தது. தமது வலது கையிலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயில் இருந்து இரண்டு பக்கமும் கூர்மையான வாள் புறப்பட்டு வந்தது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது.

பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

Tamil - தமிழ் - TA

TAMIRV'19 - Tamil Indian Revised Version - 2019

This Bible text is from Tamil Indian Revised Version IRV 2019
https://open.bible/bibles/tamil-bridge-text-bible/
provided by: Bridge Connectivity Solutions Pvt Ltd, available by Creative Commons CC-BY-SA-4.0,
and this new compilation is shared as www.creativecommons.org/licenses/by-sa/4.0.
Languages are made available to you by www.ipedge.net