01 – பரிசுத்த வேதாகமம்

இவை சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள்.
மனிதர்களின் வார்த்தைகளில் நமக்கு அக்கறை இல்லை.
கடவுளை நேசிக்கும் எவருக்கும்... இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: பரிசுத்த வேதாகமம்.

முதல் 3 மிக முக்கியமான வசனங்கள்

வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,

வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

நியமன வரிசையில் ஒவ்வொரு வசனமும் - 343 பத்திகள்

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது.

மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு,

யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்; என்பது யெகோவா அவருடைய நாமம்.

மோசே வந்து, யெகோவாவுடைய வார்த்தைகள் யாவையும் நீதி சட்டங்கள் யாவையும் மக்களுக்கு அறிவித்தான்; “அப்பொழுது மக்கள் எல்லோரும் ஒரேசத்தமாக: யெகோவா அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம்” என்று மறுமொழி சொன்னார்கள். மோசே யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலையில் எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படி பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா? அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா?

நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும்படி நுழையும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய யெகோவா எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன். ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; மக்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாக இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய மக்கள் கூட்டமே ஞானமும் விவேகமும் உள்ள மக்கள் என்பார்கள்.

உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறக்காமலிருக்கவும், நீ உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவைகள் உன் இருதயத்தைவிட்டு நீங்காமலிருக்கவும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவை கவனமாகக் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிப்பாயாக.

உன் தேவனாகிய யெகோவா சுட்டெரிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.

உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய கவனமாக இருங்கள்; வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்பீர்களாக.

நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருப்பதாக. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குத் தெளிவாகப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, அவைகளை உன் கைகளிலே அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாக இருப்பதாக. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார்.

ஆகையால், உன் தேவனாகிய யெகோவாவுடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.

பின்னும் யெகோவா என்னை நோக்கி: “இந்த மக்களைப் பார்த்தேன்; அவர்கள் பிடிவாத குணமுள்ள மக்கள்.

“இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புசெலுத்தி, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய யெகோவாவைப் பணிந்துகொண்டு, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற யெகோவாவுடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாவதற்கு கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.

“நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய பிரமாணங்களையும், கட்டளைகளையும், நியாயங்களையும், கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.

ஆகையால் யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த தேசத்தில் உங்களுடைய நாட்களும், உங்களுடைய பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும்வரை நீடித்திருப்பதற்கு, நீங்கள் என் வார்த்தைகளை உங்களுடைய இருதயத்திலும் உங்களுடைய ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக.

“இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், எங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.

“நான் உனக்குக் கொடுக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனுடன் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

“உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாகச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேட்காதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்துகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படி உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.

இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்வதற்கு,

“இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்ய, இன்று உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் கைக்கொண்டு நடக்கக்கடவாய்.

இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடக்காதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.

“இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருப்பதற்கு, அவருடைய சத்தத்திற்கு உண்மையாகச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.

“இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவருடைய சத்தத்தை கேட்காவிட்டால், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.

“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்வதற்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் மகிழ்ச்சியாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாக மீண்டும் மகிழ்ச்சியாயிருப்பார்.

நான் ஜீவனையும், மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன்பாக வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சியாக வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைப்பதற்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,

ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்,

“நீங்கள் இந்த நியாயப்பிரமாண புத்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அருகிலே வையுங்கள்; அங்கே அது உனக்கு எதிரான சாட்சியாயிருக்கும். நான் உன் கலக குணத்தையும் உன் பிடிவாதத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கும்போது, யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்செய்தீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாகக் கலகம்செய்வீர்கள்!

இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாக இருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கச்செய்வாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

நீங்கள் எப்படியும் யெகோவாவுக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் தொழுதுகொள்ளக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.

அதற்குச் சாமுவேல்: “யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைவிட, சர்வாங்க தகனங்களும் பலிகளும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைவிட கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் கொழுப்பைவிட செவிகொடுத்தலும் உத்தமம். கலகம்செய்தல் பில்லிசூனிய பாவத்திற்கும், பிடிவாதம்செய்தல் அவபக்திக்கும் விக்கிரக ஆராதனைக்கும் சமமாக இருக்கிறது; நீர் யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்ததாலே, அவர் உம்மை ராஜாவாக இல்லாதபடி புறக்கணித்துத் தள்ளினார்” என்றான். அப் பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதால் பாவம் செய்தேன்; நான் மக்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.

யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை. அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல்,

அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய யெகோவாமேல் விசுவாசிக்காமலிருந்த கடினக் கழுத்துள்ள தங்கள் முன்னோர்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,

கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும், இஸ்ரவேலிலும், யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு யெகோவாவுடைய வார்த்தையை நம்முடைய முன்னோர்கள் கைக்கொள்ளாமல் போனதால், நம்மேல் மூண்ட யெகோவாவுடைய கடுங்கோபம் பெரியது என்றான்.

ஆனாலும் அவர்கள் தேவனுடைய பிரதிநிதிகளைக் கேலிசெய்து, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை அவமதித்ததால், யெகோவாவுடைய கடுங்கோபம் அவருடைய மக்களின்மேல் வந்தது; உதவி இல்லாமல் போனது.

யெகோவாவுடைய வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.

அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தின் காரணமாக இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற அனைவரும் என்னுடன் கூடிக்கொண்டார்கள்; நானோ மாலை பலி செலுத்தப்படும்வரை திகைத்தவனாக உட்கார்ந்துகொண்டிருந்தேன்.

அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்பவில்லை;

அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன்.

அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக: “அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்குப் பதில் சொல் நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதைச் சொல்.

யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.

யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான சுத்தசொற்களாக இருக்கின்றன. யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி, எங்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.

ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை.

தேவனுடைய வழி உத்தமமானது; யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.

யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன. அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.

உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்.

யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.

உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய யெகோவாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் அருகில் சேராத புத்தியில்லாத குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.

பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.

யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; யெகோவாவுக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.

அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது; என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என்னுடைய உதடுகளை மூடமாட்டேன், யெகோவாவே, நீர் அதை அறிவீர். உம்முடைய நீதியை நான் என்னுடைய இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவிக்காதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.

தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும்.

ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரபலப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.

அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும்,

என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை. ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள். ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்! நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி, என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன். அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.

யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என்னுடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.

தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர்.

அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை.

காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள். அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள்.

அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள்.

யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான்.

மனிதனை நம்புவதைவிட, யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.

ஆலெப். யெகோவாவுடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள்.

நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.

வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே.

என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும்.

நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.

உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன்.

உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என்னுடைய கண்களைத் திறந்தருளும்.

உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது.

உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.

பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.

மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.

எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.

நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.

நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன்.

உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது.

உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதிக்காமல் விரைந்தேன்.

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம். யோட்.

யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! நாள் முழுவதும் அது என்னுடைய தியானம்.

உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் இனிமையானதாக இருக்கும்.

உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். நூன்.

உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது.

முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன். சாமெக்.

பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.

உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது.

நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள்.

உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. த்சாடே.

என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது.

நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.

உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.

உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும்.

உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். ஷீன்.

அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.

மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன்.

யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.

உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்; உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.

பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

அவர்கள் அறிவை வெறுத்தார்கள், யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள். ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்; தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.

நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால், அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி, அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.

உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,

ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு. அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாக இரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய். அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.

உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும். உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும். வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.

கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி.

தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன்.

பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.

யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.

யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை

மூடனுடைய காதுகள் கேட்கப் பேசாதே; அவன் உன்னுடைய வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை செய்வான்.

வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர். அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.

காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே.

இதினிமித்தம் நெருப்புத்தழல் வைக்கோலை சுட்டெரிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்களுடைய வேர் வாடி, அவர்களுடைய துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டை செய்தார்களே.

அப்பொழுது அவர்: நீ போய், இந்த மக்களை நோக்கி, நீங்கள் காதால் கேட்டும் உணராமலும், கண்களால் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

வேதத்தையும் சாட்சி புத்தகத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமிருக்காது.

இப்பொழுது நீ போய், இது பிற்காலத்திற்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புத்தகத்தில் வரை. இவர்கள் கலகமுள்ள மக்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், யெகோவாவுடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத மக்களாயிருக்கிறார்கள். இவர்கள் தரிசனக்காரர்களை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரர்களை நோக்கி: யதார்த்தமாக எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு மென்மையான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் வெளிப்படுத்துங்கள் என்றும், நீங்கள் வழியை விட்டு, பாதையிலிருந்து விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓய்ந்திருங்கள் என்றும் சொல்கிறார்கள். நீங்கள் இந்த வார்த்தையை வெறுத்து, இடுக்கமும் தாறுமாறும் செய்கிறதை நம்பி, அதைச் சார்ந்து கொள்கிறதினால், இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்ந்த சுவர் விழப் பிதுங்கி நிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்கிறார்.

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.

எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? யெகோவாவுடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார். பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாக என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.

நீ கூப்பிடும்போது, உன் தெய்வச்சிலைகளின் கூட்டம் உன்னைக் காப்பாற்றட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோகும்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, என் பரிசுத்த மலையிலே என்னை ஆராதிக்கிறவனாயிருப்பான்.

உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று யெகோவா சொல்கிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று யெகோவா சொல்கிறார்.

என்னுடைய கரம் இவைகளையெல்லாம் படைத்ததினால் இவைகளெல்லாம் உண்டானது என்று யெகோவா சொல்கிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.

நான் கூப்பிட்டும் மறுமொழி கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினால், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரச்செய்வேன். யெகோவாவுடைய வசனத்திற்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர்கள், யெகோவா மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாக காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.

யெகோவாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு வலிக்காது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைவிட கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள். அப்பொழுது நான்: இவர்கள் ஏழைகளாமே, இவர்கள் மதியற்றவர்கள்; யெகோவாவுடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;

பூமியே, கேள்; இந்த மக்கள் என் வார்த்தைகளைக் கேட்காமலிருந்து, என் நியாயப்பிரமாணத்தைக் கேட்காமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரச்செய்வேன்.

என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழிகளிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாவதற்காக நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன். அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்நோக்கியல்ல பின்நோக்கியே போனார்கள்.

ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, யெகோவாவுடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள், அவர்களுக்கு ஞானமேது?

நீங்கள் இதைக் கேளாமற்போனால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, யெகோவாவுடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.

உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பெயர் எனக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.

மனிதன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, யெகோவாவைவிட்டு விலகுகிற இருதயமுள்ள மனிதன் சபிக்கப்பட்டவன் என்று யெகோவா சொல்லுகிறார்.

அவர்களோ கேளாமலும், கீழ்ப்படியாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமல் உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினதினால் நான் இந்த நகரத்திற்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதைச் சுற்றியுள்ள பட்டணங்களின்மேலும் வரச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றான்.

உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமையடையச் செய்கிறார்கள்; யெகோவாவுடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

என் வார்த்தை நெருப்பைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று யெகோவா சொல்லுகிறார்.

யெகோவா உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய எல்லா ஊழியக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் கேளாமலும், கவனிக்காமலும், கீழ்ப்படியாமலும் போனீர்கள்.

நீ அவர்களை நோக்கி: நான் உங்களிடத்திற்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேட்காமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் கேட்கவும், நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தில் நீங்கள் நடப்பதற்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால், நான் இந்த ஆலயத்தைச் சீலோவாவைப் போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.

இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் செயல்களையும் ஒழுங்குபடுத்தி, உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது யெகோவா உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனம் வருந்துவார்.

மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; சொப்பனம் காணச்செய்கிற உங்கள் சொப்பனக்காரர் சொல்வதைக் கேட்காமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். அவர்கள் என் பெயரைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பவில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.

இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் மக்களுடனும் யூதா மக்களுடனும் புது உடன்படிக்கைசெய்வேன். நான் அவர்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவர கைப்பிடித்த நாளில் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று யெகோவா சொல்லுகிறார். அந்நாட்களுக்குப்பிறகு, நான் இஸ்ரவேல் மக்களுடன் செய்யப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்தில் வைத்து, அதை அவர்கள் இருதயத்தில் எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அருகில் உள்ளவனையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: யெகோவாவை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்வரை, எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

நீங்களோ, ஆண்டவருடைய வழி சரியாக இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் மக்களே, கேளுங்கள்; என்னுடைய வழி சரியாக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ சரியில்லாததாக இருக்கிறது.

அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டு இல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என்னுடைய மக்களுக்குப் போதித்து, அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

என் மக்கள் அறிவில்லாததினால் அழிகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாக இல்லாமலிருக்க நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.

அவர்கள் என்னைவிட்டு அலைந்து திரிகிறதினால் அவர்களுக்கு ஐயோ, அவர்களுக்குக் அழிவுவரும்; எனக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; நான் அவர்களை மீட்டிருந்தும், அவர்கள் எனக்கு விரோதமாகப் பொய்பேசுகிறார்கள்.

இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, தண்ணீர்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, யெகோவாவுடைய வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்சத்தை அனுப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாக விலக்கி, கேட்காதபடிக்குத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டார்கள். வேதத்தையும் சேனைகளின் யெகோவா தம்முடைய ஆவியின் மூலமாக முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேட்காதபடிக்குத் தங்கள் இருதயத்தை மிகவும் கடினமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டானது. ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேட்காமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்காமலிருந்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

அவர் மறுமொழியாக: “மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகவே, இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாவது மீறி, அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லோரையும்விட சிறியவன் எனப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான்.

இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது.

குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன். மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.

தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.

அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.

அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த மக்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாகக் கேட்டு, தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே. உங்களுடைய கண்கள் காண்கிறதினாலும், உங்களுடைய காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார்.

அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள்.

இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக; இது முதலாம் பெரிய கட்டளை. இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே. இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து: காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார்.

அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. “அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார். பின்பு அவர் அவர்களைப் பார்த்து: “இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்? விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள். அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக்கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதுமடங்கும், ஒன்று அறுபதுமடங்கும், ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்” என்றார்.

அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத்தலைவனைப் பார்த்து: பயப்படாதே, விசுவாசம் உள்ளவனாக இரு என்று சொல்லி;

நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.

பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும். தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான். மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்? எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார்.

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலே தவறான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும்.

வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள். விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசிக்காதவனோ தண்டனைக்குள்ளாவான்.

சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்கள் மூலம் கிரியைசெய்து, அவர்களால் நடந்த அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

முடிவிலே, தேவனைப்பற்றி அநேக இருதயங்களின் சிந்தனைகள் வெளிப்படும். உன் இருதயம் பட்டயத்தினால் குத்தப்பட்டதுபோல வேதனைப்படும் என்றான்.

இயேசு மறுமொழியாக: மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாக இருந்தபடியால் அவருடைய போதனையைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறதென்ன? என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக்கேட்டு, அதின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுவேன். ஆழமாகத் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்க முடியாமல்போனது; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. என் வார்த்தைகளைக் கேட்டும் அதின்படி செய்யாதவன் எவனோ, அவன் அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாக இருக்கிறான்; நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதினவுடனே அது விழுந்து முழுவதும் அழிந்துபோனது” என்றார்.

அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. “அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான். கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமட்டும் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடுக்காமல் இருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக்கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரர்களுமாக இருக்கிறார்கள் என்றார்.

பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; எனக்காகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன? என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.

வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார். பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துவிட்டு பின்னோக்கிப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் இல்லை என்றார்.

அதற்கு அவர்: அதைவிட, தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் கடைபிடிப்பவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வராதவன் எனக்குச் சீடனாக இருக்கமுடியாது.

நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் இருந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் நற்செய்தியாக அறிவிக்கப்பட்டுவருகிறது, அனைவரும் பலவந்தமாக அதில் பிரவேசிக்கிறார்கள். வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு ஒழிந்துபோவதைவிட, வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.

ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,

மோசே முதல் எல்லாத் தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.

அவர்களைப் பார்த்து: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த செய்திகள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களைப் பார்த்து:

ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.

ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது.

அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.

பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.

தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார்.

என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிக்காதபடியால் அவருடைய வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதும் இல்லை. வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாகவும், ஜீவனாகவும் இருக்கிறது.

ஆகவே, நீங்கள் உங்களுடைய பாவங்களில் மரித்துப்போவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள் என்றார்.

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா? நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான். நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தமுடியும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருந்தும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கவில்லை. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாகாததினால் செவிகொடுக்காமல் இருக்கிறீர்கள் என்றார்.

ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாக இல்லாததினால் விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப்பின் செல்லுகிறது.

தேவவசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் ஒழிந்துபோகாததாக இருக்க,

தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றட்டும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. “கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடையக் கரம் யாருக்கு வெளிப்பட்டது” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்: அவர்கள் கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான். ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். ஆனாலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடம் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்தைவிட்டு வெளியேற்றப்படாமல் இருக்க, பரிசேயர்களுக்கு பயந்து அதை அறிக்கைசெய்யாமலும் இருந்தார்கள். அவர்கள் தேவனால் வருகிற மகிமையைவிட மனிதர்களால் வருகிற மகிமையை அதிகமாக விரும்பினார்கள்.

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

நான் சுயமாகப் பேசவில்லை, நான் பேசவேண்டியது என்ன என்றும் உபதேசிக்கவேண்டியது என்ன என்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.

என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே என்னிடத்தில் அன்பாக இருக்கிறான், என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல் என் பிதா அன்பாக இருப்பார்; நானும் அவன்மேல் அன்பாக இருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் என்னில் அன்பாக இருந்தால் அவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பான், அவனில் என் பிதா அன்பாக இருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுடன் குடிகொள்ளுவோம். என்னில் அன்பாக இல்லாதவன் என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கமாட்டான். நீங்கள் கேட்கிற வார்த்தை என்னுடையதாக இல்லாமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாக இருக்கிறது.

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, எல்லா சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சொந்தமாக பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் எல்லாவற்றையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார்.

நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தான் இல்லாததுபோல அவர்களும் உலகத்தார் இல்லை; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு மறுமொழியாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்கவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும்: மனிதர்களுக்குக் கீழ்ப்படிகிறதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாக இருக்கிறது.

அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம்.

அந்தப் பட்டணத்து மக்கள் வசனத்தை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு, விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று தினமும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைவிட நற்பண்பு உடையவர்களாக இருந்தார்கள்.

சிலர் கடினப்பட்டு நம்பிக்கையற்றவர்களாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை இகழ்ந்து பேசியபோது, அவன் அவர்களைவிட்டு விலகி, சீடர்களை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய கல்விக்கூடத்திலே அநுதினமும் கலந்துரையாடிக்கொண்டிருந்தான்.

நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்திச் சொன்னதை நினைத்து விழித்திருங்கள்.

நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள். இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.

இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாக இருப்பதற்காக அழைக்கப்பட்டவனும், தேவனுடைய நற்செய்திக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், ரோமாபுரியில் உள்ள தேவனுக்குப் பிரியமானவர்களும் பரிசுத்தவான்களாவதற்காக அழைக்கப்பட்டவர்களாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது;

கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது. “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த நற்செய்தியினால் வெளிப்படுத்தப்படுகிறது. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி,

இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எல்லாவிதத்திலும் உயர்ந்ததாக இருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. சிலர் விசுவாசிக்காமற்போனாலும் என்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை ஒன்றுமில்லாமல் ஆக்குமா? அப்படியாக்காது: “நீர் உம்முடைய வசனங்களில் நீதிமானாக விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியானது” என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியவான் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

அப்படியே: “ஒருவன்கூட நீதிமான் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;

அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறோமா? அப்படி இல்லை; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படி இல்லை, புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்வதற்காக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்திற்கு நாம் மரித்தவர்களாகி, அதில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

எனவே, நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது, கட்டளையும் பரிசுத்தமாகவும் நீதியாகவும் நன்மையாகவும் இருக்கிறது.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனவே, நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும், சரீரத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் சேவை செய்கிறேன்.

எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது.

அனுப்பப்படவில்லை என்றால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைச் சொல்லி, நல்ல காரியங்களை நற்செய்தியாக அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. ஆனாலும் நற்செய்திக்கு அவர்கள் எல்லோரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும், தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும்.

தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது.

தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாவதற்காக, முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

அன்றியும் சகோதரர்களே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு எதிராகப் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருந்து, அவர்களைவிட்டு விலகவேண்டும் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து, நயமான மொழிகளாலும், இனிய பேச்சினாலும், கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள்.

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது.

அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.

அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவருக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான். ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதே முக்கியமான காரியம்.

அன்றியும், சகோதரர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாக, நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்களுடைய விசுவாசம் பயனில்லாததாக இருக்குமே.

ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புசெலுத்தாமல்போனால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கவேண்டும், கர்த்தர் வருகிறார்.

இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம். கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடத்துவதற்கு தகுதியானவன் யார்?

புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாக இல்லாமல், ஆவியானவருக்குரியதாக இருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆனால், ஆவியோ உயிர் கொடுக்கிறது. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பொறிக்கப்பட்டிருந்த மரணத்திற்கான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமையின் பிரகாசம் உண்டானதினால், இஸ்ரவேல் மக்கள் அவன் முகத்தை நேரடியாகப் பார்க்கமுடியாமல் இருந்தார்களே. மங்கிப்போகிற மகிமையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாக இருந்தால், ஆவியானவருக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாக இருக்கும்? அழிவுக்கான தீர்ப்பைக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாக இருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாக இருக்குமே.

வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாக நடக்காமலும், தேவ வசனத்தைத் திரித்துக் கூறாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்குமுன்பாக எல்லா மனிதர்களுடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமர்கள் என்று விளங்கப்பண்ணுகிறோம். எங்களுடைய நற்செய்தி மறைபொருளாக இருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாக இருக்கும். தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன்.

அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தை அணிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே.

சத்தியத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யமுடியாமல், சத்தியத்திற்கு சாதகமாகவே செய்யமுடியும்.

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான். முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.

நற்செய்தியாகிய சத்தியம் உங்களிடம் மாறாமல் நிலைத்திருப்பதற்காக, நாங்கள் ஒருமணிநேரம் கூட அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.

நியாயப்பிரமாணத்தின் செய்கைக்காரர்களாகிய எல்லோரும் சாபத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்; ஏனென்றால் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகள்‌ எல்லாவற்றையும் தொடர்ந்து செய்யாதவன்‌ எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.

மரத்திலே தொங்கவிடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் யூதரல்லாத மக்களுக்கு வருவதற்காகவும், ஆவியானவரைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்வதற்காகவும் இப்படி ஆனது.

ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைப்பற்றிச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்த சந்ததி கிறிஸ்துவே.

இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசிரியராக இருந்தது.

நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்கு எதிரியாக ஆனேனோ?

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை என்னவென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற உரிமைப்பங்கினுடைய மகிமையின் ஐசுவரியம் என்னவென்றும்;

நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல், மனிதர்களுடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவிதமான காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல்,

தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும்,

இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,

எல்லாவற்றையும் முறுமுறுப்பு இல்லாமலும் வாக்குவாதம் இல்லாமலும் செய்யுங்கள்.

அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.

உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.

கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டிய பிரகாரமாகப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,

நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,

உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிப்பட்டணத்திலே நாங்கள் பாடுகள்பட்டு நிந்தையடைந்திருந்தும், மிகுந்த போராட்டத்தோடு தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.

ஆகவே, நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனித வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனம்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனாக இருக்கிறது.

தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள தண்டனையைக் கொடுக்கும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதர்களோடும், எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்த நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராகவும், நீங்கள் எங்களுடைய சாட்சியை நம்பினபடியினாலே உங்களிடத்திலும், நம்புகிறவர்களெல்லோரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும்,

நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார். அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் எல்லாவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாகச் சத்தியத்தை நேசிக்க அவர்கள் மறுத்ததினால் அப்படி நடக்கும். ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி கடைபிடித்தால், நியாயப்பிரமாணம் நல்லது என்று அறிந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரர்களுக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தமானவர்களுக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தகப்பனையும் தாயையும் கொலை செய்கிறவர்களுக்கும், கொலைபாதகர்களுக்கும், வேசிக்கள்ளர்களுக்கும், ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கும், கொத்தடிமைகளாக விற்க மனிதர்களைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யர்களுக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிராக போதிக்கிறவர்களுக்கும், ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய மகிமையான நற்செய்தியின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது. எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார்.

தாமதிப்பேன் என்றால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய முறையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறது.

ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய்.

நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு.

உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

ஆகவே, நம்முடைய கர்த்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி.

அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாகவும் சத்திய வசனத்தை நிதானமாகப் பகுத்துப் போதிக்கிறவனாகவும் உன்னை தேவனுக்குமுன்பாக உத்தமனாக நிறுத்தும்படி விழிப்பாக இரு.

கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும்,

எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாக இருக்கிற பெண்களுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.

கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது.

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் கவனமாக திருசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் தவறென்று எடுத்துறைத்து, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவி கொடுக்காதவர்களாகி, தங்களுடைய சுயவிருப்பங்களுக்குத் தகுந்த போதகர்களைத் தங்களுக்கு மிகுதியாக சேர்த்துக்கொண்டு. சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும்.

ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்து பேசுகிறவர்களைக் கடிந்துகொள்ளவும் வல்லவனுமாக இருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளுகிறவனுமாக இருக்கவேண்டும்.

இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல்,

நீயோ ஆரோக்கியமான உபதேசத்திற்குரியவைகளைப் போதிக்கவேண்டும்.

எனவே, நாம் கேட்டவைகளைவிட்டு விலகாமல் இருக்க, அவைகளை அதிக கவனமாகக் கவனிக்கவேண்டும். ஏனென்றால், தேவதூதர்கள் மூலமாகச் சொல்லப்பட்ட வசனத்திற்கு எதிரான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலாவது கர்த்தர் மூலமாக அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடம் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,

எனவே, பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், வனாந்திரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள். அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருடகாலங்கள் என் செய்கைகளைப் பார்த்தார்கள். எனவே, நான் அந்த வம்சத்தாரை வெறுத்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், என்னுடைய வழிகளைத் தெரியாதவர்களென்றும் சொல்லி; என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். சகோதரர்களே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் யாருக்கும் இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

ஏனென்றால், நற்செய்தி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசம் இல்லாமல் கேட்டதினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவில்லை. விசுவாசித்த நாமோ அந்த இளைப்பாறுதலில் நுழைகிறோம்; விசுவாசியாதவர்களைக் குறித்து தேவன்‌: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். அவருடைய செயல்கள் உலகம் தோன்றிய காலத்திலேயே முடிந்திருந்தும் இப்படிச் சொன்னார்.

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

ஏனென்றால், ஒருமுறை பிரகாசிக்கப்பட்டும், பரலோக பரிசை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறதினால், மனந்திரும்புவதற்காக அவர்களை மீண்டும் புதுப்பிக்கிறது முடியாதகாரியம்.

அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடு செய்யும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள்.

அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய கட்டளைகளை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை உரைத்தப்பின்பு,

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல், நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும். மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று நினைத்து, கிருபையின் ஆவியை அவமதிக்கிறவன் எவ்வளவு கொடிய தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.

விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.

பேசுகிறவருக்கு நீங்கள் கவனிக்கமாட்டோம் என்று விலகாமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், பூமியிலே பேசினவருக்கு கவனிக்கமாட்டோம் என்று விலகினவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளாமல் இருக்க, பரலோகத்தில் இருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்?

நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே.

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

ஆகவே, நீங்கள் எல்லாவித பாவமான அசுத்தங்களையும் கொடிய தீயகுணத்தையும் அகற்றிவிட்டு, உங்களுடைய உள்ளத்தில் நாட்டப்பட்டதாகவும், உங்களுடைய ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும் இருக்கிற திருவசனத்தைச் சாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள். ஏனென்றால், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாக இருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அந்த இடத்தைவிட்டுப் போனவுடனே, தன் சாயல் என்னவென்பதை மறந்துவிடுவான்.

விபசாரக்காரர்களே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்கவிரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். நம்மில் வாசமாக இருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாகச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள். நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும். கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்; அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. மனிதர்கள் எல்லோரும் புல்லைப்போலவும், மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.

எல்லாத் தீயகுணங்களையும், எல்லாவிதமான கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், எல்லாவிதமான புறம்கூறுதலையும் ஒழித்துவிட்டு,

ஆகவே, விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையுயர்ந்தது; கீழ்ப்படியாமல் இருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுகிறதற்கான கல்லும், விழுகிறதற்கான கன்மலையும் ஆனது;” அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்து இடறுகிறார்கள்; அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?

அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம். அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும். வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும். தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

கள்ளத்தீர்க்கதரிசிகளும் மக்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் அழிவிற்குரிய வேதப்புரட்டுகளைத் தந்திரமாக நுழையப்பண்ணி, தங்களை விலைக்கொடுத்து வாங்கின ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு வேகமான அழிவை வரவழைத்துக்கொள்வார்கள். அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும். பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது.

எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும் புரட்டுகிறார்கள். ஆகவே, பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் தெரிந்திருக்கிறதினால், அக்கிரமக்காரர்களுடைய வஞ்சகத்தினாலே நீங்கள் இழுக்கப்பட்டு உங்களுடைய உறுதியில் இருந்து விலகி விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருந்து,

அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடிக்கிறவர்களாக இருப்போமானால், அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யனாக இருக்கிறான், அவனுக்குள் சத்தியம் இல்லை. அவருடைய வசனத்தைக் கடைபிடிக்கிறவனிடத்தில் தேவ அன்பு உண்மையாகவே பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள்.

நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாகாதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி எதுவென்றும் ஏமாற்றும் ஆவி எதுவென்றும் அறிந்திருக்கிறோம்.

நாம் தேவனிடத்தில் அன்புசெலுத்தி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்பு செலுத்துகிறோம் என்று அறிந்துகொள்ளுகிறோம்.

தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே பெற்றிருக்கிறான்; தேவனை விசுவாசிக்காதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசிக்காததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.

நாம் அவருடைய கட்டளைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கட்டளை இதுவே.

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்காமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவன் இல்லை, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான்.

நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.

தமது வலது கையிலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயில் இருந்து இரண்டு பக்கமும் கூர்மையான வாள் புறப்பட்டு வந்தது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது.

நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்;

நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன்.

இப்படி நீ குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கிறதினால் உன்னை என் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன். நீ பாக்கியமில்லாதவனாகவும், பரிதாபப்படத்தக்கவனாகவும், தரித்திரனும், பார்வை இல்லாதவனாகவும், நிர்வாணியாகவும் இருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவான் என்றும், பொருளாதார வசதிபடைத்தவன் என்றும், எனக்கு ஒரு குறையும் இல்லை என்றும் சொல்லுகிறதினால்;

அப்பொழுது இராட்சசப் பாம்பு பெண்ணின்மேல் கோபப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய வம்சத்தின் மற்ற பிள்ளைகளோடு யுத்தம்பண்ணப் போனது.

பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, அதிக சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது; வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரைத் தொழுதுகொள்ளுங்கள் என்று சொன்னான்.

கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.

அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய தலையின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு பெயரும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்; அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே.

அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார்.

மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.

இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற அனைவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாவது எடுத்துப்போட்டால், ஜீவபுத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

Tamil - தமிழ் - TA

TAMIRV'19 - Tamil Indian Revised Version - 2019

This Bible text is from Tamil Indian Revised Version IRV 2019
https://open.bible/bibles/tamil-bridge-text-bible/
provided by: Bridge Connectivity Solutions Pvt Ltd, available by Creative Commons CC-BY-SA-4.0,
and this new compilation is shared as www.creativecommons.org/licenses/by-sa/4.0.
Languages are made available to you by www.ipedge.net